ஆந்திரா மீது ’அர்னாப்’ புயல் ‘அட்டாக்’ ஆரம்பம்.. அதிகாலை 2 மணிக்கு கரையை கடக்கிறது!

Published On:

| By Mathi

Andhra Arnab

ஆந்திர மாநிலத்தை அர்னாப் அதிதீவிர புயல் தாக்கத் தொடங்கிவிட்டது. அர்னாப் புயலின் முதல் பகுதியானது ஆந்திரா நிலப்பரப்புக்குள் நுழைந்துவிட்ட நிலையில், அக்டோபர் 28-ந் தேதி அதிகாலை 2 மணி முதல் 4 மணிக்குள் புயல் கரையைக் கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

வங்கக்கடலில் உருவான அர்னாப் புயல் ஆந்திரக் கடற்கரையை நோக்கி வேகமாக நகர்ந்து வருகிறது. தற்போதைய நிலவரப்படி, கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 18 கி.மீ. வேகத்தில் மேற்கு – வடமேற்கு திசையில் புயல் நகர்ந்துள்ளது.

ADVERTISEMENT

தற்போது காக்கிநாடாவிலிருந்து தென்கிழக்கே 90 கி.மீ., விசாகப்பட்டினத்திலிருந்து தெற்கு – தென்மேற்கே 170 கி.மீ., மச்சிலிப்பட்டினத்திலிருந்து கிழக்கு – வடகிழக்கே 170 கி.மீ. தொலைவில் அர்னாப் புயல் நிலைகொண்டுள்ளது.

ராட்சத அலைகள் தாக்குதல்

அர்னாப் புயல் தாக்க தொடங்கிவிட்ட நிலையில் ஆந்திராவின் கடலோரப் பகுதிகளில் கடல் சீற்றம் அதிகரித்துள்ளது. காக்கிநாடா மாவட்டம் உப்பாடா கடற்கரையில் ராட்சத அலைகள் தடுப்புக் கற்களைத் தாண்டி சாலைக்குள் புகுந்துள்ளன. விசாகப்பட்டினம் அருகே பீமிலி கடற்கரையிலும் கடல் சீற்றம் அதிகரித்துள்ளது.

ADVERTISEMENT

காக்கிநாடா, ஏனாம் கடற்கரைகளில் புயல் கரையைக் கடக்கும்போது 1 முதல் 2 மீட்டர் வரை புயல் அலை எழக் கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. இதனால் தாழ்வான கடலோரப் பகுதிகளில் கடல் நீர் புகும் அபாயம் உள்ளது.

5 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்

ஆந்திராவின் காக்கிநாடா, கோனசீமா, கிழக்கு கோதாவரி, மேற்கு கோதாவரி, ஏலூரு ஆகிய 5 மாவட்டங்களில் அதீத கனமழை பெய்யக்கூடும் என ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ஸ்ரீகாகுளம், விஜயநகரம், விசாகப்பட்டினம், பாபட்லா, குண்டூர், கிருஷ்ணா உள்ளிட்ட மாவட்டங்களுக்கும் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

புயலின் தாக்கத்தால் கடலோர மாவட்டங்களில் பலத்த காற்று வீசத் தொடங்கியுள்ளதாக ஆந்திர மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.

மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்றும், கடலோரப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

53 ரயில்கள் ரத்து.. நிவாரண முகாம்கள் தயார்

அர்னாப் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 53 ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. காக்கிநாடா உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களைப் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றுவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. காக்கிநாடாவில் 101 நிவாரண மையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

அதிகாலை 2 முதல் 4 மணிக்குள் கரையைக் கடக்கும்

அர்னாப் புயலின் முதல் பகுதி ஆந்திர நிலப்பரப்புக்குள் நுழைந்துள்ளது. இதனால் புயலின் தாக்கம் கரையைக் கடப்பதற்கு முன்பே தொடங்கியுள்ளது.

அடுத்த சில மணி நேரங்களில் மேற்கு – வடமேற்கு திசையிலும், பின்னர் வடமேற்கு திசையிலும் நகரும் புயல், பாபட்லா – விசாகப்பட்டினம் இடையே ஏனாமுக்குத் தெற்கே கரையைக் கடக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.

அப்போது மணிக்கு 125 முதல் 135 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். அதிகபட்சமாக மணிக்கு 150 கி.மீ. வேகத்தில் காற்று வீச வாய்ப்புள்ளது.

முன்னதாக நாளை முற்பகலில் புயல் கரையைக் கடக்கும் எனக் கணிக்கப்பட்டிருந்தது. ஆனால், அக்டோபர் 28-ந் தேதி அதிகாலை 2 மணி முதல் 4 மணிக்குள் அர்னாப் அதிதீவிர புயல் ஆந்திராவின் கடற்கரையைக் கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Photo of author
Mathi

மா.ச.மதிவாணன் (Mathivanan Maran- Mathi) 30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share