ஆட்டோ ஓட்டுநர்களுக்கு தீபாவளி பரிசு அறிவித்த விஜய்.. 13 ஆண்டுகளுக்குப் பின் கட்டணம் ‘டபுளாக’ உயர்வு!

Published On:

| By Mathi

Auto Fare-Vijay Govt

தமிழகத்தில் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு தீபாவளி பரிசாக கட்டண உயர்வை அறிவித்துள்ளது முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசு. 13 ஆண்டுகளுக்குப் பிறகு ஆட்டோ கட்டணம் டபுள் மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. இதன்படி, ஆட்டோவில் முதல் 1.8 கி.மீ. பயணம் செய்ய ரூ.50 கட்டணம் செலுத்த வேண்டும்.

தமிழகத்தில் சாதாரண அரசுப் பேருந்துகளில் பெண்களுக்கு ஏற்கெனவே இலவசப் பயணம் வழங்கப்பட்டு வந்தது. இந்தச் சலுகையை எக்ஸ்பிரஸ், எல்.எஸ்.எஸ்., டீலக்ஸ் உள்ளிட்ட கூடுதல் அரசுப் பேருந்துகளுக்கும் விரிவுபடுத்தி, ‘வெற்றிப் பயணம்’ என்ற திட்டத்தை முதல்வர் விஜய் அக்டோபர் 2-ந் தேதி தொடங்கி வைத்தார். இந்த அறிவிப்புக்கு ஆட்டோ ஓட்டுநர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர்.

ADVERTISEMENT

பெண்கள் இலவசமாகப் பேருந்துகளில் பயணம் செய்தால் ஆட்டோக்களில் பயணம் செய்பவர்களின் எண்ணிக்கை குறையும்; இதனால் தங்களது வருமானம் பாதிக்கப்படும் என ஆட்டோ ஓட்டுநர்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர்.

இதனிடையே, பெட்ரோல், டீசல் விலை உயர்வு, வாகனப் பராமரிப்புச் செலவு அதிகரிப்பு ஆகியவற்றைக் குறிப்பிட்டு ஆட்டோ கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்றும் ஓட்டுநர் சங்கங்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தன.

ADVERTISEMENT

இந்த நிலையில், ஆட்டோ கட்டணத்தை உயர்த்தி தமிழக அரசு இன்று (அக்.27) அரசிதழில் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

13 ஆண்டுகளுக்குப் பின் டபுள் கட்டணம்

தமிழகத்தில் கடந்த 2013-ஆம் ஆண்டு ஆட்டோ கட்டணம் மாற்றியமைக்கப்பட்டது. அப்போது முதல் 1.8 கி.மீ. தூரத்துக்கு ரூ.25 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டிருந்தது. அதன் பின்னர் ஒவ்வொரு கி.மீ.க்கும் ரூ.12 வசூலிக்கப்பட்டது.

ADVERTISEMENT

தற்போது 13 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தக் கட்டணம் இரட்டிப்பாக உயர்த்தப்பட்டுள்ளது.

முதல் 1.8 கி.மீ. தூரத்துக்கான கட்டணம் ரூ.25-லிருந்து ரூ.50 ஆக உயர்ந்துள்ளது. அதன் பின்னர் ஒவ்வொரு கூடுதல் கி.மீ.க்கும் ரூ.12-க்குப் பதிலாக ரூ.25 வசூலிக்கப்படும். இந்தக் கட்டண உயர்வு சென்னை மட்டுமின்றி தமிழகம் முழுவதும் பொருந்தும்.

இரவு 10 மணிக்கு மேல் ஒன்றரை மடங்கு கட்டணம்

புதிய கட்டணத்தின்படி, இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை ஆட்டோவில் பயணம் செய்தால் சாதாரண கட்டணத்தைவிட ஒன்றரை மடங்கு கட்டணம் செலுத்த வேண்டும்.

அதாவது, பகலில் ரூ.50 கட்டணம் வரும் பயணத்துக்கு இரவில் ரூ.75 செலுத்த வேண்டும்.

ஆட்டோ காத்திருக்கும் நேரத்துக்கு நிமிடத்திற்கு ரூ.1 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மலைப்பகுதிகளில் முதல் 1.8 கி.மீ. தூரத்துக்கு ரூ.60 கட்டணம் வசூலிக்கப்படும். அதன் பின்னர் ஒவ்வொரு கூடுதல் கி.மீ.க்கும் ரூ.30 செலுத்த வேண்டும்.

இதன் மூலம் ஆட்டோ ஓட்டுநர்களின் நீண்ட காலக் கோரிக்கையை விஜய் அரசு நிறைவேற்றியுள்ளது. அதே நேரத்தில், ஆட்டோவை நம்பிப் பயணம் செய்யும் பொதுமக்களுக்கு இனி கூடுதல் செலவு ஏற்படும்.

Photo of author
Mathi

மா.ச.மதிவாணன் (Mathivanan Maran- Mathi) 30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share