புற்றுநோய் சிகிச்சைக்கான ரூ.11,000 மதிப்புள்ள ஊசிக்கு தனியார் மருத்துவமனை ஒன்று ரூ.1.30 லட்சம் வசூலித்த சம்பவத்தை சுட்டிக்காட்டி உச்சநீதிமன்றம், மத்திய அரசிடம் சரமாரியாக கேள்விகளை எழுப்பியுள்ளது.
மருந்துகளின் விலை நிர்ணயம், மருந்து நிறுவனங்கள்- மருத்துவமனைகளின் லாப வரம்புகள் உள்ளிட்டவை தொடர்பாக வழக்கறிஞர் கிஷன் சந்த் ஜெயின் உள்ளிட்டோர் உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனுக்களைத் தாக்கல் செய்துள்ளனர்.
இந்த மனுக்களை நீதிபதிகள் விக்ரம் நாத், சந்தீப் மேத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து வருகிறது.
இந்த வழக்கு கடந்த செப்டம்பர் 22-ந் தேதி விசாரணைக்கு வந்தபோது, புற்றுநோய்க்கான மருந்து ஒன்றின் அதிகபட்ச சில்லறை விலை (MRP) ரூ.27,000 ஆக இருந்த நிலையில், சில்லறை விற்பனையாளருக்கு வெறும் ரூ.2,700-க்குக் கிடைப்பது நீதிமன்றத்தின் கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டது.
மேலும், ரூ.73 MRP கொண்ட மருந்து ரூ.22.75-க்கும், ரூ.61 MRP கொண்ட மற்றொரு மருந்து ரூ.9.65-க்கும் சில்லறை விற்பனையாளர்களுக்கு வழங்கப்படுவதாக மனுதாரர் ஆவணங்களைச் சமர்ப்பித்திருந்தார்.
அப்போது, மருந்துகளின் கொள்முதல் விலைக்கும் அதிகபட்ச சில்லறை விலைக்கும் இடையே இவ்வளவு பெரிய வித்தியாசம் இருப்பது எப்படி என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
மருந்துகளை வாங்குவதற்காக மக்கள் தங்கள் வீடுகளையும் நகைகளையும் விற்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுவதாக நீதிபதி சந்தீப் மேத்தா வேதனை தெரிவித்திருந்தார்.
அவசரமாக மருந்து வாங்க வரும் நோயாளிகளின் உறவினர்களால் விலைகளை ஒப்பிட்டுப் பார்த்துக்கொண்டிருக்க முடியாது என்று நீதிபதி விக்ரம் நாத் குறிப்பிட்டிருந்தார்.
ரூ.11,000 ஊசிக்கு ரூ.1.30 லட்சம்.. பகல் கொள்ளை
இந்த நிலையில், அதே வழக்கு நேற்று (அக்.27) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை தொடர்பான சம்பவத்தை நீதிபதி சந்தீப் மேத்தா எடுத்துக்கூறினார்.
மருந்து விநியோகஸ்தர் ஒருவரின் மனைவி புற்றுநோயால் பாதிக்கப்பட்டு பிரபலமான தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவருக்குத் தேவைப்பட்ட கீமோதெரபி ஊசி குறித்து மருத்துவமனை நிர்வாகத்திடம் அந்த மருந்து விநியோகஸ்தர், “நானே மருந்து விநியோகஸ்தர்தான். இந்த ஊசி எனக்கு ரூ.11,000-க்குக் கிடைக்கிறது. அதை வாங்கி வருகிறேன்” என்று கூறியுள்ளார். ஆனால், அவர் வாங்கிக் கொடுக்கும் ஊசியைப் பயன்படுத்த மறுத்த மருத்துவமனை, அதே மருந்துக்கு ரூ.1.30 லட்சம் கட்டணம் வசூலித்துள்ளது.
இந்தச் சம்பவத்தை விவரித்த நீதிபதி சந்தீப் மேத்தா, “இந்தக் கொள்ளையை எப்படி நியாயப்படுத்த முடியும்? இந்த அளவுக்கு விலை வித்தியாசம் ஏன்? இந்தப் பணம் எங்கே செல்கிறது?” என்று மத்திய அரசிடம் கேள்வி எழுப்பினார்.
மத்திய அரசும் தனியார் மருத்துவமனைகளும் சொன்னது என்ன?
மத்திய அரசின் சார்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஐஸ்வர்யா பாட்டி ஆஜராகி வாதிட்டார். அப்போது, இந்தியாவில் மருந்துகளின் விலை பல நாடுகளுடன் ஒப்பிடும்போது குறைவாக இருப்பதாகவும், மருந்துகள் மக்களுக்குக் கட்டுப்படியான விலையில் கிடைப்பதுடன் ஆராய்ச்சி, தொழில் வளர்ச்சி, போட்டி உள்ளிட்ட அம்சங்களையும் கருத்தில் கொண்டு அரசு கொள்கைகளை வகுப்பதாகவும் தெரிவித்தார்.
தனியார் மருத்துவமனைகள் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தகி, மருத்துவமனைகளை 24 மணி நேரமும் செயல்படுத்துவதற்கான மருத்துவர்கள், செவிலியர்கள், ஊழியர்கள் மற்றும் கட்டமைப்பு வசதிகளுக்குப் பெரும் செலவு ஏற்படுவதாக விளக்கினார்.
வெளியில் இருந்து நோயாளிகள் வாங்கிவரும் மருந்துகளைப் பயன்படுத்துவதில் போலி மருந்துகள் தொடர்பான அபாயங்கள் இருப்பதாகவும் வாதிட்டார்.
ஆனால் மருத்துவமனைகளின் நிர்வாகச் செலவுகளை ஈடுகட்டுவதற்காக மருந்துகளின் விலையைப் பல மடங்கு உயர்த்துவதை நியாயப்படுத்த முடியாது என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
இந்தியாவில் மருந்துகளின் விலையைக் கட்டுப்படுத்த 2013-ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட விதிகள் நடைமுறையில் உள்ளன. இதன்படி தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம் (NPPA) குறிப்பிட்ட மருந்துகளுக்கு அதிகபட்ச விலையை நிர்ணயிக்கிறது.
ஆனால் சந்தையில் விற்பனையாகும் மருந்துகளில் சுமார் 90 சதவீத மருந்துகளின் விலை அரசின் நேரடிக் கட்டுப்பாட்டில் இல்லை. இது ஏன் என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
ரூ.100 MRP கொண்ட மருந்து சில்லறை விற்பனையாளருக்கு ரூ.10 அல்லது ரூ.20-க்குக் கிடைப்பதை எப்படி அனுமதிக்க முடியும் என்றும் நீதிபதிகள் கேட்டனர்.
மக்களின் உயிர் தொடர்பான விவகாரத்தை வெறும் வணிகமாக அணுகக்கூடாது என்றும், உயிர்காக்கும் மருந்துகளின் விலை நிர்ணயத்தில் நோயாளிகளின் நலனுக்கே முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.
இதையடுத்து மருந்துகளின் விலைக் கட்டுப்பாடு, மருந்து நிறுவனங்கள் மற்றும் மருத்துவமனைகளின் லாப வரம்புகள் தொடர்பான மனுக்கள் மீதான விசாரணையை நிறைவு செய்த உச்சநீதிமன்றம், உத்தரவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது.
