ஆந்திரா: அர்னாப் புயல் முழுமையாக கரையை கடப்பதில் தாமதம்.. பலத்த காற்று, பெருமழை!

Published On:

| By Mathi

Arnab Cyclone- Land Fall Delay

வங்கக்கடலில் உருவான அர்னாப் புயல் இன்று அதிகாலை ஆந்திராவின் காக்கிநாடா அருகே கரையைக் கடக்கத் தொடங்கியது. ஆனால் புயலின் நகரும் வேகம் குறைந்ததால் புயல் முழுமையாகக் கரையைக் கடக்க மேலும் 2 முதல் 3 மணி நேரம் ஆகும் என வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வங்கக்கடலில் அக்.23-ந் தேதி உருவான காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, அக்.24-ந் தேதி காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாகவும், அக்.25-ந் தேதி ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாகவும் வலுப்பெற்றது. அக்.26-ந் தேதி அதிகாலை புயலாக உருவெடுத்த இதற்கு ‘அர்னாப்’ எனப் பெயரிடப்பட்டது. தொடர்ந்து அக்.27-ந் தேதி அதிதீவிர புயலாக வலுப்பெற்று ஆந்திரா கடற்கரையை நெருங்கியது.

ADVERTISEMENT

இந்நிலையில், இன்று (அக்.28) அதிகாலை 2 மணியளவில் அர்னாப் புயல் ஆந்திராவின் காக்கிநாடா அருகே ஏனாம் கடலோரப் பகுதியில் கரையைக் கடக்கத் தொடங்கியது. அர்னாப் புயல் கரையை கடந்து வரும் நிலையில் காக்கிநாடா, ஏனாம், கோனசீமா உள்ளிட்ட கடலோரப் பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. உப்பாடா கடற்கரையில் கடல் கடுமையாகக் கொந்தளிக்கிறது. ராட்சத அலைகள் கரையைத் தாக்குவதால் கடற்கரைச் சாலையில் அரிப்பு ஏற்பட்டுள்ளது.

கோனசீமா மாவட்டத்திலும் புயலின் தாக்கம் அதிகமாக உள்ளது. பலத்த காற்றால் தென்னை மரங்கள் சாயும் அபாயம் ஏற்பட்டுள்ளது. காக்கிநாடா மாவட்டத்தில் பல இடங்களில் மரங்கள் வேருடன் சாய்ந்துள்ளன. சில பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. சாலைகளில் விழுந்த மரங்களை அகற்றவும், மின் இணைப்புகளைச் சீரமைக்கவும் ஊழியர்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.

ADVERTISEMENT

புயல் பாதிப்புகள் குறித்து ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு அதிகாரிகளுடன் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகிறார். தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களைப் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றவும், நிவாரண முகாம்களில் உணவு, குடிநீர், மருத்துவ வசதிகளை ஏற்படுத்தவும் உத்தரவிட்டுள்ளார்.

புயல் காரணமாக ஆந்திராவின் கடலோர மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. விஜயவாடா, ராஜமுந்திரி, மசூலிப்பட்டினம் உள்ளிட்ட வழித்தடங்களில் 53 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

ADVERTISEMENT

புயல் முழுமையாகக் கரையைக் கடந்த பின்னரும் கனமழை மற்றும் பலத்த காற்று நீடிக்கக்கூடும் என்பதால் பொதுமக்கள் தேவையின்றி வெளியே வர வேண்டாம் என அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

Photo of author
Mathi

மா.ச.மதிவாணன் (Mathivanan Maran- Mathi) 30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share