மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியும், ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலை நிவாரணமும் கூடுதல் தவணையாக வழங்க பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவைக் குழு இன்று ஒப்புதல் அளித்துள்ளது.
இது குறித்து நிதி அமைச்சகம் இன்று (அக்டோபர் 28) வெளியிட்ட அறிவிப்பில்,
“விலைவாசி உயர்வை ஈடுகட்டும் வகையில், அடிப்படை ஊதியம் / ஓய்வூதியத்தில் தற்போதுள்ள 60 சதவீதத்துடன் கூடுதலாக 3 சதவீதம் உயர்த்தி வழங்கப்படும். இந்த அகவிலைப்படி/ அகவிலை நிவாரணம் 01.07.2026 முதல் அமல்படுத்தப்படும்.
இந்த அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரண உயர்வு காரணமாக, மத்திய அரசிற்கு ஆண்டொன்றுக்கு மொத்தம் ரூ.10,016.10 கோடி கூடுதல் செலவு ஏற்படும். இதன் மூலம், 48.54 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும், 68.71 லட்சம் ஓய்வூதியதாரர்களும் பயனடைவர்.
இந்த உயர்வு, 7-வது மத்திய ஊதியக் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் ஏற்றுக்கொள்ளப்பட்ட பரிந்துரைகளுக்கு ஏற்ப வழங்கப்படுகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
