எல். முருகனின் ராஜ்யசபா சீட்.. தமிழக பாஜக ‘தலை’கள் ஏமாற்றம்- சர்ச்சைக்குரிய மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் புரி வேட்பாளர்!

Published On:

| By Mathi

MP Rajya Sabha BJP

மத்திய இணை அமைச்சராக இருந்த எல்.முருகன் ராஜினாமா செய்ததால் காலியான மத்திய பிரதேச மாநிலங்களவை (ராஜ்யசபா) எம்.பி. இடத்துக்கான பாஜக வேட்பாளராக, மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி அறிவிக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக பாஜக தேசிய பொதுச்செயலாளர் தருண் சுக் இன்று (அக். 28) வெளியிட்டுள்ள அறிவிப்பில், மத்திய பிரதேச மாநிலங்களவை இடைத்தேர்தலுக்கான வேட்பாளராக ஹர்தீப் சிங் புரியை பாஜக மத்திய தேர்தல் குழு தேர்வு செய்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

எல்.முருகன் ராஜினாமா செய்த ராஜ்யசபா சீட் யாருக்கு கிடைக்கும் என்பது குறித்து மின்னம்பலத்தில் கடந்த அக். 22-ந் தேதி விரிவாக எழுதியிருந்தோம். அதில் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், மூத்த தலைவர்கள் தமிழிசை சவுந்தரராஜன், வானதி சீனிவாசன் ஆகியோரின் பெயர்கள் இந்த இடத்துக்காகப் பேசப்படுவதாகக் குறிப்பிட்டிருந்தோம்.

மேலும், டெல்லி பாஜக வட்டாரங்களில் நாம் விசாரித்தபோது, தென்னிந்தியாவைச் சேர்ந்த ஒருவரை மீண்டும் இந்த இடத்துக்குத் தேர்வு செய்வது குறித்து பாஜக மேலிடம் ஆலோசித்து வருவதாகவும், அந்த வகையில் வானதி சீனிவாசன் பெயர் பரிசீலனையில் இருப்பதாகவும் தெரிவித்திருந்தனர்.

ADVERTISEMENT

அதே நேரத்தில் மத்திய பிரதேச முன்னாள் அமைச்சர்கள் நரோத்தம் மிஸ்ரா, அரவிந்த் பதோரியா, மாநில பாஜக பொதுச்செயலாளர் ராகுல் கோத்தாரி, ஆஷிஷ் அகர்வால், வினோத் கோட்டியா, ஷைலேந்திர பருவா, ரஞ்சனா பாகேல் உள்ளிட்டோரும் இந்த இடத்தைப் பெற முயற்சிப்பதாக எழுதியிருந்தோம்.

ஆனால் தமிழக பாஜக மற்றும் மத்திய பிரதேச பாஜக தலைவர்களின் பெயர்களைத் தவிர்த்து, தற்போது மத்திய அமைச்சராக இருக்கும் ஹர்தீப் சிங் புரிக்கே இந்த வாய்ப்பை வழங்கியுள்ளது பாஜக மேலிடம்.

ADVERTISEMENT

ஹர்தீப் சிங் புரிக்கு ஏன் இந்த வாய்ப்பு?

உத்தர பிரதேசத்தில் இருந்து மாநிலங்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஹர்தீப் சிங் புரியின் தற்போதைய பதவிக்காலம் வரும் நவம்பர் 25-ந் தேதியுடன் முடிவடைகிறது.

அந்த மாநிலத்தில் நடைபெறும் மாநிலங்களவைத் தேர்தலுக்கான பாஜக வேட்பாளர் பட்டியலில் ஹர்தீப் சிங் புரியின் பெயர் இடம்பெறவில்லை. இதனால் அவர் மீண்டும் மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்படுவாரா என்ற கேள்வி எழுந்திருந்தது.

இந்த நிலையில், எல்.முருகன் ராஜினாமா செய்ததால் மத்திய பிரதேசத்தில் காலியான இடத்துக்கு ஹர்தீப் சிங் புரியை வேட்பாளராக பாஜக அறிவித்துள்ளது. இதன் மூலம் அவர் தொடர்ந்து மாநிலங்களவை உறுப்பினராக நீடிப்பதற்கான வாய்ப்பு உருவாகியுள்ளது.

எப்ஸ்டீன் ஆவணங்கள் சர்ச்சையில் ஹர்தீப் சிங் புரி

அமெரிக்காவில் சிறுமிகளைப் பாலியல் சுரண்டலுக்கு உட்படுத்திய வழக்கில் சிக்கிய ஜெஃப்ரி எப்ஸ்டீனுடன் மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் புரி அமர்ந்து பேசும் போட்டோக்கள் அண்மையில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தின.

கடந்த அக். 20-ந் தேதி சமூக வலைதளங்களில் பரவிய இந்தப் போட்டோவில் ஒரு அறையில் எப்ஸ்டீனும் ஹர்தீப் சிங் புரியும் எதிரெதிரே அமர்ந்து பேசுவது பதிவாகியிருந்தது.

முன்னதாக, எப்ஸ்டீனை சர்வதேச அமைப்பின் பிரதிநிதிகள் குழுவுடன் சந்தித்ததாக ஹர்தீப் சிங் புரி விளக்கம் அளித்திருந்தார். இந்த நிலையில், இருவரும் தனியாக அமர்ந்திருக்கும் போட்டோ வெளியானதால், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கேள்விகளை எழுப்பின.

இதற்குப் பதிலளித்த ஹர்தீப் சிங் புரியின் அலுவலகம், அந்த படங்கள் எந்தச் சந்திப்பின்போது எடுக்கப்பட்டவை என்பது அவருக்கு நினைவில்லை என்று விளக்கம் அளித்தது.

இந்தச் சர்ச்சை அடங்காத நிலையில், எல்.முருகன் ராஜினாமா செய்த மத்திய பிரதேச ராஜ்யசபா இடத்துக்கு ஹர்தீப் சிங் புரியை பாஜக வேட்பாளராக அறிவித்துள்ளது.

நவம்பர் 12-ல் இடைத்தேர்தல்

எல்.முருகன் ராஜினாமா செய்ததால் காலியான மத்திய பிரதேச மாநிலங்களவை இடத்துக்கு நவம்பர் 12-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. நவம்பர் 2-ந் தேதி வேட்புமனுத் தாக்கல் செய்ய கடைசி நாள். நவம்பர் 3-ந் தேதி வேட்புமனுக்கள் பரிசீலிக்கப்படும். நவம்பர் 5-ந் தேதி வேட்புமனுக்களைத் திரும்பப் பெற கடைசி நாள்.

நவம்பர் 12-ந் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று, அன்றைய தினமே வாக்குகள் எண்ணப்படும். மத்திய பிரதேச சட்டசபையில் பாஜகவுக்குப் பெரும்பான்மை இருப்பதால் ஹர்தீப் சிங் புரி வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு உள்ளது.

Photo of author
Mathi

மா.ச.மதிவாணன் (Mathivanan Maran- Mathi) 30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share