தவெகவில் இணைந்த 6 அதிமுக எம்.எல்.ஏ.க்கள்.. வழக்கறிஞருக்கு விதித்த ரூ.1 லட்சம் அபராதம் ரத்து- உயர்நீதிமன்றத்தில் என்ன நடந்தது?

Published On:

| By Mathi

high court

அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்த 6 எம்.எல்.ஏ.க்களிடம் தேர்தல் செலவை வசூலிக்கக் கோரி வழக்கு தொடர்ந்த வழக்கறிஞருக்கு விதிக்கப்பட்ட ரூ.1 லட்சம் அபராதத்தை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

தமிழக சட்டசபை தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற 6 எம்.எல்.ஏ.க்கள், பின்னர் தங்களது பதவிகளை ராஜினாமா செய்து தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தனர்.

ADVERTISEMENT

இதையடுத்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் எஸ். காசிராமலிங்கம் ஒரு மனுத் தாக்கல் செய்தார். அதில், ”தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு எம்.எல்.ஏ.க்கள் பதவியை ராஜினாமா செய்வதால் மீண்டும் இடைத்தேர்தல் நடத்த வேண்டிய நிலை ஏற்படுகிறது. இதனால் அரசுக்குக் கூடுதல் செலவு ஏற்படுகிறது. எனவே, பதவியை ராஜினாமா செய்த எம்.எல்.ஏ.க்களிடமே தேர்தல் செலவை வசூலிக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும்” என்று கோரியிருந்தார்.

மேலும், தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு பதவியை ராஜினாமா செய்வது வாக்களித்த மக்களின் நம்பிக்கைக்குச் செய்யும் துரோகம் என்றும் மனுவில் அவர் தெரிவித்திருந்தார்.

ADVERTISEMENT

ரூ.1 லட்சம் அபராதம் ஏன்?

இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.ஏ. தர்மாதிகாரி, நீதிபதி ஜி. அருள் முருகன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், ”இதே கோரிக்கையுடன் தொடரப்பட்ட வழக்கில் ஏற்கெனவே தீர்ப்பு வழங்கப்பட்டுவிட்டது. சட்டம் இயற்றுவது சட்டமன்றத்தின் வேலை. குறிப்பிட்ட விவகாரத்தில் சட்டம் இயற்ற வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட முடியாது” என்று தெரிவித்தனர்.

அத்துடன், “மனுவைத் திரும்பப் பெற விரும்புகிறீர்களா?” என்றும் கேட்டனர். ஆனால், தனது வழக்கு வேறுபட்டது என்று கூறிய வழக்கறிஞர் காசிராமலிங்கம் தொடர்ந்து வாதிட்டார். இதனால் அதிருப்தி அடைந்த நீதிபதிகள், மனுவைத் தள்ளுபடி செய்ததுடன் வழக்கறிஞருக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்தனர். அந்தத் தொகையை தமிழ்நாடு மாநில சட்டப் பணிகள் ஆணைக்குழுவில் செலுத்தவும் உத்தரவிட்டனர்.

ADVERTISEMENT

அபராதம் ரத்து

இந்த நிலையில், அபராதத்தை ரத்து செய்யக் கோரி வழக்கறிஞர் காசிராமலிங்கம் சீராய்வு மனுத் தாக்கல் செய்தார். இந்த மனு நேற்று (அக்டோபர் 28) மீண்டும் அதே நீதிபதிகள் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, முந்தைய விசாரணையின்போதே மனுவைத் திரும்பப் பெற விரும்பியதாகவும், காணொலி மூலம் ஆஜரானதால் தனது கருத்தைச் சரியாகத் தெரிவிக்க முடியவில்லை என்றும் காசிராமலிங்கம் விளக்கம் அளித்தார்.

இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், மனுதாரர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பணியாற்றி வருவதையும் கருத்தில் கொண்டு, அவருக்கு விதிக்கப்பட்ட ரூ.1 லட்சம் அபராதத்தை ரத்து செய்து உத்தரவிட்டனர்.

Photo of author
Mathi

மா.ச.மதிவாணன் (Mathivanan Maran- Mathi) 30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share