திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவின் திருச்சி வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் தற்போது சோதனை நடத்தி வருகின்றனர். முந்தைய திமுக ஆட்சியில் நகராட்சி நிர்வாகத் துறையில் பணி நியமனங்களுக்கு லஞ்சம் பெற்றதாக கூறப்படும் புகார் தொடர்பாக இந்த சோதனையை லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.
கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் 2,538 பணியிடங்களை நிரப்பியதில் முறைகேடுகள் நடைபெற்றது; வேலை வாங்கித் தருவதற்காக லஞ்சம் பெறப்பட்டது என்பது குற்றச்சாட்டுகள். இது தொடர்பாக தமிழக டிஜிபிக்கு அமலாக்கத் துறை கடிதம் அனுப்பியிருந்தது.
இந்தக் கடிதத்தின் அடிப்படையில் முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என்று அதிமுக எம்.பி. இன்பதுரை சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார்.
இதை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், கடந்த பிப்ரவரி 20-ஆம் தேதி அமலாக்கத் துறை அனுப்பிய கடிதத்தின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத் துறை முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டது.
இந்த உத்தரவை மறுஆய்வு செய்யக் கோரி கே.என்.நேரு மனுத் தாக்கல் செய்தார். அவரது சகோதரர்களான என்.ரவிச்சந்திரன், கே.என்.மணிவண்ணன் உள்ளிட்டோர் தரப்பிலும் தனித்தனியாக மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. தங்கள் தரப்பு விளக்கத்தைக் கேட்காமலேயே வழக்குப் பதிவு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளதாகவும், அந்த உத்தரவை மறுஆய்வு செய்ய வேண்டும் என்றும் அவர்கள் கோரினர்.
இந்த நிலையில் நீதிமன்ற உத்தரவின்படி வழக்குப் பதிவு செய்யப்படவில்லை என்று கூறி அதிமுக எம்.பி. இன்பதுரை நீதிமன்ற அவமதிப்பு வழக்கும் தொடர்ந்திருந்தார். பின்னர் லஞ்ச ஒழிப்புத் துறை முதல் தகவல் அறிக்கை பதிவு செய்த நிலையில், அந்த வழக்கில் மேல் நடவடிக்கை எடுக்க சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது.
இந்த மறுஆய்வு மனுக்கள் மீதான விசாரணை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி, நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் நடைபெற்றது. அனைத்து தரப்பு வாதங்கள் நிறைவடைந்த நிலையில், அக்டோபர் 9-ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அன்றைய தினம் தலைமை நீதிபதி நீதிமன்ற அமர்வில் பங்கேற்காததால் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.
இந்த நிலையில், கடந்த அக்டோபர் 26-ந் தேதி கே.என்.நேரு தாக்கல் செய்த மறுஆய்வு மனுவை தலைமை நீதிபதி தர்மாதிகாரி, நீதிபதி அருள்முருகன் அமர்வு தள்ளுபடி செய்து தீர்ப்பளித்தது. கடந்த பிப்ரவரி 20ஆம் தேதி பிறப்பித்த உத்தரவில் எந்த மாற்றமும் செய்ய தலைமை நீதிபதி அமர்வு மறுத்தது.
இந்த பின்னணியில் கே.என்.நேருவின் திருச்சி தில்லைநகரில் உள்ள வீட்டில் தற்போது லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். இதேபோல கோவையில் நேருவின் சகோதரர் மணிவண்ணன் தொடர்புடைய இடங்களிலும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
