திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவின் வீட்டில் இன்று காலை முதல் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக, அவரது சகோதரர் ரவிச்சந்திரனின் சென்னை வீட்டிலும், மற்றொரு சகோதரரான மணிவண்ணனின் கோவை வீடு மற்றும் அலுவலகத்திலும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
திமுக ஆட்சிக் காலத்தில் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சராக இருந்த கே.என்.நேரு, 2,538 பணியிடங்கள் நியமனத்தில் ரூ.634 கோடி ஊழல் செய்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாகத் தமிழக டி.ஜி.பி-க்கு அமலாக்கத்துறை கடிதம் அனுப்பியது. அக்கடிதத்தின் அடிப்படையில், கே.என்.நேரு உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என அதிமுக தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.
இம்மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், இப்புகார் மீது லஞ்ச ஒழிப்புத்துறை முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டது. இந்த உத்தரவை மறுஆய்வு செய்யக்கோரி கே.என்.நேரு, அவரது சகோதரர்களான ரவிச்சந்திரன் மற்றும் கே.என்.மணிவண்ணன் ஆகியோர் தரப்பில் தனித்தனியாக மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இதனிடையே, நீதிமன்ற உத்தரவின்படி வழக்குப் பதிவு செய்யப்படவில்லை என்று அதிமுகவைச் சேர்ந்த இன்பதுரை நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார். இதைத் தொடர்ந்து, லஞ்ச ஒழிப்புத்துறை முதல் தகவல் அறிக்கை பதிவு செய்த நிலையில், அதன்மேல் மேல் நடவடிக்கை எடுக்கச் சென்னை உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது. பின்னர் மறுஆய்வு மனுக்கள் மீதான விசாரணையின் முடிவில், அம்மனுக்களைத் தள்ளுபடி செய்து தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு உத்தரவிட்டது.
முன்னதாக, கடந்த செப்டம்பர் 5-ஆம் தேதி கே.என்.நேருவின் வீடு உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தினர். அப்போது பல முக்கியமான ஆவணங்கள் மற்றும் வங்கிப் பரிவர்த்தனை விவரங்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல்கள் வெளியானது.
இந்நிலையில்தான், இன்று காலை முதல் கே.என்.நேருவின் திருச்சி வீட்டிலும், கோவையில் உள்ள ஜி.வி ரெசிடென்சி பகுதியில் உள்ள கே.என்.மணிவண்ணனின் வீடு மற்றும் திருச்சி சாலையில் உள்ள அவரது அலுவலகத்திலும் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். அதேபோல், சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள நேருவின் சகோதரர் ரவிச்சந்திரனின் வீடு உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
