Ban The Scan: பொருளாதார அறிஞர் கலையரசன் கைது எழுப்பும் முக்கியமான இரு பிரச்சினைகள்

Published On:

| By டி.ரவிக்குமார்

BanTheScan-Kalaiyarasan Issue
  • ரவிக்குமார்

பொருளாதார அறிஞர் கலையரசன் கைது செய்யப்பட்டது அவரது புகைப்படத்தைத் தவறாகப் பயன்படுத்தி அவதூறாகப் பதிவிட்ட ஒரு இன்ஸ்டாகிராம் கணக்கினால் நேர்ந்தது எனத் தெரிகிறது. காவல்துறையினர் அந்தக் கணக்கில் இருந்த அவரது புகைப்படத்தை ‘முக அங்கீகாரத் தொழில்நுட்பத்தைப்’ ( Facial Recognition Technology – FRT ) பயன்படுத்தி அவரது முகவரி கண்டுபிடிக்கப்பட்டிருக்கலாம் என யூகிக்க முடிகிறது.

இதில் பின்வரும் இரண்டு பிரச்சினைகளை நாம் பார்க்கிறோம்.

ADVERTISEMENT

ஒன்று: முக அங்கீகாரத் தொழில் நுட்பத்தைக் காவல்துறை பயன்படுத்துவது நமது அந்தரங்க உரிமையைப் பறிக்கிறதா?

இரண்டு: சமூக ஊடகங்களில் கணக்குக்கு உரியவர் வேறொருவரின் புகைப்படத்தை தனது அடையாளமாக வைத்துக்கொள்வதை அனுமதிக்கலாமா?

ADVERTISEMENT

முக அங்கீகாரத் தொழில்நுட்பம்’ ( Facial Recognition Technology – FRT ) 2021 ஆம் ஆண்டு அன்றைய திமுக அரசால் காவல்துறையில் அறிமுகம் செய்யப்பட்டது. இது தனிநபர்களின் அந்தரங்க உரிமையைப் பறிக்கும் ஆபத்துகொண்டது என அப்போதே நான் பதிவிட்டிருந்தேன். மனித உரிமை ஆர்வலர்களும் அதேபோலக் கருத்துத் தெரிவித்தனர்.

ஆனால் திமுக அரசு அதைப் பொருட்படுத்தவில்லை. 2024 ஆம் ஆண்டில் அந்த செயலியில் பாதுகாக்கப்பட்ட தரவுகள் கசிந்து பல்லாயிரக் கணக்கானவர்களின் தகவல்கள் வெளியாயின. அப்போது Internet Freedom Foundation என்ற அமைப்பு “இந்தத் தொழில்நுட்பத்தால் குற்ற நடவடிக்கைகள் கட்டுப்படுத்தப்படவில்லை. மாறாக, அந்தரங்க உரிமைகள் பறிக்கப்படுவதே நடக்கிறது “ எனக் குறிப்பிட்டு அந்தத் தொழில்நுட்பத்தைத் தடைசெய்ய வேண்டும் என வலியுறுத்தியது.

ADVERTISEMENT

“ தமிழ்நாடு முக அங்கீகாரப் பதிவேட்டுத் தளத்தில் (TN FRS portal) பெருமளவில் தரவுகள் கசிந்ததைத் தொடர்ந்து, பெருமளவில் சேகரிக்கப்படும் இந்த முகத் தரவுகள் பாதுகாப்பாகவும் வைக்கப்படவில்லை என்பதை இப்போது அறிந்திருக்கிறோம். குற்றவியல் நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படும் முக அங்கீகாரப் பதிவேட்டு அமைப்புடன் (FRS) தொடர்புடைய அந்தரங்க உரிமை மற்றும் மனித உரிமை மீறல்களும், கண்காணிப்பு தொடர்பான கவலைகளும் அதன் பயன்களைவிடப் பல மடங்கு அதிகமாக இருப்பதால், காவல்துறையினர் இந்தத் தொழில்நுட்பத்தை முற்றிலுமாகப் பயன்படுத்துவதை நிறுத்த வேண்டிய நேரம் இது” என்று அந்த அமைப்பு கூறியது.

ஆம்னஸ்டி இன்டர்நேஷனல் (Amnesty International) அமைப்பு “Ban The Scan” (கண்காணிப்புத் தொழில்நுட்பத்தைத் தடை செய்) என்ற இயக்கத்தை முன்னெடுத்ததை இங்கே நினைவுகூர்வது தகும்.

முக அங்கீகாரத் தொழில்நுட்பம் (FRT) என்பது தனிநபர்களின் அந்தரங்க உரிமைக்குப் பேராபத்தை ஏற்படுத்தும், மிக ஆழமாக ஊடுருவும் தன்மைகொண்ட ஆபத்தான கண்காணிப்புக் கருவியாகும். சட்டத்தை அமல்படுத்தும் அமைப்புகளின் கைகளில் இது நேரடியான அச்சுறுத்தலாக மாறுகிறது.

எந்தவிதமான கண்காணிப்பும், ஒப்புதலும், வெளிப்படைத்தன்மையும் அல்லது நடைமுறைப் பாதுகாப்பு ஏற்பாடுகளும் இன்றி, காவல்துறையினர் பெருமளவிலான உணர்வுபூர்வமான முகத் தரவுகளைச் சேகரித்து செயலாக்க முடிகிறது. இத்தொழில்நுட்பம் மிகத் துல்லியமாகச் செயல்பட்டால்கூட, அதன் பயன்பாடு ஒரு கண்காணிப்பு ஆட்சிமுறையை உருவாக்கி நிலைநிறுத்துகிறது. இத்தகைய சூழலில், குடிமக்கள் தொடர்ந்து கண்காணிப்பின் கீழ் வைக்கப்படுகிறார்கள். அவர்களின் கருத்துச் சுதந்திரம், கண்ணியம், அந்தரங்க உரிமை, உள்ளிட்ட அடிப்படை உரிமைகள் உரிய கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாட்டு நடைமுறைகளின்றி மீறப்படும் ஆபத்து உள்ளது.

சமூக ஊடகங்களில் எந்தப் புகைப்படத்தையும், பெயரையும் வைத்துக்கொள்ளலாம் என்ற வசதியே வெறுப்புப் பிரச்சாரத்துக்குக் காரணமாக உள்ளது. தற்போது மொபைல் சிம் கார்டு எந்தப் பெயரில் வாங்கப்பட்டுள்ளதோ அந்தப் பெயர்தான் அழைக்கும்போது டிஸ்ப்ளே ஆகும் என ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. இது நவம்பர் 1 ஆம் தேதிமுதல் நடைமுறைக்கு வரும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விதி சமூக ஊடகக் கணக்குகளுக்கும் பொருந்தும் என ஆக்கினால் தற்போது தமிழ்நாட்டில் நடந்ததுபோன்ற குளறுபடிகள் நடக்காது.

திரு கலையரசன் அவர்களது கைதைக் கண்டிப்பதோடு இந்தப் பிரச்சினை முடிந்துவிட்டது என்று கருதாமல் மேற்கண்ட கோரிக்கைகளையும் நாம் வலியுறுத்தவேண்டும்.

#BanTheScan

Photo of author
டி.ரவிக்குமார்

முனைவர் டி.ரவிக்குமார், நாடாளுமன்ற உறுப்பினர் (விழுப்புரம் மக்களவைத் தொகுதி), எழுத்தாளர்-மொழிபெயர்ப்பாளர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share