பேராசிரியர் கலையரசன் கைது செய்யப்பட்ட விவகாரத்தில் காவல்துறை தவறு செய்துவிட்டதாகச் சட்டத்துறை அமைச்சர் நிர்மல் குமார் ஒப்புக்கொண்டுள்ளார்.
சென்னையில் அமைந்துள்ள ‘சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி மையத்தில்’ பேராசிரியராகப் பணியாற்றி வரும் ஏ. கலையரசன், நேற்று அதிகாலை 5 மணி அளவில் சீருடை அணியாத காவல்துறையினரால் பலவந்தமாக அழைத்துச் செல்லப்பட்டார். அவரது கைபேசி பறிமுதல் செய்யப்பட்டு, சில மணி நேர விசாரணைக்குப் பிறகு மீண்டும் வீட்டில் கொண்டு வந்து விடப்பட்டார்.
இது குறித்துக் காவல்துறையில் புகார் அளித்த பேராசிரியர் கலையரசன், “இன்ஸ்டாகிராம் கணக்கு ஒன்றில், பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர் குறித்து அவதூறாகப் பதிவிடப்பட்டிருந்ததாகவும், அந்தப் பக்கத்தில் எனது புகைப்படம் இருந்ததால் விசாரணைக்கு அழைத்துச் செல்வதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது” எனக் கூறியுள்ளார்.
இச்சம்பவம் குறித்துச் சட்டத்துறை அமைச்சர் நிர்மல் குமாரிடம் செய்தியாளர்கள் இன்று கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த அமைச்சர், “காவல் துறையில் தவறு நடந்துவிட்டது. இச்சம்பவம் தொடர்பாக நானும், மற்ற அமைச்சர்களும் அவரிடம் பேசினோம். நேற்று காலை 5:30 மணி அளவில் எனக்கு இதுபற்றி தகவல் கிடைத்தவுடன், சென்னை மாநகர காவல் ஆணையரிடம் பேசினேன்.
அவரது பெயர் மற்றும் புகைப்படத்தைப் பயன்படுத்தி வேறொருவர் சட்டமன்ற உறுப்பினர் குறித்துத் தவறான பதிவைச் செய்துள்ளார். இதனால் காவலர்கள் தவறுதலாகக் கலையரசனை அழைத்துச் சென்றுவிட்டனர். இதன்பின், நானும் தொலைபேசி வாயிலாக அவரிடம் பேசி, ‘தவறு நடந்துவிட்டது’ என்று விளக்கம் அளித்துள்ளேன். மற்ற அமைச்சர்களும் அவருக்கு நிலைமையை எடுத்துரைத்துள்ளனர்” என தெரிவித்துள்ளார்.
