முன்னாள் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் ஜாமீன் மனு நவம்பர் 2ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் பெற்று தருவதாக கூறி 100 கோடி ரூபாய் மோசடி செய்த விவகாரத்தில் முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
இந்த வழக்கில் அவருக்கு முன் ஜாமீன் மறுக்கப்பட்ட நிலையில், கடந்த அக்டோபர் 26 ஆம் தேதி சென்னையில் அன்பில் மகேஷை போலீசார் கைது செய்தனர்.
விசாரணைக்கு பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, புழல் சிறையில் அடைத்துள்ளனர்.
இந்த நிலையில் ஜாமீன் கேட்டு ஊழல் தடுப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
அதில், “என் மீதான குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரமில்லை. அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. எனக்கு கணைய அழற்சி பாதிப்பு உள்ளதால் தொடர் மருத்துவ சிகிச்சை பெற வேண்டும். அதனால் ஜாமீன் வழங்க வேண்டும்” என்று கேட்டுக் கொண்டிருந்தார்.
இந்த மனு இன்று (அக்டோபர் 29) விசாரணைக்கு வந்தபோது, அன்பில் மகேஷ் ஜாமீன் மனுவுக்கு பதில் அளிக்க கால அவகாசம் வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது.
இதை ஏற்று அன்பில் மகேஷின் ஜாமீன் மனு மீதான விசாரணையை நவம்பர் 2ஆம் தேதிக்கு ஊழல் தடுப்பு நீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது.
அதேபோன்று அன்பில் மகேஷை காவலில் எடுத்து விசாரிக்க கோரிய சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் மனுவையும் நவம்பர் 2ம் தேதி விசாரிப்பதாக கூறியுள்ளது.
