‘தில்லை தீட்சிதர்கள்’ நிர்வாகத்தில் உள்ள சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஏராளமான முறைகேடுகள் நடந்திருப்பதாக கடுமையாக விமர்சித்துள்ள சென்னை உயர்நீதிமன்றம், கோயில் நிர்வாகத்தைச் சீரமைக்க 2 ஓய்வுபெற்ற நீதிபதிகள் உள்ளிட்ட 5 பேர் கொண்ட நிர்வாகக் குழுவை அமைத்து இன்று (அக். 30) அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
சிதம்பரம் நடராஜர் கோயில் நிர்வாகம் தொடர்பாகத் தமிழக அரசுக்கும் பொது தீட்சிதர்களுக்கும் இடையே நடைபெற்று வரும் மோதல் இப்போது தொடங்கியது அல்ல. ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்திலிருந்தே தொடரும் நீண்ட சட்டப் போராட்டம் இது.
சிதம்பரம் கோயிலும் தீட்சிதர்களும்
கடலூர் மாவட்டத்தில் உள்ள சிதம்பரம் நடராஜர் கோயில், சைவ சமயத்தின் பஞ்ச பூதத் தலங்களில் ஆகாயத் தலமாகப் போற்றப்படுகிறது. இங்கு நடராஜருக்குப் பூஜைகள் செய்வதுடன் கோயிலின் நிர்வாகத்தையும் பாரம்பரியமாக மேற்கொண்டு வருபவர்கள் பொது தீட்சிதர்கள். இவர்கள் ‘தில்லை மூவாயிரவர்’ என்றும் அழைக்கப்படுகின்றனர்.
அது என்ன ‘தில்லை மூவாயிரவர்’?
சிதம்பரம் நடராஜர் கோயிலில் பூஜை செய்து வரும் பொது தீட்சிதர்கள், ‘தில்லை மூவாயிரவர்’ என்று அழைக்கப்படுவதற்குப் பின்னால் ஒரு புராணக் கதை உள்ளது. சிவபெருமானின் அருளால் தில்லையில் 3,000 தீட்சிதர்கள் வாழ்ந்து வந்ததாகவும், ஒருமுறை அவர்களைக் கணக்கிட்டபோது 2,999 பேர் மட்டுமே இருந்ததாகவும் கூறப்படுகிறது. காணாமல் போன ஒருவர் யார் என்று தீட்சிதர்கள் குழம்பியபோது, சிவபெருமானே தோன்றி, ‘அந்த மூவாயிரவரில் ஒருவன் நானே’ என்று கூறியதாகத் தலபுராண மரபு தெரிவிக்கிறது. இதனால் நடராஜரையும் சேர்த்து ‘தில்லை மூவாயிரவர்’ என்ற பெயர் நிலைத்ததாக நம்பப்படுகிறது. இது சிதம்பரம் கோயிலுடன் தொடர்புடைய புராண நம்பிக்கை.
தமிழ்நாட்டின் பெரும்பாலான பெரிய கோயில்கள் இந்து சமய அறநிலையத்துறையின் நிர்வாகத்தில் உள்ள நிலையில், சிதம்பரம் நடராஜர் கோயில் பொது தீட்சிதர்களின் நிர்வாகத்தில் இருந்து வருவதுதான் இந்தப் பிரச்சினையின் அடிப்படை.
1933-ஆம் ஆண்டிலேயே தொடங்கிய சட்டப் போராட்டம்
1927-ஆம் ஆண்டு சென்னை மாகாண இந்து சமய அறநிலையச் சட்டத்தின் அடிப்படையில், 1933-ஆம் ஆண்டு மே 8-ந் தேதி சிதம்பரம் கோயில் நிர்வாகத்துக்கான திட்டத்தை அறநிலைய வாரியம் வகுத்தது.
இதை எதிர்த்துப் பொது தீட்சிதர்கள் நீதிமன்றத்தை அணுகினர். கோயில் தங்களுடைய தனிப்பட்ட கோயில் என்றும், அறநிலையச் சட்டத்தின் கட்டுப்பாட்டுக்குள் வராது என்றும் வாதிட்டனர். ஆனால் கோயில் தனிப்பட்ட சொத்து என்ற வாதத்தை நீதிமன்றம் ஏற்கவில்லை.
1951-ஆம் ஆண்டில் கோயில் நிர்வாகத்தில் அரசு தலையிட மீண்டும் நடவடிக்கை எடுத்தபோதும் தீட்சிதர்கள் நீதிமன்றத்தை அணுகினர். இந்த வழக்குகளின் மூலம் பொது தீட்சிதர்கள் அரசியலமைப்புச் சட்டத்தின் 26-வது பிரிவின்படி தனித்துவமான மதப் பிரிவினர் என்ற சட்ட அங்கீகாரம் பெற்றனர்.
1987-ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர். ஆட்சியில் என்ன நடந்தது?
கோயில் நிர்வாகமும் சொத்துகளும் முறையாகப் பராமரிக்கப்படவில்லை என்ற புகார்களின் அடிப்படையில், 1982-ஆம் ஆண்டு தீட்சிதர்களுக்கு அறநிலையத்துறை நோட்டீஸ் அனுப்பியது.
இதன் தொடர்ச்சியாக எம்.ஜி.ஆர். ஆட்சிக் காலத்தில், 1987-ஆம் ஆண்டு ஜூலை 31-ந் தேதி சிதம்பரம் நடராஜர் கோயிலுக்குச் செயல் அதிகாரியை நியமித்து அறநிலையத்துறை உத்தரவிட்டது. இந்த நடவடிக்கை தங்களுடைய அரசியலமைப்பு உரிமையை மீறுவதாகக் கூறி தீட்சிதர்கள் எதிர்த்தனர்.
இந்த வழக்கில் 2009-ஆம் ஆண்டு பிப்ரவரி 2-ந் தேதி சென்னை உயர்நீதிமன்றம் செயல் அதிகாரி நியமனத்தை உறுதி செய்தது. அதே ஆண்டு செப்டம்பர் 15-ந் தேதி மேல்முறையீட்டு அமர்வும் இந்த முடிவை உறுதி செய்தது. இதையடுத்து தீட்சிதர்கள் உச்சநீதிமன்றத்தை அணுகினர்.
2014-ஆம் ஆண்டு தீட்சிதர்களுக்கு ஆதரவாக உச்சநீதிமன்றம்
2014-ஆம் ஆண்டு ஜனவரி 6-ந் தேதி உச்சநீதிமன்ற நீதிபதிகள் பி.எஸ்.சவுகான், எஸ்.ஏ.பாப்டே ஆகியோர் அடங்கிய அமர்வு முக்கியமான தீர்ப்பை வழங்கியது. பொது தீட்சிதர்கள் தனித்துவமான மதப் பிரிவினர் என்பதால், அரசியலமைப்புச் சட்டத்தின் 26-வது பிரிவின்படி கோயிலை நிர்வகிக்கும் உரிமை அவர்களுக்கு இருப்பதாக உச்சநீதிமன்றம் தெரிவித்தது.
அதே நேரத்தில், கோயில் நிர்வாகத்தில் முறைகேடுகள் நடந்தால் அரசு தலையிட முடியாது என்று உச்சநீதிமன்றம் கூறவில்லை. முறைகேடுகளைச் சரி செய்வதற்காகத் தற்காலிகமாகத் தலையிடலாம். ஆனால் அந்தக் காரணத்தைக் கூறி கோயில் நிர்வாகத்தை நிரந்தரமாக அரசின் கட்டுப்பாட்டில் வைத்திருக்க முடியாது என்பதுதான் தீர்ப்பின் முக்கியமான அம்சம். இதையடுத்து கோயில் நிர்வாகம் மீண்டும் பொது தீட்சிதர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
2022-ஆம் ஆண்டு மீண்டும் வெடித்த கனகசபை சர்ச்சை
2014-ஆம் ஆண்டு உச்சநீதிமன்றத் தீர்ப்புக்குப் பிறகு கோயில் நிர்வாகம் பொது தீட்சிதர்களிடம் இருந்து வந்த நிலையில், கனகசபை தரிசனம் தொடர்பாக மீண்டும் மோதல் வெடித்தது. கொரோனா காலத்துக்குப் பிறகு கனகசபையில் ஏறி நடராஜரைத் தரிசனம் செய்யப் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்படுவதாகப் புகார்கள் எழுந்தன.
இதையடுத்து 2022-ஆம் ஆண்டு மே 17-ந் தேதி தமிழக அரசு அரசாணை வெளியிட்டு, கனகசபையில் ஏறிப் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதித்தது. ஆனால் இந்த அரசாணை தங்களுடைய பாரம்பரிய நிர்வாக உரிமையில் தலையிடுவதாகப் பொது தீட்சிதர்கள் எதிர்த்தனர். பக்தர்கள் கூட்டம், பாதுகாப்பு, கோயிலின் வழிபாட்டு முறைகள் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டே கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதாக விளக்கம் அளித்தனர்.
மறுபுறம், கனகசபையில் தரிசனம் செய்வது பக்தர்களின் வழிபாட்டு உரிமை என்றும், அதைத் தீட்சிதர்கள் தன்னிச்சையாகக் கட்டுப்படுத்த முடியாது என்றும் அறநிலையத்துறை தரப்பில் வாதிடப்பட்டது.
அறநிலையத்துறை ஆய்வுக்கும் எதிர்ப்பு
2022-ஆம் ஆண்டு ஜூன் மாதம் கோயிலின் கணக்குகள் மற்றும் நிர்வாகம் தொடர்பாக ஆய்வு செய்ய அறநிலையத்துறை அதிகாரிகள் சென்றபோதும் மோதல் ஏற்பட்டது. கோயிலில் ஆய்வு மேற்கொள்ள அறநிலையத்துறைக்கு அதிகாரம் இல்லை என்று தீட்சிதர்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர்.
இந்தப் பின்னணியில்தான் கனகசபை தரிசன அரசாணையை எதிர்த்த வழக்குகளும், கோயிலின் பழமையான கட்டுமானங்கள், சொத்துகள் மற்றும் வருமானக் கணக்குகள் தொடர்பான மனுக்களும் சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டன.
இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதிகள் முனைவர் ஜி.ஜெயச்சந்திரன், இ.மனோகரன் ஆகியோர் அடங்கிய அமர்வு, இன்று (அக். 30) 80 பக்கத் தீர்ப்பை வழங்கியுள்ளது.
தீர்ப்பின் முழு விவரம்
தீட்சிதர்களின் உரிமை என்ற பெயரில் முறைகேடுகள்
சிதம்பரம் நடராஜர் கோயிலை நிர்வகிக்கும் உரிமை பொது தீட்சிதர்களுக்கு இருப்பதாக 2014-ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. ஆனால், அந்த உரிமை மற்றவர்களின் அடிப்படை உரிமைகளை மீறுவதற்கான அனுமதிச் சீட்டு அல்ல.
தனித்துவமான மதப் பிரிவினர் என்ற உரிமையைப் பாதுகாப்பதாகக் கூறிக்கொண்டு, மற்றவர்களின் அடிப்படை உரிமைகளை மீறுவதற்கோ, கோயிலை முறைகேடாக நிர்வகிப்பதற்கோ பொது தீட்சிதர்களுக்கு உரிமை இருப்பதாக எந்த நீதிமன்றத் தீர்ப்பிலும் அங்கீகரிக்கப்படவில்லை (In none of the judgments, the Courts have endorsed, Podhu Dikshitars have right to violate the fundamental right of others under the guise of protecting their institutional denomination character or give a right to mal-administer).
பொதுமக்களுக்கு அரசியல் சாசனம் வழங்கி இருக்கும் உரிமைகள் மீறப்படும்போதும், பொது அமைதிக்குப் பிரச்சினை ஏற்படும்போதும் அரசு தலையிடுவதைத் தடுக்க முடியாது (There cannot be any restriction on the State to interfere whenever the Constitutional rights of citizens are infringed and public peace is involved).
கனகசபை தரிசனத்தில் கட்டுப்பாடுகள் ஏன்?
கொரோனா காலத்துக்குப் பிறகு கனகசபையில் ஏறி தரிசனம் செய்யப் பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதாகப் பக்தர்கள் தரப்பில் குற்றம்சாட்டப்பட்டது. அரசாணை வெளியிடப்பட்ட பிறகுதான் பக்தர்கள் ஓரளவுக்கு அனுமதிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இந்தக் குற்றச்சாட்டைத் தீட்சிதர்கள் மறுத்தபோதும், பக்தர்கள் கூட்டம் அதிகரித்ததால் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதை ஒப்புக்கொண்டனர். 2025-ஆம் ஆண்டு ஜனவரி 13-ந் தேதி அப்போதைய தீட்சிதர்கள் செயலாளர் வெங்கடேச தீட்சிதர் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில், தினமும் 5,000 முதல் 10,000 பக்தர்கள் கோயிலுக்கு வருவதாகவும், கனகசபையின் இடவசதி குறைவாக இருப்பதால் பாதுகாப்புக் காரணங்களுக்காகக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால், நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட புகைப்படங்களைப் பார்க்கும்போது தீட்சிதர்கள் செயலாளர் அளித்த விளக்கம் சரியானதாகத் தெரியவில்லை (However, the assertion made above by the then Secretary, Podhu Dikshitars appears to be incorrect from the photos annexed as Annexure-I).
12 ஆண்டுகளாக உண்மையான கணக்குகளைத் தர மறுப்பு
2014-ஆம் ஆண்டு உச்சநீதிமன்றத் தீர்ப்புக்குப் பிறகு 12 ஆண்டுகளுக்கும் மேலாக நடராஜர் கோயிலின் வருமானம் முழுவதும் பொது தீட்சிதர்களின் கட்டுப்பாட்டில் உள்ளது. ஆனால் அந்த வருமானத்துக்கான உண்மையான, முழுமையான கணக்குகளைத் தர அவர்கள் தயாராக இல்லை (For more than 12 years the entire income of the temple is with the Podhu Dikshitars but they are not ready to share the true and full account of the income derived from the temple).
கோயில் வருமானம் மற்றும் செலவுகள் தொடர்பாகப் பொது தீட்சிதர்களும் இந்து சமய அறநிலையத்துறையும் தாக்கல் செய்த கணக்குகள் தடயவியல் தணிக்கைக்கு உட்படுத்தப்பட வேண்டிய நிலையில் உள்ளன (forensic auditing).
பழமையான கோயிலைச் சேதப்படுத்தியது வேதனை
பொது தீட்சிதர்களின் நிர்வாகத்தில் கோயிலின் பழமையான கட்டுமானங்கள் சேதப்படுத்தப்பட்டு, முறையாகப் பராமரிக்கப்படாமல் இருப்பது வேதனை அளிக்கிறது (The manner in which the ancient structure of the temple has been damaged and ill-maintained under the management of the Podhu Dikshitars is disheartening).
கோயிலுக்குள் எந்தவிதமான கட்டுப்பாடுகளும் இல்லாமல் புதிய கட்டுமானங்கள் மேற்கொள்ளப்பட்டிருப்பதே கோயில் சொத்துகள் முறைகேடாக நிர்வகிக்கப்பட்டிருப்பதைத் தெளிவாகக் காட்டுகிறது (New structures put up by them indiscriminately, makes sufficiently clear that there is mal-administration of the temple property).
சிற்பங்கள், ஓவியங்களுக்குச் சேதம்
பழமையான கோயிலுக்குள் புதிய கட்டுமானங்களை மேற்கொண்டபோது சிற்பங்களுக்கும் சுவரோவியங்களுக்கும் சேதம் ஏற்பட்டுள்ளது. இவ்வாறு கோயிலின் தொன்மையான சிற்பங்களையும் ஓவியங்களையும் சேதப்படுத்திக் கட்டுமானங்கள் மேற்கொண்டதற்கு பொது தீட்சிதர்கள் தரப்பில் ஏற்கத்தக்க விளக்கம் எதுவும் அளிக்கப்படவில்லை (We also find no plausible explanation from the side of the Podhu Dikshitars for the constructions made inside the Ancient Temple by causing damage to the sculptures and murals).
கோயிலை ‘Food Court’-ஆக மாற்றுவதா?
கோயிலுக்குள் அன்னதானம் என்ற பெயரில் நன்கொடைகள் வசூலிக்கப்பட்ட விதமும் கடுமையான விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது. அன்னதானத்துக்கான உணவுப் பட்டியலைக் குறிப்பிட்டு, தீட்சிதர்கள் பெயரில் நன்கொடை கோரும் விளம்பரங்கள் வைக்கப்பட்டுள்ளன.
பக்தர்களின் வழிபாட்டுத் தலமான கோயில், வணிக நடவடிக்கைகள் நடைபெறும் இடமாக மாற்றப்பட்டிருப்பதை இந்த விளம்பரங்களே வெளிப்படுத்துகின்றன (The hand bills exhibited in the name of Dikshitars within the temple premises inviting donation for Annadanam mentioning the menu speaks volume about how the temple has been converted into a commercial site).
கோயில் வளாகம் ‘Food Court’ போல மாற்றப்பட்டிருப்பதும் தீர்ப்பில் கடுமையாக விமர்சிக்கப்பட்டுள்ளது.
நீதிமன்றத் தலையீடு ஏன் அவசியம்?
கோயிலில் பூஜைகள், திருவிழாக்கள் நடத்துவது மதம் சார்ந்த உரிமை. ஆனால் கோயில் சொத்துகள், வருமானம், கட்டுமானங்கள் உள்ளிட்ட நிர்வாக நடவடிக்கைகள் அதிலிருந்து வேறுபட்டவை.
பொது தீட்சிதர்கள் மேற்கொண்டு வரும் மதச் சடங்குகளுக்குத் தொடர்பில்லாத நிர்வாக நடவடிக்கைகளைத் தகுதியான, சுதந்திரமான அமைப்பு உடனடியாகக் கண்காணிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது (The secular and non-religious activities connected to the public temple carried by the Dikshitars warrants immediate supervision by highly qualified at the same time independent body).
5 பேர் கொண்ட புதிய நிர்வாகக் குழு
கோயில் நிர்வாகத்தில் ஏற்பட்டுள்ள குறைபாடுகள் சரிசெய்யப்படும் வரை, நிர்வாகப் பொறுப்புகளை மேற்கொள்ள வல்லுநர்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது (Therefore, we constitute a Board of Management consisting of domain experts, who will take over the administration, till the ill is cured).
இந்தக் குழுவின் தலைவராக ஓய்வுபெற்ற நீதிபதி வி.பாரதிதாசன், இணைத் தலைவராக ஓய்வுபெற்ற நீதிபதி ஆர்.சுரேஷ்குமார் நியமிக்கப்பட்டுள்ளனர். ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி சி.ராஜேந்திரன் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்.
பொது தீட்சிதர்கள் செயலாளர், தமிழக இந்து சமய அறநிலையத்துறைச் செயலாளர் ஆகியோர் பதவி வழி உறுப்பினர்களாக இடம்பெறுகின்றனர்.
கனகசபை தரிசனம்: அனைவருக்கும் சம வாய்ப்பு
கனகசபையில் ஏறி நடராஜரையும் சிவகாமி அம்மனையும் தரிசனம் செய்ய அனைத்துப் பக்தர்களுக்கும் சமமான வாய்ப்பு வழங்கப்பட வேண்டும். இதற்கான ஏற்பாடுகளைப் பொது தீட்சிதர்களுடன் ஆலோசித்து, கோயிலின் பாரம்பரிய வழிபாட்டு முறைகளுக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில் புதிய நிர்வாகக் குழு மேற்கொள்ள வேண்டும் (In consultation with the Podhu Dikshitars to ensure fair and equal opportunity to the general public to have darshan of Sri Sabanayagar and Sivagami Ammal at Kanagasabai, by climbing atop, without violating the customary practices).
பக்தர்கள் பாடல்கள் பாடவும் முழக்கங்கள் எழுப்பவும் விரும்பினால், மற்ற பக்தர்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் கனகசபைக்குக் கீழே நின்று அனுமதிக்க வேண்டும்.
ஆக்கிரமிப்பு சொத்துகளை மீட்க வேண்டும்
கோயிலின் பழமையான கட்டுமானங்களுக்குச் சேதம் ஏற்படுத்தும் வகையில் மேற்கொள்ளப்பட்டுள்ள அனுமதியற்ற கட்டுமானங்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்காகத் தமிழ்நாடு பாரம்பரியச் சின்னங்கள் ஆணையத்துடன் கலந்தாலோசிக்க வேண்டும்.
ஆக்கிரமிப்பில் உள்ள கோயில் சொத்துகளை மாவட்ட நிர்வாகத்தின் உதவியுடன் மீட்க வேண்டும் (With the assistance of the District Administration, necessary steps to be taken to retrieve the temple properties under encroachment).
வாடகை மற்றும் குத்தகை பாக்கிகளையும் வசூலிக்க வேண்டும்.
கோயிலில் உள்ள நகைகள், மதிப்புமிக்க பொருட்கள் உள்ளிட்ட அசையும் சொத்துகளைக் கணக்கெடுக்க வேண்டும். ஏதேனும் பொருட்கள் காணாமல் போயிருந்தால் அவற்றை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கோயிலின் பழமையான கட்டுமானங்களுக்குச் சேதம் ஏற்படுத்தாமல் திருப்பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
நீதிபதிகள் குழுவுக்கு மாதம் ரூ.2 லட்சம்
பதவி வழி உறுப்பினர்களைத் தவிர்த்து நிர்வாகக் குழுவின் தலைவர், இணைத் தலைவர் மற்றும் ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி ஆகிய 3 பேருக்கும் தலா மாதம் ரூ.2 லட்சம் ஊதியம் வழங்க வேண்டும்.
இவர்களுக்குக் கார், ஓட்டுநர் மற்றும் காவல் ஆய்வாளர் அந்தஸ்திலான 24 மணி நேரப் பாதுகாப்பு வழங்க வேண்டும். இந்தச் செலவுகளை இந்து சமய அறநிலையத்துறை ஏற்க வேண்டும். அவசரச் செலவுகளுக்காக நிர்வாகக் குழுவுக்கு ரூ.10 லட்சம் வழங்கப்பட வேண்டும்.
கோயில் நன்கொடைகளுக்கு புதிய நடைமுறை
கோயிலுக்கு வழங்கப்படும் நன்கொடைகள் அனைத்தும் நிர்வாகக் குழு குறிப்பிடும் வங்கிக் கணக்கில் ஒரே மின்னணுக் கட்டண முறையின் மூலம் பெறப்பட வேண்டும் (Any donations to the temple must be through a single window e-payment made into the account mentioned by the Board of Management).
குறிப்பிட்ட திருப்பணிக்காக வழங்கப்படும் நன்கொடைகளைத் தனியாகக் கணக்கிட்டு, அந்தப் பணிக்காக மட்டுமே செலவிட வேண்டும். கோயில் சொத்துகள் மற்றும் அறக்கட்டளைகள் மூலம் கிடைக்கும் வருமானத்துக்குத் தனித்தனியாகக் கணக்குகள் பராமரிக்கப்பட வேண்டும். ஒவ்வொரு மாதமும் 5-ந் தேதிக்குள் இந்தக் கணக்குகள் நிர்வாகக் குழுவிடம் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
பூஜை, திருவிழா உரிமை தீட்சிதர்களுக்கே
கோயில் நிர்வாகத்தில் முறைகேடுகள் இருப்பதாகக் கடுமையாக விமர்சித்தாலும், தினசரி பூஜைகள் மற்றும் திருவிழாக்களை நடத்தும் உரிமை பொது தீட்சிதர்களுக்கே தொடரும். கோயிலில் ஏற்கெனவே பின்பற்றப்படும் வழிபாட்டு முறைகளுக்கு மாறாகச் செயல்படாமல் பூஜைகளையும் திருவிழாக்களையும் நடத்துவது அவர்களுக்கே உரிய தனிப்பட்ட உரிமை (In respect of daily rituals and periodical festivals, it is the exclusive prerogative of the Podhu Dikshitars and same to be conducted without violating the established customs and practices).
கோயிலின் வைப்புத்தொகைகள் உள்ளிட்ட வருமானங்களை அவர்கள் வழக்கம்போலக் கையாளலாம். ஆனால் அவற்றின் கணக்குகளை நிர்வாகக் குழுவிடம் சமர்ப்பிக்க வேண்டும்.
நிரந்தரமாக அரசு நிர்வாகத்தில் வைக்க முடியாது
கோயில் நிர்வாகத்தில் முறைகேடுகள் இருப்பதால் அரசு தலையிடலாம். ஆனால் அதையே காரணமாகக் கொண்டு கோயிலை நிரந்தரமாக அரசின் மேற்பார்வையில் வைத்திருக்க முடியாது. அவ்வாறு செய்வது அரசியலமைப்புச் சட்டத்தின் 26(டி) பிரிவின் கீழ் மதப் பிரிவினருக்கு வழங்கப்பட்டுள்ள நிர்வாக உரிமைக்கு எதிரானது (Any perpetual supervision would be violative of Article 26(d) of the Constitution of India). எனவே, புதிய நிர்வாகக் குழுவின் தலையீடு கோயில் நிர்வாகத்தில் ஏற்பட்டுள்ள குறைபாடுகளைச் சரிசெய்வதற்கான நடவடிக்கையாகவே அமைந்துள்ளது.
3 முக்கிய கேள்விகளுக்கு நீதிமன்றம் அளித்த பதில்
இந்த வழக்கில் 3 முக்கியமான கேள்விகளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் பதிலளித்துள்ளது.
முதல் கேள்வி: கனகசபை தரிசனத்தை அனுமதித்து தமிழக அரசு பிறப்பித்த அரசாணை, பொது தீட்சிதர்களின் அரசியலமைப்பு உரிமையை மீறுவதற்காகப் பிறப்பிக்கப்பட்டதா?
பதில்: இல்லை.
இரண்டாவது கேள்வி: பொது தீட்சிதர்களின் நிர்வாகத்தில் கோயிலின் பழமையான கட்டுமானங்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளனவா?
பதில்: ஆம்.
மூன்றாவது கேள்வி: கோயிலின் அசையும், அசையாத சொத்துகளுக்கு முறையான கணக்குகள் பராமரிக்கப்பட்டு தணிக்கை செய்யப்பட்டுள்ளனவா?
பதில்: இல்லை.
இதன் மூலம் கனகசபை தரிசன அரசாணையை எதிர்த்த தீட்சிதர்களின் வாதம் நிராகரிக்கப்பட்டுள்ளது. கோயிலின் பழமையான கட்டுமானங்கள் சேதப்படுத்தப்பட்டிருப்பதும், சொத்துகளுக்கான முறையான கணக்குகள் இல்லாததும் நீதிமன்றத்தின் ஆய்வில் உறுதியாகியுள்ளது.
உடனடியாகப் பொறுப்பேற்க உத்தரவு
புதிய நிர்வாகக் குழு உடனடியாகப் பொறுப்பேற்று, கோயிலின் பழமையான பெருமையை மீட்டெடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். நிர்வாகக் குழுவுக்குத் தேவையான உதவிகளை அரசு அதிகாரிகள் வழங்க வேண்டும். இந்த உத்தரவுகளுடன் 3 ரிட் மனுக்களையும் சென்னை உயர்நீதிமன்றம் முடித்து வைத்துள்ளது.
கோயிலை நிர்வகிப்பது தங்களுடைய பாரம்பரிய உரிமை என்று தொடர்ந்து வாதிட்டு வந்த பொது தீட்சிதர்களுக்கு, அந்த உரிமையின் பெயரால் முறைகேடுகளை அனுமதிக்க முடியாது என்பதை இந்தத் தீர்ப்பு தெளிவுபடுத்தியுள்ளது. அதே நேரத்தில் பூஜை, திருவிழா உள்ளிட்ட மத உரிமைகளில் தலையிடாமல், கோயிலின் சொத்துகளையும் வருமானத்தையும் பாதுகாப்பதற்கான நிர்வாக கண்காணிப்புக்கும் இந்த தீர்ப்பு வழிவகுத்துள்ளது.









