ஜாமீனில் வெளியே வந்த மறுநாளே தாயை அடித்துக் கொன்ற மகன்.. தருமபுரியில் நடந்தது என்ன?

By Mathi

|

Published on 31 Oct 2026, 6:40 AM

Dharmapuri Murder

தருமபுரி மாவட்டம் பழைய இண்டூரில், சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்த இளைஞர், திருந்தி வாழுமாறு அறிவுரை கூறிய தனது தாயை இரும்புக் கம்பியால் தாக்கிக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தருமபுரி மாவட்டம் பழைய இண்டூரைச் சேர்ந்தவர் சித்தன் (50). கட்டட மேஸ்திரியான இவரது மனைவி சின்னபாப்பா (45). இவர்களுக்கு சித்துராஜ் (24), தேவராஜ் (20) என 2 மகன்கள் உள்ளனர்.

ADVERTISEMENT

கூலி வேலை செய்து வந்த தேவராஜுக்கு மது உள்ளிட்ட போதைப் பழக்கங்கள் இருந்ததாகக் கூறப்படுகிறது. கடந்த ஆக. 3-ந் தேதி இண்டூர் பகுதியில் போலீசாரின் தொப்பியை அணிந்துகொண்டு, வீரமணி என்பவரைக் கத்தியால் தாக்க முயன்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து இண்டூர் போலீசார் தேவராஜைக் கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

இந்த வழக்கில் கடந்த அக். 28-ந் தேதி தேவராஜ் ஜாமீனில் வெளியே வந்தார். அவரை ஜாமீனில் வெளியே கொண்டுவருவதற்கான முயற்சிகளை அவரது தாய் சின்னபாப்பா மேற்கொண்டதாகவும் கூறப்படுகிறது.

ADVERTISEMENT

தாய் அடித்து கொலை

சிறையில் இருந்து வீட்டுக்கு வந்த தேவராஜிடம், இனிமேலாவது பிரச்சினைகளில் சிக்காமல் வேலைக்குச் சென்று ஒழுங்காக வாழுமாறு சின்னபாப்பா அறிவுரை கூறியுள்ளார். மேலும், அவரை ஜாமீனில் வெளியே கொண்டுவருவதற்குக் குடும்பத்தினர் அதிகப் பணம் செலவழிக்க வேண்டியிருந்ததையும் சுட்டிக்காட்டியதாகத் தெரிகிறது.

இந்த நிலையில், அக். 29-ந் தேதி இரவு 10.30 மணியளவில் தாய்க்கும் மகனுக்கும் இடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. தன்னை யாரும் கேள்வி கேட்கக் கூடாது என்று கூறிய தேவராஜ், வீட்டின் கதவை உள்பக்கமாகப் பூட்டிவிட்டு, இரும்புக் கம்பியால் சின்னபாப்பாவைச் சரமாரியாகத் தாக்கியதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

ADVERTISEMENT

இதில் தலையில் பலத்த காயமடைந்த சின்னபாப்பா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்து வந்த இண்டூர் போலீசார், சின்னபாப்பாவின் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை தொடர்பாக தேவராஜை கைது செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கஞ்சா போதையில் கொலையா?

இதனிடையே, தேவராஜ் கஞ்சா போதையில் தனது தாயைக் கொலை செய்ததாக முதலில் செய்திகள் வெளியாகின. சில செய்திகளில் மது போதையில் கொலை செய்ததாகவும், செலவுக்குப் பணம் தர மறுத்ததால் தகராறு ஏற்பட்டதாகவும் கூறப்பட்டது.

ஆனால், தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஏ.கே. அருண் கபிலன் அளித்த விளக்கத்தில், கொலை நடந்த நேரத்தில் தேவராஜ் கஞ்சா போதையில் இருந்ததற்கான ஆதாரம் இதுவரை கிடைக்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.

மேலும், தேவராஜின் நடவடிக்கைகளைக் கண்டித்துத் திருந்தி வாழுமாறு அவரது தாய் அறிவுரை கூறியதால் ஏற்பட்ட வாக்குவாதத்தில்தான் கொலை நடந்ததாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்!

Mathi

மா.ச.மதிவாணன் (Mathivanan Maran- Mathi) 30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel