பொது தீட்சிதர்களிடமிருந்து சிதம்பரம் கோயில் நிர்வாக அதிகாரம் பறிப்பு : உயர் நீதிமன்றம் அதிரடி!

By Kavi

|

Published on 30 Oct 2026, 7:17 PM

சிதம்பரம் நடராஜர் கோயில் நிர்வாகத்தை கண்காணிக்க ஓய்வு பெற்ற நீதிபதிகள் இருவரை நியமித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

சிதம்பரம் நடராஜர் கோயில் கனக சபை மீது ஏறி பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. 

ADVERTISEMENT

இதை எதிர்த்து பொது தீட்சிதர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அதேபோல அரசின் உத்தரவுக்கு ஆதரவாகவும் பல்வேறு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதிகள் ஜெயச்சந்திரன் மற்றும் மனோகரன் ஆகியோர் அடங்கிய அமர்வு இன்று (அக்டோபர் 30) உத்தரவு பிறப்பித்தனர்.

ADVERTISEMENT

அதில், ”கோயில் நிர்வாகத்தை தீட்சிதர்களிடம் ஒப்படைத்து கடந்த 2014 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம்  உத்தரவு பிறப்பித்த பிறகு கோயில் முறையாக நிர்வகிக்கப்படவில்லை. 

எனவே, நிர்வாகத்தை கண்காணிக்க உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதிகள் வி.பாரதிதாசன், ஆர் சுரேஷ் குமார் ஆகியோரை முறையே தலைவர் மற்றும் துணைத் தலைவராக நியமிக்கப்படுகின்றனர். ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி ராஜேந்திரன் உறுப்பினராகவும், பொது தீட்சிதர்கள் சங்கத்தின் செயலாளர், அறநிலையத்துறை செயலாளர் ஆகியோர் அலுவல் சாரா உறுப்பினர்களாகவும் நியமிக்கப்படுகிறார்கள்” என்று உத்தரவு பிறப்பித்தனர். 

ADVERTISEMENT

மேலும், “இந்தக் குழு கோயிலின் புராதன கட்டிடங்களுக்கு இடையூறாக அனுமதி இன்றி கட்டப்பட்டுள்ள தேவையற்ற கட்டிடங்களை அப்புறப்படுத்துவது தொடர்பாக தமிழ்நாடு புராதன சின்ன ஆணையத்துடன் கலந்தாலோசித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். 

ஆக்கிரமிப்பில் உள்ள கோயில் சொத்துக்களை மாவட்ட நிர்வாக உதவியுடன் மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 

கோயில் சொத்துக்களை கணக்கெடுத்து மாயமான மதிப்புமிக்க பொருட்களை மீட்கவும், கோயில் சொத்துகளின் வாடகை மற்றும் குத்தகை பாக்கியை வசூலிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றும் உத்தரவு பிறப்பித்தனர். 

கடந்த 12 ஆண்டுகளாக சிதம்பரம் கோயிலுக்கு வந்த வருமானம் குறித்து முழு கணக்கை சமர்ப்பிக்கவில்லை என்று அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள், பொது தீட்சிதர்கள் கோயிலை முறையாக நிர்வகிக்கவில்லை என்றும் வேதனை தெரிவித்தனர். 

புராதன கட்டடங்களுக்கு சேதம் ஏற்படுத்தாமல் கோயில் திருப்பணிகளை மேற்கொண்டு மத சடங்குகள் மரபுகளின் படி குடமுழுக்கு நடத்த வேண்டும். விரைவில் கோயிலின் பெருமையை மீட்டெடுக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் இந்த குழு மேற்கொள்ள வேண்டும். 

நிர்வாக குழுவுக்கு தேவையான அனைத்து உதவிகளையும், அரசின் அனைத்து துறை அதிகாரிகளும் வழங்க வேண்டும். கோயிலின் கனக சபையில் நின்று அனைத்து பக்தர்களும் தரிசனம் செய்யவும்,  தேவாரம், திருவாசகம் பாடவும் சம வாய்ப்பு வழங்குவதை நிர்வாக குழு உறுதி செய்ய வேண்டும்” என்றும் உத்தரவில் நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர்.

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்!

Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel