கோவையில் கைதி தப்பிய சம்பவம் தொடர்பாக 4 காவல்துறையினர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
கோவை மத்திய சிறையில் அடைப்பதற்காக அழைத்து வரப்பட்ட கைதி ராகவன், போலீசாரின் பிடியிலிருந்து தப்பியோடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாகக் கோவை மாநகர மற்றும் மாவட்ட போலீசார் இணைந்து 5 தனிப்படைகளை அமைத்துத் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
இது குறித்துக் காவல்துறை தரப்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், “குற்றம் சாட்டப்பட்ட ராகவன் கோவை விரைவு நீதிமன்ற நீதித்துறை நடுவர் முன்பு ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்றக் காவலுக்கு உட்படுத்தப்பட்டார். சிறைக்கு அழைத்து வரப்பட்டபோது, அவரைப் பாதுகாப்பாக அழைத்துச் சென்ற காவலர்களைத் தள்ளிவிட்டு, அவர் காவல்துறையினரின் பிடியிலிருந்து தப்பிச் சென்றார்.
உடனடியாக, கோவை மாநகர காவல்துறை மற்றும் பிற பாதுகாப்புப் படையினருடன் ஒருங்கிணைந்து தீவிர தேடுதல் நடவடிக்கை தொடங்கப்பட்டது. தப்பிச் சென்ற கைதியைக் கண்டுபிடித்துக் கைது செய்வதற்காக உயர் காவல் அதிகாரிகளின் மேற்பார்வையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
ட்ரோன் கண்காணிப்பு, சிசிடிவி கேமரா பதிவுகள் ஆய்வு மற்றும் தீவிர வாகனச் சோதனைகளின் உதவியுடன் தேடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தப்பிச் சென்ற கைதியை விரைவில் கைது செய்வதற்கு ஏதுவாக சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள அனைத்துக் காவல் பிரிவுகளும் உஷார்படுத்தப்பட்டுள்ளன.

கைதியைப் பாதுகாப்பாக அழைத்துச் செல்லும் பணியின்போது ஏற்பட்ட கவனக்குறைவுக்குப் பொறுப்பான 4 காவல்துறையினர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.









