வழக்கு போட போட வீறுகொண்டு எழுவோம்.. அஞ்சமாட்டோம்: திமுக எம்.எல்.ஏ. வசந்தம் கார்த்திகேயன்

By Mathi

|

Published on 31 Oct 2026, 2:51 PM

திமுகவினர் மீது ஆளும் தவெக அரசு எத்தனை வழக்குகள் போட்டாலும் அஞ்சமாட்டோம்; வழக்கு போடப் போட வீறுகொண்டு எழுவோம் என்று ரிஷிவந்தியம் தொகுதி திமுக எம்.எல்.ஏ. வசந்தம் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

கள்ளக்குறிச்சியில் கடந்த செப்டம்பர் 12-ந் தேதி நடைபெற்ற திமுக கண்டனப் பொதுக்கூட்டத்தில் முதல்வர் விஜய்யை விமர்சித்துப் பேசியதாக வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ. மீது சென்னை சைபர் கிரைம் போலீசார் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கில் இன்று (அக்டோபர் 31) சென்னை அண்ணா நகர் காவல் நிலையத்தில் வசந்தம் கார்த்திகேயன் விசாரணைக்காக ஆஜரானார்.

ADVERTISEMENT

இந்த விசாரணைக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ. கூறியதாவது: கடந்த மாதம் 12-ஆம் தேதி நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில், தமிழ்நாட்டினுடைய முதலமைச்சர் விஜய் பற்றி அவதூறாகப் பேசியதாக ஒரு பொய்யான வழக்கை என்மேல் பதிவு செய்திருக்கின்றார்கள். அதற்காக இன்னைக்கு என்னை விசாரணைக்கு அழைச்சிருந்தாங்க.

பொதுவாகச் சட்டமன்ற மரபுகளின்படி சைகை மொழியிலோ, உடல் மொழியிலோ பேசுவது என்பது தமிழகச் சட்டமன்ற வரலாற்றில் இதுவரை இல்லை. ஆனால், இன்றைக்கு ஆண்டுகொண்டிருக்கின்ற விஜய் ப்ரோ அவர்கள் சட்டமன்றத்திலே முன்னாள் முதல்வர், மரியாதைக்குரிய தளபதி (மு.க.ஸ்டாலின்) அவர்களை உடல் மொழியிலும் சைகை மொழியிலும் குறிப்பிட்டு அவர் நடந்துகொண்ட விதத்தைக் கண்டிக்கின்ற விதமாக, கடந்த மாதம் 12-ஆம் தேதி கள்ளக்குறிச்சி மாவட்டத்திலே ஒரு 10,000 பேர் கொண்ட மிகப்பெரிய கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ADVERTISEMENT

அந்த ஆர்ப்பாட்டத்திலே முதலமைச்சருடைய செய்கைகளையும், அவர் மீதுள்ள குற்றச்சாட்டுகளையும், விமர்சனங்களையும் வைத்துத்தான் கண்டன ஆர்ப்பாட்டம் செய்தோம்.

நாங்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தை வைத்துக்கிட்டு, முதலமைச்சர் விஜய் வாழ்க அல்லது முதலமைச்சர் நல்லா சிறப்பாகச் செயல்படுறார் அப்படியெல்லாம் சொல்வதற்காகக் கண்டன ஆர்ப்பாட்டம் அல்ல.

ADVERTISEMENT

நான் ஒரு சட்டமன்ற உறுப்பினர். நான் ஏதோ ஊடகங்களிலோ, டிவியிலோ பார்த்துட்டுப் பேசல. சட்டமன்றத்திலே என் கண் முன்னால் அவர் நடந்துகொண்ட விதத்தை நான் நேரடியாகப் பார்த்தேன். ஆக, நான் கண்ணால் பார்த்த ஒரு விஷயத்தை மக்கள் மன்றத்திலே சொல்ல வேண்டியது என்னுடைய கடமை.

அந்தக் கடமையை நாங்கள் செய்யவிடாமல், குறிப்பாக தவெக அரசாங்கத்தைப் பொறுத்தமட்டில், தமிழகத்திலே திராவிட முன்னேற்றக் கழகத்தில் யாரெல்லாம் சிறப்பாகச் செயல்படுவார்களோ, அது அண்ணன் நேருவாக இருந்தாலும், அண்ணன் வேலுவாக இருந்தாலும், இப்ப கைது செய்யப்பட்டிருக்கின்ற மகேஷாக இருந்தாலும், முன்னாள் ஒன்றிய அமைச்சர் அண்ணன் ராசாவாக இருந்தாலும், மா.சு.வாக இருந்தாலும், சேகர்பாபுவாக இருந்தாலும், பல்வேறு பேர் மேல வழக்குப் போட்டிருக்காங்க.

அவங்க வழக்குப் போடுறதுடைய நோக்கம், எங்கெல்லாம் யாரெல்லாம் சிறப்பாகப் பணியாற்றுவார்களோ, அவர்களைத் தேடித் தேடிப் பழிவாங்க வேண்டும், அவர்களுடைய செயல்பாடுகளை முடக்க வேண்டும் என்று நினைக்கின்றார்கள். அது நிச்சயம் நடக்காது. நிச்சயம் நடப்பதற்கு வாய்ப்பே இல்லை.

நீங்கள் வழக்குப் போடப் போட வீறுகொண்டு எழுவோமே தவிர, நாங்கள் அதற்கெல்லாம் அஞ்சுகிற ஆட்களே இல்லை. நீங்கள் எத்தனை வழக்கு வேண்டுமானாலும் போடுங்கள். அதை எதிர்கொள்வதற்கு நாங்கள் தயாராக இருக்கின்றோம்.

ஆகவே, சட்டமன்றத்திலே தமிழ்நாட்டினுடைய முதலமைச்சர் விஜய் ப்ரோ, நீங்க நடந்துகொண்ட விதத்தினுடைய விளைவு, நீங்கள் நடந்துகொண்ட அநாகரிகத்தைக் கண்டிக்கிற விதமாகத் தமிழகத்திலே ஒரு ஆர்ப்பாட்டத்தை நடத்தியது திராவிட முன்னேற்றக் கழகம். ஏதோ திமுக மட்டுமல்ல. தமிழகத்தில் உள்ள அனைத்துக் கட்சித் தலைவர்களும் அவரை வன்மையாகக் கண்டித்தார்கள். கருத்துகளைப் பதிவிட்டார்கள்.

அந்த அடிப்படையிலே, கள்ளக்குறிச்சி மாவட்ட திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் நடந்த கண்டனப் பொதுக்கூட்டத்தில் நான் ஆற்றிய உரைகளில் சிலவற்றை எடிட் செய்து, மார்பிங் செய்து, ரீல்ஸ் ஆட்சி நடத்துகின்ற தவெக அரசாங்கம் என்மீது ஒரு பொய்யான புகாரைக் கொடுத்திருக்கின்றார்கள். அதற்கான விளக்கத்தைக் காவல்துறையிடம் கொடுத்திருக்கின்றோம். நீதிமன்றத்திலே வழக்கை எதிர்கொள்வோம்.

செய்தியாளர்கள் கேள்விகளும் வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ. பதில்களும்:

செய்தியாளர்: சார், இங்க மட்டும்தான் வழக்குப் பதிவு பண்ணப்பட்டதா? இல்ல வேற…?

வசந்தம் கார்த்திகேயன்: இல்ல, என் பேர்ல வந்து கள்ளக்குறிச்சியில வழக்குப் பதிவு பண்றதா சொல்லிருக்காங்க. கடலூர்ல சொல்லிருக்காங்க. இன்றைய தினம் திண்டிவனத்துல கூட ஒரு வழக்கு இருக்கிறதா சொல்றாங்க. ஆக, எங்க வழக்குப் பதிவு பண்ணாலும் சட்டப்படி எதிர்கொள்வோம்.

செய்தியாளர்: விசாரணையில என்ன சொன்னாங்க?

வசந்தம் கார்த்திகேயன்: விசாரணையில அவங்க ஒன்னும் சொல்லல. விசாரணையில அவங்க என்ன சொல்றாங்க? “இது உண்மையா?” என்று கேட்டார்கள். நாங்க பேசுன ஆடியோ ஆதாரங்கள் எல்லாம் கொடுத்திருக்கிறோம். அவர்கள் மார்பிங் செய்த வீடியோவை, எடிட்டை வச்சிருக்காங்க. அவர்கள் என்ன செய்வார்கள் காவல்துறை? மேலிருந்து சொல்றதை அவங்க இம்ப்ளிமென்ட் பண்றாங்க. அவங்ககிட்ட எந்த அதிகாரமும் இல்ல. அவங்க என்ன பண்ணுவாங்க? மேலிருந்து “புடி”ன்னா புடிக்கிறாங்க, அவ்வளவுதான்.

செய்தியாளர்: முதல்வர் விஜய் அவர்களைப் பத்திப் பேசும்போது, “உங்க வாய் கூடத்தான் கோணையா இருக்குது…”ன்னு..

வசந்தம் கார்த்திகேயன்: உண்மைதான்! நான் என்ன சொல்றேன்… இல்ல இல்ல இல்ல இல்ல.. தமிழ்நாட்டினுடைய முன்னாள் முதல்வர் தளபதி (மு.க.ஸ்டாலின்) முகத்தைப் பத்திப் பேசுகிறார் விஜய். சைகை மொழியிலே சொல்லுகின்றார். அதற்கு நான் விளக்கம் கொடுத்தேன், உண்மைதான்.

எங்களுடைய முன்னாள் முதல்வர், இன்றைய தளபதி அவர்கள் மிசா காலத்திலே… இந்த நாட்டினுடைய ஒரு பதட்டமான சூழ்நிலையில் நாட்டுக்காக, மக்களுக்காகச் சிறை சென்றவர், மிசாவிலே. அன்றைய தினம் அந்தச் சிறைச்சாலையில் ஏற்பட்ட கொடுமையில் அவர்களுக்கு உடலிலே பல காயங்கள் ஏற்பட்டது உண்மை, ஒத்துக்கொள்கிறோம். ஆனால், இன்றைக்கு ஆண்டுகொண்டிருக்கின்ற முதல்வர் விஜய் அவர்களே, எங்களுடைய பார்வையில் உங்களுடைய முகமும் கோணலாகத்தான் இருக்கிறது என்று சொன்னோம்.

செய்தியாளர்: என்ன காரணமும்னு…

வசந்தம் கார்த்திகேயன்: காரணம் என்ன? உங்க வாய்… எங்க தலைவருடைய வாய் கோணலா இருக்கிறது மிசாவிலே அடிபட்டு அன்னைக்குக் காரணம்னு சொல்றோம். இப்ப உங்க வாய் கோணலா இருக்கிறதுக்கு நீங்க தினமும் என்னத்தைப் பேசுறீங்க, என்ன பண்றீங்கன்னு… இது என்ன சார், ஒரு வாய் கோணலா இருக்குறதுக்கு ரெண்டே விஷயம்தான். அதிகமா… இல்ல இல்ல.

கோணல் என்பது நல்லா மீண்டும் சொல்கின்றேன்… கோணல் என்ற வார்த்தைக்கு அர்த்தம், நம்ம வாயில இருந்து வர்ற வார்த்தைகள் இருக்கின்றதல்லவா, அந்த வார்த்தையில் தவறு இருந்தால்கூட அதற்குக் ‘கோணல்’ என்றுதான் தமிழிலே அர்த்தம்.

நாம எதை வேணாலும் உட்கார்ந்து நினைச்சுக்கலாம். எனக்குத் தெரிஞ்சு வாயை வச்சுக்கிட்டு பேசத்தான் முடியும், வேற ஒன்னும் பண்ண முடியாது.

செய்தியாளர்: சார், அதே மாதிரி நீங்க ஆ. ராசா எல்லாம் வழக்கு போட்டது தவறுன்னு சொல்றீங்க. அவரு வந்துட்டு நிர்மல்குமாரின் தாயாரைப் பத்திப் பேசுனதை நீங்க ஆதரிக்கிறீங்களா?

வசந்தம் கார்த்திகேயன்: இல்லை இல்லை, அவர் தாயாரைப் பத்திப் பர்டிகுலரா அப்படிப் பேசல. நாங்க அப்படி எல்லாம் சொல்லல. அதாவது இல்லை இல்லை…

செய்தியாளர்: கனிமொழி மேடமே அப்போ எதிர்த்தாங்க… அவங்களே அதை எதிர்த்தாங்களே…

வசந்தம் கார்த்திகேயன்: இல்லை இல்லை.. கனிமொழி மேடம் வந்து… அதுதான். சோசியல் மீடியாவுல பேசுகின்ற ஒரு செய்தியைத் திரித்து வெளியிடப்படுகிறது. இப்ப நான் இந்த இடத்துல ஒரு பேட்டி கொடுக்கிறேன். இந்தப் பேட்டியைத் திரித்துக் கன்னியாகுமரியில ஒருத்தவங்க பார்த்தாங்கன்னா அது தவறாத்தான் தெரியும். ஆக, உண்மையான செய்தி போகும்போதுதான் உண்மையா, பொய்யான்னு தெரியும்.

செய்தியாளர்: மீண்டும் உங்களுக்கு விசாரணைக்கு வர அழைத்துள்ளார்களா? சொல்லிருக்காங்களா?

வசந்தம் கார்த்திகேயன்: எப்ப கூப்பிட்டாலும் வர்றதுக்குத் தயாரா இருக்கிறேன். நான் மீண்டும் சொல்கின்றேன், நான் தவறான வார்த்தைகளைச் சொல்லவில்லை. நீங்களாகக் கற்பனை செய்து கொண்டால் அதற்கு நான் என்ன செய்ய முடியும்? இவ்வாறு வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ. கூறினார்.

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்!

Mathi

மா.ச.மதிவாணன் (Mathivanan Maran- Mathi) 30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel