‘பெண்களுக்கு பெப்பர் ஸ்பிரே கொடுங்க விஜய்’ – திமுக மகளிரணி ஆர்ப்பாட்டத்தில் கொந்தளித்த கனிமொழி எம்.பி!

By Pandeeswari Gurusamy

|

Published on 31 Oct 2026, 12:37 PM

தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்கேடு மற்றும் விலைவாசி உயர்வைக் கண்டித்து, தமிழகம் முழுவதும் திமுக மகளிர் அணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சென்னையில் திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்பி தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், முன்னாள் அமைச்சர் பி.கே. சேகர்பாபு உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

அப்போது ஆர்ப்பாட்டத்தில் கனிமொழி எம்பி பேசுகையில், “பெண்கள் நினைத்தால் செய்ய முடியாதது என்று எதுவுமே இல்லை. ‘தெரியாமல் ஓட்டுப் போட்டுவிட்டோம்; தப்பாக மாறிவிட்டது’ என்று வாக்களித்த பெண்களும், அக்குடும்பங்களைச் சேர்ந்த இளைஞர்களும் வருத்தப்படும் சூழலில், பெண்கள் அனைவரும் ஒன்று கூடிவிட்டார்கள். தமிழ்நாடு முழுவதும் உள்ள பெண்கள் இன்று தெருவில் இறங்கிப் போராடத் தொடங்கிவிட்டார்கள்; அதனால் நிச்சயம் விரைவில் மாற்றம் வரும்.

ADVERTISEMENT

ஆட்சிப் பொறுப்புக்கு வருவதற்கு முன் பெரிதாகப் பிரச்சாரம் செய்யவில்லை என்றாலும், பிரச்சாரம் செய்த இடங்களில் எல்லாம், ‘இது நாடா… காடா…’ என்று தம்பி ‘ஸ்வீட் புரோ’ ஜோசப் விஜய் கேட்டார். ‘இதைவிட ஒரு நல்ல ஆட்சியை என்னால் கொடுக்க முடியும்’ என்றும் அவர் கூறினார். இந்தியாவிலேயே ஒரு சிறந்த ஆட்சியை மு.க.ஸ்டாலின் நடத்திக்கொண்டிருப்பதாக அனைவரும் பாராட்டி வரும் சூழலில், ‘இதைவிடச் சிறப்பாக எப்படி ஆட்சி கொடுக்கப்போகிறார்கள் என்றுதான் பார்த்துவிடுவோமே’ என நினைத்து மக்கள் ஓட்டளித்தார்களா என்று தெரியவில்லை.

‘பெண்களுக்குப் பாதுகாப்பு கொடுப்போம்’ என்றெல்லாம் கூறி, மக்களை ஏமாற்றிவிட்டு ஆட்சிப் பொறுப்புக்கு வந்தார்கள். விஜய் நடிகராக இருந்தபோது வந்த ஒரு திரைப்படத்தில், யாரோ ஒருவன் ஒரு பெண்ணிடம் தவறாக நடந்துகொண்டால் அவனை அடித்துக் கட்டி வைப்பார்; அதேபோல உண்மையிலும் தெறிக்கவிட்டு விடுவார் என்று அனைவரும் நினைத்தார்கள். ஆனால் இன்று, பெண்களுக்கு எதிரான வன்முறையில் ஈடுபடுபவர்களை கட்டி வைக்க வேண்டும் என்று நினைத்தால், முதலில் அவர்கள் கட்சிக்காரர்களைத் தான் கட்டி வைக்க வேண்டும்.

ADVERTISEMENT

இப்போது 20-க்கும் மேற்பட்ட தவெக நிர்வாகிகள் பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்டிருக்கிறார்கள். குற்றங்களில் ஈடுபட்டவர்கள் அனைவரும் தவெக-வைச் சேர்ந்த குற்றவாளிகள்தான். சில நேரங்களில் குற்றம் செய்தவர்கள் ஆளுங்கட்சியில் போய் சேர்வார்கள்; ஆனால், தவெக-வில் குற்றம் செய்ய வேண்டும் என்று நினைப்பவர்கள் அனைவரும் போய் சேர்ந்துவிட்டார்கள் போலிருக்கிறது. நான்கு பக்க அளவிற்கு தவெக நிர்வாகிகள் செய்த குற்றப் பட்டியல் உள்ளது.

சில நாட்களுக்கு முன்னால், இரண்டரை வயதுக் குழந்தை பாலியல் ரீதியாகப் பாதிக்கப்பட்டுள்ளது. பின்னர் அறுவை சிகிச்சை செய்து அக்குழந்தையைக் காப்பாற்றியுள்ளனர். மனிதத்தன்மையே இல்லாமல் இரண்டரை வயதுக் குழந்தையைப் பலாத்காரம் செய்யக்கூடியவர்களை எல்லாம் நிர்வாகிகளாக வைத்துக்கொண்டிருக்கும் ஒரு இயக்கம் இருக்கிறது என்றால், அது தவெக தான்.

ADVERTISEMENT

தூத்துக்குடியில் மாவட்ட தவெக இளைஞரணி அமைப்பாளர் பாலமுருகன், வேலை வாங்கித் தருவதாகச் சொல்லிப் பெண்ணை வன்கொடுமை செய்து கொலை மிரட்டல் விடுத்துப் பயமுறுத்தியுள்ளார். சேலம் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் என்பவர் 50-க்கும் மேற்பட்ட பெண்களை ஆபாச படம் எடுத்து, அவர்களைத் தொடர்ந்து மிரட்டி வருகிறார். ராமநாதபுரம் பகுதியைச் சேர்ந்த கட்சி நிர்வாகிகள் ஜெயபால், பாலமுருகன் ஆகியோர் பாலியல் குற்றங்களில் சம்பந்தப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்கள். ‘ஸ்ரீவைகுண்டம் எம்.எல்.ஏ. குற்றவாளிகளுக்கு ஆதரவாக இருக்கிறார்’ என்று பாதிக்கப்பட்ட பெண் பகிரங்கமாகக் குற்றம்சாட்டியுள்ளார்.

ஆனால், ‘உங்களுக்கு அண்ணனாக, தம்பியாக இருக்கிறேன்’ என்று சொன்ன விஜய் என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறார்? தன் கட்சி எம்.எல்.ஏ-வைப் பாதுகாப்பதற்காகப் பாதிக்கப்பட்ட பெண்ணை மிரட்டி வழக்கை வாபஸ் வாங்க வைக்கிறார்கள்.

அக்கட்சியில் இருக்கக்கூடிய நிர்வாகிகள் குட்கா கடத்தல், போதைமருந்து கடத்தல், கஞ்சா கடத்தல் போன்றவற்றைத் தொழிலாகக் கொண்டவர்களை எல்லாம் கட்சியில் சேர்த்துள்ளனர். அதுமட்டுமின்றி, பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுபவர்களும் அவர்களது கட்சியில் இருக்கிறார்கள். ‘பாதுகாப்பான தமிழகத்தை உருவாக்குவோம்’ என்று கூறி ஆட்சிக்கு வந்த பின்னரும் 700 கொலைகளும், பெண்களுக்கு எதிரான 400 வன்முறைச் சம்பவங்களும் நடந்துள்ளன. இதுதான் பாதுகாப்பான தமிழகத்தை உருவாக்கும் லட்சணமா? என்று நான் கேட்கிறேன்.

முதலமைச்சருக்குக் கீழேதானே காவல்துறை உள்ளது? காவல்துறை என்ன செய்கிறது? திமுக என்ன கூட்டம் நடத்துகிறது? அதற்கு அனுமதி கொடுக்கக் கூடாது; எதிர்க்கட்சியினர் என்ன செய்கிறார்கள், யார் ட்விட்டரில் (X) என்ன பதிவிடுகிறார்கள் என்பவர்களைக் கைது செய்… இதுதான் காவல்துறைக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் வேலையா?

மேடையில் யார் என்ன பேசுகிறார்கள், ஒரு வார்த்தை தவறாகப் பேசிவிட்டால் அல்லது அவர்களுக்குப் பிடிக்காத செய்தி ஏதாவது மேடையில் வந்துவிட்டால் அவர்களைக் கைது செய்ய வேண்டும் என்பதற்காகக் காவல்துறையினர் நமது பின்னாலேயே சுற்றுவதுதான் அவர்களின் முழுநேர வேலையாக உள்ளது. அதனால், தமிழகத்தில் தற்சமயம் பாதுகாப்பாக இருப்பது திமுகவினர் மட்டும்தான்.

திமுகவினரைக் கைது செய்து ஜெயிலில் வைப்பதில் காவல்துறையினர் பிஸியாக உள்ளனர்; இதனால் கைதிகள் தப்பிப்போவது அவர்களுக்குத் தெரிவதில்லை. நாம் இதுவரை தேனி சிறையில் இருந்து தப்பிய 17 கைதிகளைப் பற்றி மட்டும்தான் பேசிக்கொண்டிருக்கிறோம். தவெக ஆட்சிக்கு வந்த பிறகு இதுவரை 50-க்கும் மேற்பட்ட கைதிகள் தப்பிச் சென்று இருக்கிறார்கள். இப்போது ஜெயில் எப்படி ஆகிவிட்டது என்றால், நீங்கள் உள்ளே போகலாம் என நினைத்தால் வெளியே வந்துவிடலாம்; அப்புறம் தேடி பாதிப் பேரைப் பிடித்து மீதிப் பேரை விட்டுவிடுவார்கள். இதுதான் தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு இருக்கும் நிலை!

குழந்தைகளுக்குப் பாதுகாப்பு இல்லை, வீட்டில் இருக்கும் பெண்களுக்குக் கூட பாதுகாப்பு இல்லை. நீங்கள் தேர்தல் நேரத்தில் ‘நண்பா.. நண்பீஸ்.., ஓட்டு வாங்கிக் கொடுங்கள்’ என்றீர்கள் அல்லவா… அந்த குழந்தைகளுக்குக் கூட பாதுகாப்பு வழங்க முடியாத துப்பற்ற ஆட்சியை நீங்கள் நடத்திக்கொண்டிருக்கிறீர்கள். கொஞ்சமாவது மனசாட்சி வேண்டாமா? ‘குழந்தைகள் கடத்தப்பட்டு விற்கப்படும் தலைநகரமாகத் தமிழ்நாடு மாறிக்கொண்டிருக்கிறது’ என்று பத்திரிகைகள் எழுதக்கூடும் அளவிற்குத் தமிழ்நாடு மோசமாக உள்ளது.

இந்த ஆட்சிக்கு நாம் விரைவில் முடிவு கட்ட வேண்டும். தவெக ஆண்டால் தமிழ்நாடு இருண்ட காலத்திற்குத் தள்ளப்படும் என்பது தெளிவாகிவிட்டது. முதலீடுகள் வருவதில்லை; சட்டம்-ஒழுங்கு சரியில்லை; பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை. எந்தப் பக்கம் திரும்பினாலும் நிர்வாகம் என்ற ஒன்று இருக்கிறதா இல்லையா என்று தெரியாத அளவிற்குச் சீர்கேடான நிலை உள்ளது. இவர்களை வீட்டிற்கு அனுப்புவதைத் தவிரத் தமிழகத்தைப் பாதுகாக்க வேறு வழியில்லை.

விலைவாசி உயர்வு அதிகரித்துக்கொண்டே போகிறது. வெங்காயம், அரிசி, பருப்பு, எண்ணெய் என அனைத்தின் விலையும் அதிகரித்துக்கொண்டே வருகிறது. நீங்கள் குழந்தைகளுக்கு மோதிரம் எல்லாம் போட வேண்டாம், குழந்தைகளைப் பாதுகாப்பாக வைத்துக்கொள்ளுங்கள். நீங்கள் ‘அண்ணன் சீர் புடவை’ என்று எதையெல்லாம் கொடுக்கிறோம் என்று சொல்கிறீர்கள்… நீங்கள் ஒன்றை தயவுசெய்து கொடுங்கள் விஜய் அவர்களே! ரேஷன் கடை வழியாகத் தமிழகத்தில் இருக்கும் ஒவ்வொரு பெண்ணிற்கும் பெப்பர் ஸ்பிரே (Pepper Spray) ஒன்றைக் கொடுத்துவிடுங்கள். ஏனென்றால் உங்கள் போலீஸ், உங்கள் படை எல்லாம் யாரையும் காப்பாற்றப் போவதில்லை; அதனால் எங்கள் சகோதரிகள் அனைவருக்கும் ரேஷன் கடை வழியாக பெப்பர் ஸ்பிரேவையாவது கொடுங்கள்!” என ஆவேசமாகத் தெரிவித்தார்.

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்!

Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel