– சக்திவேல் வீராசாமி
“2047-ஆம் ஆண்டுக்குள் இந்தியா வளர்ந்த நாடாக மாற்றப்படும்”
“2047-ஆம் ஆண்டுக்குள் இந்தியா 30 டிரில்லியன் டாலர் பொருளாதாரம் கொண்ட நாடாக மாற்றப்படும்”
“2047-ஆம் ஆண்டுக்குள் இந்தியாவில் எந்த நிர்வாகத் தாமதமும் இருக்காது”
“2047-ஆம் ஆண்டுக்குள் இந்தியாவில் 7000 கிலோமீட்டர் புல்லட் ரயில் பாதை உருவாக்கப்படும்”
“2047-ஆம் ஆண்டுக்குள் இந்தியாவின் உள்கட்டமைப்பு பிரச்சனைகள் அனைத்தும் சரிசெய்யப்படும்”
“2047-ஆம் ஆண்டுக்குள் இந்தியா உலகைத் தலைமை தாங்கும் நாடாக மாற்றப்படும்”
இவையெல்லாம் மிகச் சமீபநாட்களில் பிரதமர் மோடி உள்ளிட்ட பாஜக பிரமுகர்கள் பேசிய வாக்கியங்கள். இவை ஏதோ போகிறபோக்கில் அவர்கள் பேசியது அல்ல. ஒருவர் பேசினால் அது தனிப்பட்ட கருத்து. இரண்டு பேர் பேசினால், முந்தைய நபரின் தாக்கம் எனச் சொல்லலாம். ஆனால், சொல்லிவைத்தாற்போல அனைவரும் பேச ஆரம்பித்திருப்பது ‘அஜெண்டா’.
நிகழ்காலத்தின் தோல்விகளை மறைக்கவும், மக்கள் எழுப்பும் கேள்விகளை முறியடிக்கவும், ‘2047’ என்ற அஜெண்டாவை கையில் எடுத்திருக்கிறது பாஜக.
நாளை… நாளை…நாளை…
நம் அனைவருக்கும் நன்றாகவே நினைவிருக்கும். 2014ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியில் அமர்ந்ததும், இந்தியாவுக்கு ‘அச்சே தின்’ ஆரம்பித்துவிட்டது என்றது பாஜக. அதாவது, இந்தியாவுக்கு நல்ல காலம் பிறந்துவிட்டது என்றது. இந்த நல்ல காலத்திற்கு முதலில் 2019 வரை இலக்கு அறிவித்தார்கள். பின் 2019 வந்த போது, 2024-க்கு அந்த இலக்கை தள்ளிப்போட்டார்கள். இப்போது, 2024ல் வென்று ஆட்சியில் இருக்கையில், 2047 வரை இலக்கை நகர்த்தியிருக்கிறார்கள். ஏதோ நண்பர்கள் குழு வாட்ஸ் அப்பில் டூர் பிளான் போடுவது போல போட்டுக் கொண்டிருக்கிறார்கள். மார்ச்டா… ஜூலைடா… டிசம்பர்டா என்று.
2029 பயம்… 2047 வலை

இந்த முறை 2047 வரை ஏன் இலக்கை தள்ளிப்போடுகிறார்கள் என்பதற்குப் பின்னால் ஒரு சூட்சுமம் இருக்கிறது. அதாவது, இது இவர்களின் தொடர்ச்சியான மூன்றாவது ஆட்சிக்காலம். முழுமையாக 12 ஆண்டுகள் இந்தியாவை ஆண்டிருக்கிறார்கள். ஒரே பிரதமர், ஏறக்குறைய ஆட்சிக்கு வெளி அழுத்தமே இல்லை என்று நிம்மதியாக ஆண்டிருக்கிறார்கள். ஆனாலும், போற்றத்தக்க, குறைந்தபட்சம் சமாதானம் செய்துகொள்ளும் மாற்றம் கூட இல்லை. இந்தச் சூழலில் மீண்டும் 2029 என்று சொல்ல முடியாது. எவரையும் மூன்றாம் முறை ஏமாற்ற முடியாது என்பது பழமொழி! எனவே, 2047 எனும் தொலைதூர இலக்கை நிறுவி தப்பிக்கப் பார்க்கிறார்கள்.
‘புதிய இந்தியா’ பிம்பமும்… இன்றைய நிஜமும்!
நரேந்திரமோடி இந்தியாவுக்கு பிரதமராக வந்தது, சாதாரண ஆட்சிமாற்றமாக பிம்பப்படுத்தப்படவில்லை. அவர், இந்தியாவின் தலைவிதியை மொத்தமாக மாற்றப்போகிறார் என்றார்கள். ‘புதிய இந்தியா’ என்ற பெரும் கதையாடலை உருவாக்கி பரப்பினார்கள். முந்தைய ஆட்சிகளின் தடயம் சிறிது கூட இருக்கக்கூடாது என்று, அரசு இணையதளம் முதல் சட்டப் புத்தகங்கள் வரை அடிப்படை மாற்றங்களைச் செய்தார்கள். 2014ல் விவரம் தெரிய ஆரம்பித்த குழந்தைக்கு, அதற்கு முன்னால் இந்தியாவுக்கு வரலாறு இருந்ததே தெரியாமல் பார்த்துக் கொண்டார்கள். ஆனால், இந்தியாவின் நிலை இப்போது எப்படியிருக்கிறது?
கானல் நீரான ஆத்மநிர்பார்

பாஜகவின் முக்கியமான முழக்கம், அவர்கள் பெருமையாக சூடிக்கொள்ளும் முழக்கம் ஆத்மநிர்பார். இந்த ஆத்மநிர்பார் எப்படியிருக்கிறது? விவசாயம் முதல் விமானம் வரை எந்தத் துறையை எடுத்தாலும், அத்தனைத் துறையிலும் ஏற்றுமதியை நம்பித்தான் பிழைப்பு நடக்கிறது. அதிலும் முக்கியமாக எந்த நாட்டின் வளர்ச்சி விகிதத்தை முறியடிப்போம் என்று சவால்விட்டார்களோ, அந்த நாடான சீனா தான் இந்தியாவின் முக்கியமான இறக்குமதிக் கேந்திரமாக விளங்குகிறது. எத்தனைப் பெரிய அவமானம்? இதை விட, ராணுவத்திலேயே இந்தியாவின் இறக்குமதி நின்றபாடில்லை. ராணுவத் தளவாடங்களை இறக்குமதி செய்வதில் உலகளவில் இரண்டாம் இடம் இந்தியாவுக்கு!
ஆத்மநிர்பாரின் நிலையை இன்னும் துல்லியமாக சில தரவுகளை வைத்துப் புரிந்துகொள்ள முடியும். ஆத்மநிர்பாரின் முக்கியமான அம்சம், இந்தியாவின் உற்பத்தித் துறையை தற்சார்பு ஆக்குவது. ஆனால், இதுவரை இந்தியாவின் உற்பத்தித் துறை ஜிடிபியில் 25%-யைக் கூட எட்டவில்லை. 25%-யை விடுவோம். அது 16-17%-ல் தான் இருக்கிறது. இதன் விளைவாக, கடந்த நிதியாண்டில் இந்தியாவின் சரக்கு வர்த்தகப் பற்றாக்குறை (Merchandise Trade Deficit) 333 பில்லியன் டாலர்! இதன் அர்த்தம் ஏற்றுமதியை விட இறக்குமதி பலமடங்கு கோலோச்சுகிறது. இது தான் ஆத்மநிர்பாரின் நிலைமை. இப்போது தான் சரிசெய்கிறோம் என்றும் சொல்ல முடியாது. ஏனென்றால், 12 ஆண்டுகள் ஆட்சி நடந்திருக்கிறது.
ஆத்மநிர்பாருக்கு இந்த நிலை என்றால், நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதாரம் அதலபாதாளத்தில் கிடக்கிறது. மோடியை வளர்ச்சிநாயகன் என்று தான் பிரதானமாகப் பேசினார்கள். அந்த வளர்ச்சி நாயகனின் இத்தனை ஆண்டு ஆட்சிக்குப் பிறகும், சொல்லிக்கொள்ளும் அளவுக்கான முன்னேற்றம் இல்லை. சில வாரங்களுக்கு முன்பு பன்னாட்டு பண நிதியம் (International Monetary Fund – IMF) வெளியிட்ட தரவின் படி, இந்தியாவின் தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP per capita) வங்கதேசத்துக்கு கீழே இருக்கிறது. அவர்களுடையது 2886 டாலர். இந்தியாவுடையது 2749 டாலர். வங்கதேசத்தை முறியடிக்க இந்தியாவுக்கு 3 ஆண்டுகளுக்கு மேலாகும் என்றும் அந்த அமைப்பு கூறியிருக்கிறது. இது தான் வளர்ச்சியா?

இந்த ஒரு அலகு மட்டுமல்ல. பணவீக்கம், டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு, வருமானப் பாகுபாடு, ஊதிய வளர்ச்சி என மற்ற முக்கியமான பொருளாதார அலகுகளிலும் இந்தியா தள்ளாடிக் கொண்டிருக்கிறது. ஒட்டுமொத்த பணவீக்கம் 6%-ஆக இருக்கிறது. உணவுப் பணவீக்கம் மிகவும் மோசமாக 8%-ஆக இருக்கிறது. டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு சதம் அடிக்கப் போகிறது. உலக சமத்துவமின்மை தரவுதளம் (World Inequality Database) வெளியிட்ட தரவின் படி, வருமானப் பாகுபாட்டில் இந்தியா உலகின் முன்னணி நாடாக திகழ்கிறது. இந்தியாவின் டாப் 10% நபர்கள் தான் பெரும்பான்மை சொத்தும், வருமானமும் வைத்திருக்கிறார்கள். ஊதிய வளர்ச்சி, கடந்த 10 ஆண்டுகளாக கடும் தேக்க நிலையில் உள்ளது.
புலம்பிய மத்திய அமைச்சர்
பாஜக மிக விமரிசையான விளம்பரங்களோடு பல ‘ஸ்டார்’ திட்டங்களை கொண்டுவந்தது. Flagship Programmes என்று அதிகாரப்பூர்வமாகச் சொல்லலாம். இவற்றைப் பற்றி ஆரம்பகாலங்களில் பாஜககாரர்கள் பேசியதைப் பார்த்தால், ஏதோ பெரிதாக செய்யப்போகிறார்கள் என்று அனைவருக்கும் தோன்றியிருக்கும். ஆனால், இவையெல்லாம் ஆரம்பகால சூரத்தனம் முடிந்ததும், தொடர்ச்சியான குளறுபடிகளால் திக்கு தெரியாமல் போய்க் கொண்டிருக்கின்றன. ஒரு கட்டத்தில் பாஜககாரர்களே இவற்றைப் பற்றிப் பேசுவதை நிறுத்திவிட்டார்கள். இவற்றை இந்தியாக்கள், யோஜனாக்கள், பாரத்கள், மிஷன்கள் எனப் பொதுவாக வகைப்படுத்தலாம்.

ஸ்டார்ட்டப் இந்தியா தான் பிரதானம். இது எப்படியிருக்கிறது? இதற்கு ஒரே ஒரு பாயிண்ட் போதும். இதுவரை, 2 லட்சத்துக்கும் அதிகமான ஸ்டார்ட் அப்கள் அங்கீகரிக்கப்பட்டிருப்பதாக கூறுபவர்கள், ஸ்டார்ட்டப் சர்வைவல் விகிதம் (Startup Survival Rate) பற்றி வாய் திறக்க மறுக்கிறார்கள். இது தொடர்பாக, நாடாளுமன்றத்தில் கேட்கப்பட்ட கேள்விக்கு அப்படியொரு தரவையே கையாள்வதில்லை என்று பதிலளித்தார்கள். இன்றுவரை இவற்றில் எத்தனை ஸ்டார்ட்டப்கள் இயங்குகின்றன, அதில் எத்தனைப் பேருக்கு வேலைவாய்ப்புகள் உருவாகின என்ற சரியான தரவு இல்லை. போதாக்குறைக்கு, இதில் பெரும்பாலான ஸ்டார்ட்டப்கள் இந்தியாவின் மக்கள்தொகையை வைத்து காசுபார்க்கும் சேவைத்துறை ஸ்டார்ட்டப்கள். இது பற்றி பியூஸ் கோயலே ஒரு கூட்டத்தில் புலம்பினார்.
ஸ்டேண்டப் இந்தியா, ஸ்கில் இந்தியாவும் கவலைக்கிடத்தில் தான் இருக்கின்றன. ஸ்டேண்டப் இந்தியாவில் 2 லட்சத்துக்கும் அதிகமானோர் இணைக்கப்பட்டதாகச் சொன்னார்கள். ஆனால், இவர்களில் பாதிப் பேருக்கு தொழில் தொடங்க கடனுதவி அனுமதிக்கப்பட்டும் பணம் சேரவில்லை. கடனுதவி பெற்றவர்களிலும் எத்தனைப் பேர் தொழில் தொடங்கியுள்ளார்கள், அவை இப்போது எப்படியிருக்கின்றன என்ற தரவு இல்லை. எல்லாவற்றுக்கும் மேலே, இந்த திட்டத்தையே இழுத்து மூடிவிட்டார்கள். ஸ்கில் இந்தியாவிலும் குளறுபடி. எத்தனைப் பேருக்கு பயிற்சி அளிக்கப்பட்டது என்ற தரவு இருக்கிறது. ஆனால், அவர்கள் எங்கே பணியமர்த்தப்பட்டார்கள் என்ற தரவு இல்லை. இப்படியொரு கேள்வி எழுமென்று தெரிந்து அந்த பணியமர்வு அம்சத்தையே (Placement Tracking) திட்டத்தில் இருந்து ரத்து செய்துவிட்டார்கள்.
யோஜனாக்கள் பல… ஆனால் செயல்பாடு?

ஆவாஸ் யோஜனா கொண்டுவந்தார்கள். “2022-க்குள் அனைவருக்கும் சொந்தவீடு” என்று பிரதமர் மோடி சத்தியமெல்லாம் செய்தார். அனைவரும் அடைந்துவிட்டார்களா சொந்தவீடு? இந்தத் திட்டம் சரியான பயனாளர்களைச் சேராதது, கட்டுமானப் பணிகளை முடிக்காமல் இருப்பது, கட்டிமுடிக்கப்பட்ட வீடுகளும் சுற்றுப்புற கட்டமைப்புப் பிரச்சனைகளால் வாழத் தகுதியில்லாமல் இருப்பது ஆகியவற்றால் தத்தளிக்கிறது. உஜ்வாலா யோஜனாவில் இலவச சிலிண்டர் இணைப்பு வழங்கப்பட்டது. ஆனால், சிலிண்டர் விலை அவர்கள் பயன்படுத்த முடியாத மாதிரி ஏற்றப்பட்டுவிட்டது. 2025-2026ல், 1.67 கோடி உஜ்வாலா பயனாளர்கள் ஒரு Refill கூட செய்யவில்லை, 1.12 கோடி பேர் ஒரே ஒரு Refill தான் செய்திருக்கிறார்கள். இது தான் நிலை.
சுவச்பாரத், பாரத்நெட், ஸ்மார்ட்சிட்டி மிஷன், ஏஐ மிஷன் எல்லாம் தெரிந்த கதை. உலகின் அசுத்தமான நாடுகளில் இந்தியா முதல் 5 இடங்களுக்குள் இருக்கிறது. சுவச்பாரத் போஸ்டரையே குப்பைக்கு நடுவில் நின்று மாடுகள் தின்கும் படத்தைத் தான் பார்க்கிறோம். பாரத்நெட் திட்டம் படுதோல்வி என்று சிஏஜி-யே தணிக்கை அறிக்கையில் உணர்த்திவிட்டது. ஸ்மார்ட்சிட்டி மிஷனை எடுத்துக்கொண்டால், எந்த சிட்டியும் முறையாக பராமரிக்கப்படவில்லை என்று நாடாளுமன்ற நிலைக்குழு ஆய்வுசெய்து அறிவித்துவிட்டது. ஏஐ மிஷன் பற்றி சொல்ல வேண்டுமென்றால், டெல்லியில் நடந்த ‘கல்கோட்டியாஸ் புகழ்’ ஏஐ மாநாடே சாட்சி. உலக அரங்கில் இந்தியாவுக்கு கிடைத்த பெரும் அவமானமாக அது நீடிக்கிறது.

பாஜக ‘இந்தியாவை மாற்றப்போகிறோம்’ என்று கொண்டுவந்த சில சீர்திருத்தங்களைக் குறிப்பிட்டாக வேண்டும். இந்த சீர்திருத்தங்கள், மாற்றத்தைக் கொண்டுவந்ததை விட, அவையே பெரும் சுமையாகிவிட்டன என்பது தான் உண்மை. முறையான முன்யோசனையின்றி, சரியானத் திட்டமிடல் இன்றி, போதுமான விவாதங்களும் இன்றி, இந்த சீர்திருத்தங்கள் நாட்டுமக்கள் மீது திணிக்கப்பட்டன. இவற்றைப் பற்றியும் பாஜக இப்போது பெரிதாகப் பேசுவதில்லை. முன்னொரு காலத்தில், தேர்தல்களையே இவற்றை வைத்து வெல்ல முடியும் என்று திட்டம் தீட்டினார்கள். பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி, புதிய கல்விக்கொள்கை ஆகியவையே அவை.
ஜிஎஸ்டி குழப்பம்… பணமதிப்பிழப்பு ஏமாற்றம்

பணமதிப்பிழப்பு இந்தியாவின் கறுப்புப் பணத்தை ஒழிக்கப்போகிறோம் என்ற முழக்கத்துடன் அமல்படுத்தப்பட்டது. பின் அது கள்ளநோட்டு ஒழிப்பாக உருவம் பெற்றது. இறுதியாக, டிஜிட்டல் பரிவர்த்தனைகளை வளர்ப்பதற்காக எடுத்த நடவடிக்கை என அது நிலைகொண்டது. மூன்றிலுமே, ரொக்கப்பணம் குறைப்பு பிரதானம். ஆனால், நிலை என்ன தெரியுமா? இந்தியர்களிடம் கிட்டத்தட்ட 43 லட்சம் கோடி ரூபாய் ரொக்கப்பணமாக இப்போது இருக்கிறது. இது பணமதிப்பிழப்புக்கு முன்பு இருந்த ரொக்கப்பண அளவான 18 லட்சம் கோடியை விட 2.14 மடங்கு அதிகம். என்ன சீர்திருத்தப்பட்டது? ஒன்றும் இல்லை.
ஜிஎஸ்டியை மோடியின் பாஜக அறிமுகப்படுத்தவில்லை. வாஜ்பாய் காலத்தில் அதற்கான ஐடியா உருவாகி, காங்கிரஸ் அதை அறிமுகப்படுத்தியது. பின்னர் அது எதிர்ப்பால் நிறுத்தப்பட்டது. ஆனால், மோடியின் பாஜக நவீனகால ஜிஎஸ்டியை உருவாக்கியது. முன்யோசனையே இல்லாமல் 4 அடுக்கு வரிவிதிப்பு வடிவத்தைக் கொடுத்தது. இதனால் ஏற்பட்ட துயரங்கள் கொஞ்சநஞ்சமல்ல. அத்தியாவசியப் பொருட்களுக்கும் கடுமையான வரிகள் விதிக்கப்பட்டன. 2017-2019 ஆண்டுகளில் கிட்டத்தட்ட 4 லட்சம் நிறுவனங்கள் மூடப்பட்டன. பின்னர், 2025-ல் GST 2.0 கொண்டுவந்ததன் மூலம், பாஜகவே இதன் தோல்வியை ஒப்புக்கொண்டது. இந்த GST 2.0-வின் தோல்வி இன்னும் சில ஆண்டுகளுக்குப் பிறகு ஒப்புக்கொள்ளப்படும்.
புதிய கல்விக்கொள்கையின் மூலம் இந்தியாவின் கல்விச்சூழலை மாற்றப்போவதாக பாஜக சொன்னது. ஆனால், இப்போது என்ன நிலை?கல்விக்கான நிதி ஒதுக்கீடு 6% ஜிடிபியை இன்னும் எட்டவில்லை. உயர்கல்வி GER இன்னும் 30க்கும் குறைவாக பரிதாபகர நிலையில் இருக்கிறது. இதைவிட GER ஆண்டு உயர்வு மிக மோசமாக 0.7% என்ற அளவில் நகர்கிறது. இந்தியாவின் மீது நம்பிக்கையிழந்து வெளிநாடுகளுக்கு படிக்கப்போகும் இந்தியர்களின் எண்ணிக்கை பல மடங்கு உயர்ந்திருக்கிறது. வெளிநாடுகளில் இருந்து இங்கு படிக்க வரும் ஒரு நபருக்கு, 28 இந்தியர்கள் வெளிநாடு போகிறார்கள்! கல்விக்கான Overseas Remittance, தற்போது 22000கோடி. 2014-ல் இது வெறும் 1500 கோடி. இவை தான் புதிய கல்விக்கொள்கையின் சாதனைகள்.
மோடியின் பாஜக இதுவரை இந்தியாவை ஆண்ட எந்த அரசுகளும் செய்யாத ஒரு புதிய சாதனையையும் செய்திருக்கிறது. அது என்னவென்றால், இந்தியாவின் பொதுத்துறையை நிர்மூலமாக்கியது. இந்தியா உலகில் மிகப் பலமான பொதுத்துறை கொண்ட நாடு. கலப்பு பொருளாதாரம் நம்முடையது. ஆனால், இன்று அந்த பொதுத்துறை நிச்சயமின்மையால் சூழப்பட்டிருக்கிறது. இந்த பொதுத்துறை பாஜக என்ற அரசியல் கட்சியின் தனிப்பட்ட சொத்து அல்ல. அவை, இந்திய மக்களுக்கு சொந்தமானவை! ஆனால், Privatization, Disinvestment என, மனதுக்குத் தோன்றியதைச் செய்து பொதுத்துறையை சின்னாபின்னமாக்கி வருகிறார்கள்.
ஏர் இந்தியா தனியாருக்கு தாரைவார்க்கப்பட்டு விட்டது. அதன் துணை நிறுவனங்களான ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் மற்றும் AISATS-ம் சேர்த்தே விற்கப்பட்டு விட்டன. அதைப் போலவே, NINL, FSNL நிறுவனங்களும் முழுவதுமாக தனியாருக்கு அளிக்கப்பட்டு விட்டன. அடுத்து, IMPCL தனியாருக்கு விற்கப்பட காத்திருக்கிறது. LIC, Hindustan Copper உள்ளிட்ட பல நிறுவனங்களின் பங்குகளை விற்றுவிட்டார்கள். இதுபோக, மொத்தம் 75 நிறுவனங்களை மூடுவது, சொத்துகளை விற்பது, இயக்காமல் வைப்பது ஆகிய வகைக்குள் கொண்டுவந்திருக்கிறார்கள். தற்போது, IDBI வங்கியின் பங்குகள் விற்கப்பட உள்ளன. இதைத் தவிர்த்து, சென்ட்ரல் பேங்க், இந்தியன் ஓவர்சீஸ் பேங்க் உள்ளிட்ட 4 வங்கிகளை தனியார்மயப்படுத்துவதாக செய்திகள் வருகின்றன.
பொதுத்துறை நிறுவனங்களின் ஒட்டுமொத்தப் பணியிடங்களும் பெரிய அடிவாங்கியிருக்கிறது. 2014-ல் 12.91 லட்சமாக இருந்த பொதுத்துறை நிரந்தர பணியாளர்கள் எண்ணிக்கை, தற்போது 7.84 லட்சமாக குறைந்திருக்கிறது. இவற்றில் ஓய்வு, கட்டாய ஓய்வு ஆகியவற்றைக் கழித்தாலும், இந்த எண்ணிக்கை கடும் அதிர்ச்சியைக் கொடுக்கிறது. இந்த நேரத்தில், ஒப்பந்தப் பணியாளர்களின் எண்ணிக்கை 7.59 லட்சமாக கூடியிருக்கிறது. சரியான அளவிலான, நிலையான பணியாளர்கள் இல்லாமல் பொதுத்துறை நிறுவனங்கள் நஷ்டமடைகிறதா அல்லது பொதுத்துறை நிறுவனங்கள் நஷ்டமடைவதால், பணியாளர் பற்றாக்குறையா என்ற கேள்வி இங்கே கேட்கப்பட வேண்டும்.
இவை அனைத்துக்கும் மேலே, பாஜகவின் ஆட்சியில் இந்தியாவின் மிக அடிப்படை விஷயமான ஜனநாயக அடித்தளம் கடுமையாக சிதைக்கப்பட்டுள்ளது. இது தான் இந்தியர்கள் அனைவரும் ஒரே நேரத்தில் கவலைகொண்டு பேசியாக வேண்டிய பிரதானப் பிரச்சனை. ஒரு நாடு எதன் அடிப்படையில் கட்டப்பட்டதோ, அதுவே முழுமையாக சிதைந்தபின் என்ன எஞ்சும்? தன்னாட்சி அமைப்புகள், நாடாளுமன்றம், பத்திரிகைகள், குடிமக்களுக்கான உரிமைகள் எல்லாம் வெறும் வார்த்தைகள் அல்ல. அவை தான் இந்திய ஜனநாயகத்தை உயிர்ப்போடு வைத்திருப்பவை. உலகநாடுகள் நம்மை மதிப்பதும் இதை வைத்துத்தான்.
இந்தியாவின் மிகமுக்கியமான தன்னாட்சி அமைப்பான தேர்தல் ஆணையத்தில் ஒன்றல்ல, இரண்டல்ல சர்ச்சைகள். தலைமைத் தேர்தல் ஆணையருக்கான நியமன முறையை மாற்றியமைத்தது பாஜக. இதன் வாயிலாக பதவிக்கு வந்த ஞானேஷ்குமார், சுதந்திர இந்தியாவில் தேர்தல் ஆணையத்துக்கு எதிரான மிகப்பெரிய போராட்டத்துக்கு காரணமாகியிருக்கிறார். SIR பிரச்சனைகள் நாளுக்கு நாள் பெரிதாகிக்கொண்டே வருகின்றன. எலக்டோரல் பாண்ட்டை கொண்டுவந்ததும் பாஜகவே. இதை உச்சநீதிமன்றமே நேரடியாகத் தலையிட்டு ‘Unconstitutional’ என்று நீக்கியது. இந்த பாண்ட்டில் 50%-க்கு அதிகமான நிதி பாஜகவுக்கு மட்டுமே கிடைத்தது என்பது கவனிக்க வேண்டிய உபரித் தகவல்.
மோடி அரசியலும் மோசடி அரசியலும்

நாடாளுமன்றத்துக்கு வந்தால், 2019-2024 ஆட்சிக்காலத்தை கையில் எடுத்துப் பார்ப்பது சரியாக இருக்கும். ஏனென்றால், இது தான் முழுமையான 5 ஆண்டுகள் மற்றும் சமீபத்தையது. இந்த காலத்தில் நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட மசோதாக்களில் பாதிக்கு மேல், அறிமுகப்படுத்தப்பட்ட இரண்டு வார காலங்களுக்குள் நிறைவேற்றப்பட்டிருக்கின்றன. வெறும் இரண்டே வாரம்! முழுவதுமாகப் படிப்பதற்குக் கூட எதிர்க்கட்சிகளுக்கு வாய்ப்பு இல்லை. நாடாளுமன்ற நிலைக்குழுவுக்கு அனுப்பிவைக்கப்பட்ட மசோதாக்கள் வெறும் 16%. கேள்வி நேரமும் வெறும் 60% வரை மட்டுமே நடந்திருக்கின்றன. இவ்வளவு தான் நாடாளுமன்றத்துக்கு கொடுக்கப்பட்ட மரியாதை!
இவைத் தவிர்த்து, பத்திரிகைகளில் குரல் முடிந்தவரை ஒடுக்கப்பட்டிருக்கிறது. 2026ம் ஆண்டுக்கான பத்திரிகை சுதந்திர தரவரிசையில், இந்தியாவின் இடம் 157. கடந்த ஆண்டை விட இப்போது ஆறு இடம் கீழ். சுதந்திர இந்தியாவில் ஒரே ஒரு முறை கூட பத்திரிகையாளர் சந்திப்புகளை நடத்தாத பிரதமராகவும் பாஜகவின் மோடி இருக்கிறார்! டிஜிட்டல் உரிமைகள் அமைப்பான Access Now நடத்திய ஆய்வில், 2016 முதல் 2025 வரை, மொத்தம் 920 Internet Shutdown இந்தியாவில் நடந்திருக்கின்றன. “ஜனநாயக நாடு ஒன்றில் இது அதிர்ச்சியளிக்கிறது” என்பது அந்த அமைப்பின் கருத்து. RTI விஷயத்தில் ஆணையர்கள் பற்றாக்குறை, லட்சக்கணக்கான மனுக்கள் நிராகரிப்பு என, மக்களின் குரலும் உரிமையும் நசுக்கப்பட்டிருக்கின்றன.
இது தான் பாஜக ஆட்சியில் இப்போதைய இந்தியா. ஆத்மநிர்பார் பல்லிளித்துவிட்டது. பொருளாதாரம் அதலபாதாளம். ‘ஸ்டார்’ திட்டங்கள் நினைத்த இலக்கை எட்டமுடியாமல் மூழ்கிக் கொண்டிருக்கின்றன. சீர்திருத்தங்கள் பெரும் சுமையாகியிருக்கின்றன. பொதுத்துறை நிர்மூலமாக்கப்பட்டிருக்கிறது. இந்தியாவின் ஜனநாயக அடித்தளம் சிதைக்கப்பட்டு விட்டது. இதன் விளைவு என்ன தெரியுமா? காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை, நாட்டு மக்களிடையே மிகப்பெரிய பயமும், பதட்டமும், நிச்சயமின்மையும் வாட்டுகிறது. சமூகவலைதளங்களைத் திறந்தால், ஒரு பெரும் போருக்கு பிந்தைய ஓலமாக அவை காட்சியளிக்கின்றன. மோடிக்கும் பாஜகவுக்கும் கேள்விக்கு இடமற்ற ஆதரவு அளித்தவர்களே புலம்பித் தள்ளுகிறார்கள்.
ஆனால், இதில் இருந்து இந்தியாவை மீட்டெடுத்து, மக்களுக்கு நம்பிக்கையளிக்க எதையும் செய்யாமல், குறைந்தபட்சம் தவறுகளையும் பிழைகளையும் திருத்திக்கொள்கிறோம் என்று கூட கூறாமல், மீண்டும் ஒரு புதிய அஜெண்டாவை தூக்கிக்கொண்டு வந்து நிற்கிறார்கள். எத்தனை அராஜகம் இருக்க வேண்டும்? எவ்வளவு மனிதநேயமின்மை ரத்தத்தில் ஓட வேண்டும்? ஆனால், இதைப் பற்றியெல்லாம் பாஜகவுக்கு எந்தக் கவலையும், வெட்கமும் இருப்பதற்கு வாய்ப்பு இல்லை. இந்த நேரம் அடுத்த ‘2047’ வாக்கியத்தை தயார் செய்து கொண்டிருப்பார்கள். மக்களும் கேள்வியே கேட்காமல் நம்புவார்கள் என்று திடமாக நினைப்பார்கள்.
சுதந்திர இந்தியா இதுவரை கண்டதிலேயே மிகப்பெரிய மோசடி அரசியல், பாஜகவின் ‘2047’ அஜெண்டா தான். இதை விட நேர்மையாகவும், சுருக்கமாகவும் சொல்லமுடியாது!









