கோவை மத்திய சிறை வளாகத்தில் இருந்து ராகவன் என்ற கைதி தப்பி ஓடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து பந்தயசாலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
வழிப்பறி திருட்டு உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகளில் கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு இருந்தவர் கைதி ராகவன். இவர் மீது தமிழகம் மட்டுமின்றி கர்நாடக மாநிலம் பெங்களூரில் சில வழிப்பறி வழக்குகள் உள்ளது. கர்நாடக மாநிலத்தில் உள்ள வழக்கு விசாரணைக்காக கடந்த ஜூன் மாதம் ராகவன் கோவை மத்திய சிறையில் இருந்து அழைத்துச் செல்லப்பட்டார். விசாரணை முடிந்து கோவை திரும்பும் வழியில் அன்னூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் இருந்து ராகவன் தப்பி ஓடினார்.
இச்சம்பவம் குறித்து கர்நாடக மாநில போலீசார் அளித்த புகாரின் அடிப்படையில் அன்னூர் போலீசார் ராகவனை தேடி வந்தனர். பவானி சாகர் பகுதியில் ராகவன் தலைமறைவாக இருப்பதாக அன்னூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து நேற்று அங்கு சென்ற அன்னூர் போலீசார் ராகவனை விரட்டிச் சென்று கைது செய்தனர்.
இதையடுத்து போலீசார் ராகவனை அன்னூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பின்னர் கோவை மத்திய சிறையில் அடைக்க கோவை அழைத்து வரப்பட்டார். கோவை மத்திய சிறை வளாகத்தின் முதல் கேட்டை கடந்தவுடன், ராகவனுக்கு போடப்பட்டிருந்த கைவிலங்கை காவல் துறையினர் அகற்றினர். அப்போது கைதி ராகவன் போலீசாரை ஏமாற்றிவிட்டுத் அங்கிருந்து தப்பி ஓடினார்.
அங்கு இருந்த காவலர்கள் உடனடியாக அவரை துரத்தி சென்றனர். ஆனால் போலீசாரின் பிடியில் சிக்காத ராகவன் தப்பிச் சென்று தலைமறைவாகி விட்டார். கோவை மத்திய சிறை வாளாகத்திற்குள் கைதி தப்பியோடிய சம்பவம் பாதுகாப்புப் பணியில் இருந்த அதிகாரிகள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
சம்பவம் குறித்து உடனடியாகக் கட்டுப்பாட்டு அறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. சிறை வளாகப் பகுதி பந்தயசாலை காவல் எல்லைக்குட்பட்டது என்பதால், பந்தயசாலை காவல் நிலையப் போலீசார் உடனடியாகச் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை தொடங்கினர்.
மத்திய சிறை வளாகம் மற்றும் அதனைச் சுற்றி உள்ள நஞ்சப்பா சாலை, வி.ஓ.சி பூங்கா உள்ளிட்ட பகுதிகளில் பொருத்தப்பட்டு உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வரும் போலீசார், தப்பியோடிய கைதி ராகவனைப் பிடிக்கத் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு உள்ளனர். உயர் பாதுகாப்பு கொண்ட மத்திய சிறை வளாகத்தில் இருந்தே கைதி தப்பிய சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தேனி மாவட்டச் சிறையில் இருந்து 17 கைதிகள் தப்பி ஓடிய சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் தற்போது கோவை மத்திய சிறை வளாகத்தில் இருந்து கைதி ஒருவர் தப்பி ஓடி உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது எக்ஸ் பதிவில், “கோவை அன்னூர் பகுதியில் திருட்டு உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபட்டதாகக் கூறி கைது செய்யப்பட்டு, கோவை மத்திய சிறையில் அடைப்பதற்காக கொண்டு செல்லப்பட்ட இராகவன் என்ற கைதி, சிறை வளாகத்தில் இருந்து தப்பி ஓடியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. சிறையிலிருந்து கைதிகள் தப்பி ஓடும் நிகழ்வுகள் அண்மைக்காலமாக அதிகரித்து வருவது கவலையளிக்கிறது.
அன்னூர் காவல் நிலையக் காவலர்களால் நேற்று கைது செய்யப்பட்ட இராகவன் அப்போதே காவலர்களின் பிடியில் இருந்து தப்பி ஓடியுள்ளார். அவரை காவல்துறையினர் துரத்திப் பிடித்து தான் நீதிமன்றத்தில் நேர் நிறுத்தியுள்ளனர். இதைக் கவனத்தில் கொண்டு கோவை சிறை வளாகத்தில் கைதி இராகவனை பாதுகாப்புடன் கையாண்டிருக்க வேண்டும். சிறைக்காவலர்கள் அலட்சியமாக நடந்து கொண்டதே இதற்கு காரணம் ஆகும்.
சென்னை புழல் சிறையிலிருந்து கடந்த வாரம் இரு கைதிகள் தப்பி ஓடினார்கள். அந்த அதிர்ச்சி விலகும் முன்பே தேனி தேக்கம்பட்டி மாவட்ட சிறையிலிருந்து 17 கைதிகள் தப்பி ஓடினார்கள். அதைத் தொடர்ந்து இப்போது கோவை நிகழ்வு நடந்துள்ளது. சிறைக் கைதிகள் இதுபோன்று அடிக்கடி தப்பி ஓடும் நிகழ்வுகள் விரும்பத் தக்கது அல்ல.
கோவை மத்திய சிறையிலிருந்து தப்பி ஓடிய கைதி இராகவனை விரைந்து கைது செய்ய வேண்டும். தமிழக சிறைகளில் இருந்து கைதிகள் தப்பி ஓடுவதைத் தடுக்க பாதுகாப்பை வலுப்படுத்துவது உள்ளிட்ட கடுமையான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும்.” என தெரிவித்துள்ளார்.









