வங்கக்கடலில் நாளை ‘முரசு’ புயல் உருவாகக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய அந்தமான் கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று காலை 8:30 மணி அளவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறியுள்ளது.
இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தொடர்ந்து மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, அடுத்த 6 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும். அதைத் தொடர்ந்து, அடுத்த 24 மணி நேரத்தில் மேலும் தீவிரமடைந்து புயலாக மாற வாய்ப்புள்ளது.
பின்னர், மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து நவம்பர் 2-ஆம் தேதி மாலை ஆந்திரப் பிரதேச கடலோரப் பகுதியை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதியை சென்றடையக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது-
‘முரசு’ புயல்:
2026-ஆம் ஆண்டின் வடகிழக்குப் பருவமழை காலத்தில் வங்கக்கடலில் உருவாகும் 2-வது புயல் இதுவாகும். இந்த புயல் உருவானால், இதற்கு இந்திய அரசு பரிந்துரைத்த ‘முரசு’ என்ற பெயர் சூட்டப்படும்.
மழை எச்சரிக்கை:
இதனிடையே, சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட வட மாவட்டங்களில் நாளை இரவு முதல் மழைக்கு வாய்ப்புள்ளது. மேலும், தமிழகத்தின் வட கடலோர மாவட்டங்களில் நாளை மறுநாள் முதல் கனமழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.









