சிதம்பரம் நடராஜர் கோயிலை அறநிலையத் துறையின் கீழ் கொண்டு வர கோரிக்கை!

By Mathi

|

Published on 31 Oct 2026, 4:06 PM

Chidambaram Temple

தீட்சிதர்கள் அதிகார பிடியில் இருந்து சென்னை உயர்நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டுள்ள சிதம்பரம் நடராஜர் கோயிலை தமிழக அரசின் இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் கொண்டு வர வேண்டும் என்று திராவிடர் விடுதலை கழகப் பொதுச்செயலாளர் விடுதலை க. ராசேந்திரன் வலியுறுத்தி உள்ளார்.

இது தொடர்பாக விடுதலை க.ராசேந்திரன் வெளியிட்ட அறிக்கை: தில்லை தீட்சத பார்ப்பனர்கள் அடித்த கொள்ளை மோசடிகள் அனைத்தையும் உயர்நீதிமன்றம் அம்பலப்படுத்தி அவர்களின் முகத்திரையை கிழித்து எறிந்து இருக்கிறது. கோயில் நிர்வாகத்தை தீட்ச்சதர்களிடம் இருந்து பறித்து இரண்டு ஓய்வு பெற்ற நீதிபதிகள் அடங்கிய குழு விடம் ஒப்படைத்து இருக்கிறது.

ADVERTISEMENT

சிவபெருமான் பூமிக்கு நேரடியாக சேவை செய்ய அனுப்பி வைக்கப்பட்ட பூதேவர் பரம்பரை என்று அவர்கள் மார்தட்டிக் கொண்டார்கள். எனவே தங்களை அரசு நிர்வாகத்தின் கீழ் கட்டுப்படுத்த முடியாது என்று கூறி உச்சநீதிமன்றத்தின் ஆணையைப் பெற்றார்கள்.

2014 ஆம் ஆண்டு முதல் மீண்டும் கோவில்உரிமையை கைப்பற்றி நிர்வாகம் செய்ய ஆரம்பித்த இந்த பார்ப்பனர்கள் அடித்த கொள்ளை அதிர்ச்சி அடைய வைக்கிறது.

ADVERTISEMENT

உயர் நீதிமன்ற நீதிபதிகள் மாண்புமிகு ஜி ஜெயச்சந்திரன் மற்றும் இ மனோகரன் இந்த வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கி இருக்கிறார்கள்.

தீர்ப்பில் கீழ்க்கண்ட மோசடிகளை நீதிமன்றம்சுட்டி காட்டி இருக்கிறது.

ADVERTISEMENT
  • புராதான கட்டமைப்பை குலைக்கும் வகையில் நீதிமன்ற வளாகத்தில் தேவை இல்லாத சட்ட விரோதமான கட்டுமானங்களை கட்டியுள்ளனர்.
  • கோயில் சொத்துக்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன.
  • கடந்த 12 ஆண்டுகளாக கோயிலின் உண்மையான வருமானத்தை தீட்சதர்கள் மூடி மறைத்துள்ளனர்.
  • அன்னதானம் போடுவதற்காக பெறப்பட்ட நன்கொடைகள் மூடி மறைக்கப்பட்டுள்ளன.
  • கோயில் வளாகம் உணவு விற்பனை வளாகமாக மாற்றப்பட்டு மதம் சாராத நடவடிக்கைகளுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளன.
  • கோயில் புராதான கட்டமைப்புகள் சீர்குலைந்து கிடக்கின்றன.

இப்போது அமைக்கப்பட்டுள்ள நிர்வாக அமைப்பு இந்த மோசடிகளையும் குறைகளையும் கண்டறிந்து உரிய நடவடிக்கைகளை எடுக்கும் என்றும் இந்து அறநிலையத்துறையில் இருந்து இந்த குழுவுக்கான செலவுகளை ஏற்க வேண்டும் என்றும் நீதிபதிகள் தீர்ப்பில் சுட்டிக்காட்டி இருக்கிறார்கள்.

நீதிபதிகள் தீர்ப்பில் பின் இணைப்பாக இந்த மோசடிகள் ஊழல்களுக்கு ஆதாரங்களாக படங்களையும் கடிதங்களையும் வெளியிட்டு இருப்பது மிகவும் குறிப்பிடத்தக்கது.

கோயில்களை அரசு பிடியிலிருந்த விடுவிக்க வேண்டும் என்று கூப்பாடு போடுகிறார்கள். பொது தீட்சதர் கட்டுப்பாட்டில் இருந்த தில்லை நடராசன் கோயில் ஊழலில் இப்படி மானங்கெட்டு சந்தி சிரிப்பதை கண் திறந்து பார்க்க வேண்டும்.

இனியும் பொது தீட்சர்களின் பிடியில் தில்லை கோயில் இருக்கக்கூடாது. அற நிலைய துறையின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும் என்ற இயக்கத்தை தொடங்க வேண்டும். இவ்வாறு விடுதலை க.ராசேந்திரன் கூறியுள்ளார்.

சிதம்பரம் கோயில் வழக்கும் தீர்ப்பும்- பின்னணி என்ன?

சிதம்பரம் நடராஜர் கோயில் நிர்வாகம் தொடர்பாகத் தமிழக அரசுக்கும் பொது தீட்சிதர்களுக்கும் இடையே நீண்டகாலமாகச் சட்டப் போராட்டம் நடைபெற்று வருகிறது.

1933-ஆம் ஆண்டிலேயே கோயில் நிர்வாகத்தில் அறநிலைய வாரியம் தலையிட முயன்றதை எதிர்த்துத் தீட்சிதர்கள் நீதிமன்றத்தை நாடினர். பின்னர் 1987-ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர். ஆட்சியில் கோயிலுக்குச் செயல் அதிகாரியை நியமித்து அறநிலையத்துறை உத்தரவிட்டது. இந்த நியமனத்தை எதிர்த்த வழக்கில் 2009-ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றம் அரசின் நடவடிக்கையை உறுதி செய்தது. ஆனால், 2014-ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் இந்த உத்தரவை ரத்து செய்து, கோயில் நிர்வாக உரிமையை மீண்டும் பொது தீட்சிதர்களிடம் ஒப்படைத்தது.

இதனிடையே, கனகசபையில் ஏறிப் பக்தர்கள் நடராஜரைத் தரிசனம் செய்ய அனுமதித்து 2022-ம் ஆண்டு மே 17-ந் தேதி தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. இதை எதிர்த்துத் தீட்சிதர்கள் வழக்கு தொடர்ந்தனர். கோயிலின் வருமானக் கணக்குகள், சொத்துகள், புராதன கட்டுமானங்களுக்குச் சேதம் ஏற்பட்டது தொடர்பான பிரச்சினைகளும் நீதிமன்ற விசாரணைக்கு வந்தன.

இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதிகள் ஜி.ஜெயச்சந்திரன், இ.மனோகரன் ஆகியோர் அடங்கிய சென்னை உயர்நீதிமன்ற அமர்வு நேற்று (அக். 30) தீர்ப்பளித்தது.

கடந்த 12 ஆண்டுகளாகக் கோயிலின் முழுமையான வருமானக் கணக்குகளைத் தீட்சிதர்கள் சமர்ப்பிக்கவில்லை என்றும், கோயிலின் புராதன கட்டுமானங்களுக்குச் சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

இதையடுத்து, கோயில் நிர்வாகத்தைச் சீரமைக்க ஓய்வுபெற்ற நீதிபதிகள் வி.பாரதிதாசன், ஆர்.சுரேஷ்குமார், ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி சி.ராஜேந்திரன் உள்ளிட்ட 5 பேர் கொண்ட நிர்வாகக் குழுவை அமைத்து உத்தரவிட்டனர்.

கோயில் சொத்துகளை மீட்பது, வரவு செலவுக் கணக்குகளைச் சரிபார்ப்பது, புராதன கட்டுமானங்களைப் பாதுகாப்பது, கனகசபையில் அனைத்துப் பக்தர்களுக்கும் சமமான தரிசன வாய்ப்பை உறுதி செய்வது உள்ளிட்ட பொறுப்புகள் இந்தக் குழுவுக்கு வழங்கப்பட்டுள்ளன. அதேநேரத்தில் அன்றாட பூஜைகள், திருவிழாக்கள் போன்ற மதச் சடங்குகளில் தீட்சிதர்களின் உரிமை தொடரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பின்னணியில் சிதம்பரம் கோயிலை பிற கோயில்களைப் போல இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவர வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்!

Mathi

மா.ச.மதிவாணன் (Mathivanan Maran- Mathi) 30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel