சினிமா டிக்கெட் விலை உயர்வு, பராமரிப்புக் கட்டணம் உள்ளிட்ட 9 கோரிக்கைகளை தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தினர் முதல்வர் விஜய்யிடம் சமர்ப்பித்துள்ளனர்.
தமிழகத்தில் மின் கட்டண உயர்வு, சொத்து வரி, ஊழியர்களின் ஊதியம், பராமரிப்புச் செலவுகள் உயர்வு மற்றும் ஓடிடி (OTT) தளங்களின் போட்டி போன்ற பல்வேறு காரணங்களால் தற்பொழுது திரையரங்குகளின் செயல்பாடு பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகச் சங்கம் தெரிவித்துள்ளது. இத்தகைய இக்கட்டான சூழலில், திரையரங்குகளைக் காப்பாற்றும் வகையில் முதலமைச்சரிடம் 9 முக்கியக் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. தமிழக முதல்வர் விஜய்யைச் சந்தித்த தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தினர், தங்களது கோரிக்கைகளை அரசிடம் சமர்ப்பித்துள்ளனர்.
- அதிகபட்ச டிக்கெட் விலையை ரூ.150-ல் இருந்து ரூ.250 ஆக உயர்த்த வேண்டும்.
- ஒவ்வொரு 2 ஆண்டுகளுக்கு முன்பும் தானாகவே 10% டிக்கெட் கட்டணத்தை உயர்த்த அனுமதி வழங்க வேண்டும்.
- ஒரு டிக்கெட்டுக்கான திரையரங்கு பராமரிப்புக் கட்டணத்தை ரூ.6-ல் இருந்து ரூ.10 ஆக உயர்த்த வேண்டும்.
- தகுதியுள்ள திரையரங்குகளை சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் (MSME) பிரிவில் சேர்த்து குறைந்த மின்கட்டணம் வசூலிக்க வேண்டும்.
- டிஜிட்டல் ப்ரோஜெக்டர் இயக்குவதற்கு உரிமம் பெற்ற ஆபரேட்டர் கட்டாயம் என்ற விதியை நீக்க வேண்டும்.
- ஏற்கனவே உள்ள திரையரங்கு வளாகத்தில் கூடுதல் திரைகள் அமைப்பதற்கான அனுமதிகளை எளிமைப்படுத்த வேண்டும்.
- திரையரங்குகளுக்கான C-FORM உரிமத்தை 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை புதுப்பிக்கும் வகையில் மாற்ற வேண்டும்.
- கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டுப் போட்டிகள், இசை நிகழ்ச்சிகள் மற்றும் கலாச்சார நிகழ்ச்சிகளைத் திரையிட அனுமதிக்க வேண்டும்.
- திரையரங்குகள் செயல்படும் நேரத்தை காலை 9 மணி முதல் நள்ளிரவு 2 மணி வரை என்பதற்குப் பதிலாக, காலை 6 மணி முதல் நள்ளிரவு 2 மணி வரை நீட்டிக்க வேண்டும். மேலும், தினமும் அதிகபட்சம் 5 காட்சிகள் என்ற கட்டுப்பாடு தொடர வேண்டும்.
இந்தக் கோரிக்கைகளை அரசிடம் விளக்க, செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சரைச் சந்திக்கவும் சங்கம் அனுமதி கோரியுள்ளது.









