நவம்பர் பிறக்குது… பென்ஷன் சான்றிதழ் முதல் சிலிண்டர் விலை வரை மறக்காமல் பார்க்க வேண்டியவை!

By Minnambalam Desk

|

Published on 31 Oct 2026, 5:43 PM

தேதி மாறினால் ஒவ்வொரு மாதமும் ஏதாவது ஒரு விஷயம் மாறத்தான் செய்கிறது. இந்த நவம்பரிலும் அப்படித்தான். சமையல் எரிவாயு சிலிண்டர் விலை, ஓய்வூதியதாரர்களின் ஆயுள் சான்றிதழ், வருமான வரி தாக்கல், ஜிஎஸ்டி நடைமுறை என்று வீட்டுப் பட்ஜெட்டையும் பணம் சார்ந்த வேலைகளையும் தொடும் சில விஷயங்களை இப்போதே பார்த்துவைத்துக்கொள்வது நல்லது. குறிப்பாக, ஓய்வூதியம் வாங்குபவர்களும் வரி கட்டுபவர்களும் தேதிகளைத் தவறவிட்டுவிடக் கூடாது.

1. பென்ஷனுக்கு நவம்பர் 30-க்குள் ஆயுள் சான்றிதழ்

ADVERTISEMENT

அரசு ஓய்வூதியம் வாங்குபவர்கள் வருடம் ஒருமுறை ‘நான் உயிரோடு இருக்கிறேன்’ என்று காட்டும் ஆயுள் சான்றிதழைக் கொடுக்க வேண்டும். அதற்கான கடைசி நாள் நவம்பர் 30.

  • 80 வயதுக்கு மேற்பட்டவர்கள் அக்டோபர் 1 முதலே கொடுக்கலாம்.
  • மற்றவர்கள் நவம்பர் 1 முதல் வங்கி, ஜீவன் பிரமாண் இணையதளம், அஞ்சல் துறையின் வீடு தேடி வரும் சேவை ஆகியவற்றின் மூலம் கொடுக்கலாம்.

கடைசி நாள் வரை இழுத்தடிக்காதீர்கள். தவறவிட்டால் ஓய்வூதியம் கைக்கு வருவதில் தாமதம் ஆகலாம். வங்கிக்குப் போகும்போது ஆதார், ஓய்வூதியக் கணக்கு விவரங்களை எடுத்துச் செல்லுங்கள். வீட்டில் முதியவர்கள் இருந்தால், அலையாமல் அஞ்சல் துறை சேவையைப் பயன்படுத்தலாம்.

ADVERTISEMENT

2. வருமான வரி தாக்கலுக்குக் கூடுதல் நாள்

2026-27 மதிப்பீட்டு ஆண்டில், கணக்குத் தணிக்கை (audit) தேவைப்படும் சில வரி செலுத்துவோருக்கு, வருமான வரி அறிக்கை தாக்கல் செய்யும் கடைசித் தேதி நவம்பர் 21 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ஆனால் இது எல்லோருக்கும் கிடையாது. உங்களுக்குப் பொருந்துமா என்று ஆடிட்டரிடமோ வருமான வரித் துறை இணையதளத்திலோ உறுதிசெய்துகொள்ளுங்கள். தகுதி உள்ளவர்கள் தாமதக் கட்டணம் உள்ளிட்ட நிபந்தனைகளோடு டிசம்பர் 31 வரை தாமதமாகவும் தாக்கல் செய்யலாம்.

3. ஜிஎஸ்டி நடைமுறையில் சில மாற்றங்கள்

நவம்பர் 1 முதல் சில ஜிஎஸ்டி நடைமுறைகள் மாறுகின்றன. விற்பனைக்குப் பிறகு தரப்படும் தள்ளுபடிகள், குறிப்பிட்ட வணிகங்களுக்கான வரித் திருப்பி அளிப்பு ஆகியவற்றை எளிதாக்குவதுதான் நோக்கம். தகுதி உள்ள நிறுவனங்கள் தங்களுக்கு வர வேண்டிய வரித் தொகையை விரைவாகத் திரும்பப் பெற இது உதவும். கடை, தொழில் நடத்துபவர்கள் இது தங்களுக்குப் பொருந்துமா என்று கணக்காளரிடம் ஒருமுறை கேட்டுவிடுங்கள்.

4. சிலிண்டர் விலை

எண்ணெய் நிறுவனங்கள் மாதத் தொடக்கத்தில் எல்பிஜி சிலிண்டர் விலையை மறுஆய்வு செய்யும். நவம்பருக்கு விலை ஏறுகிறதா, இறங்குகிறதா என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பைக் கவனித்துக்கொள்ளுங்கள். மாத பட்ஜெட் போடுபவர்களுக்கு இது நேரடியாகப் பாதிப்பு தரும்.

5. FD வட்டி, மியூச்சுவல் ஃபண்ட்

வங்கிகள் நிலையான வைப்புநிதிக்கான வட்டி விகிதத்தை மாற்றக்கூடும். மியூச்சுவல் ஃபண்டில் பணம் போட்டிருப்பவர்கள், தங்கள் திட்டங்கள் பற்றிய புதிய அறிவிப்புகள் ஏதும் வந்திருக்கிறதா என்று பார்த்துக்கொள்வது நல்லது.

சுருக்கமாக: பென்ஷன் சான்றிதழ் நவம்பர் 30, சில தணிக்கை வரி செலுத்துவோருக்கு வருமான வரி தாக்கல் நவம்பர் 21, தாமதத் தாக்கல் டிசம்பர் 31. சிலிண்டர் விலை அறிவிப்பையும் பார்த்துவிடுங்கள்.

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்!

Minnambalam Desk

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel