இன்று முதல் அமலுக்கு வரும் அதிரடி மாற்றங்கள்.. டாஸ்மாக் ‘சரக்கு’ விலை முதல் வங்கி கட்டணங்கள் வரை.. சிலிண்டர் விலை உயரும்?

By Mathi

|

Published on 1 Nov 2026, 12:01 AM

November 1 Changes Rules

நாடு முழுவதும் இன்று நவம்பர் 1 முதல் பல்வேறு புதிய விதிமுறைகள் அமலுக்கு வருகின்றன. தமிழகத்தில் டாஸ்மாக் மதுபாட்டில்களின் விலை மாற்றம், ரூ.1,000-க்கு மேல் மதுபானம் வாங்க டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை கட்டாயம், கனிம வளங்களை ஏற்றிச் செல்லும் லாரிகளுக்கு ஜிபிஎஸ் கட்டாயம் உள்ளிட்ட மாற்றங்கள் நடைமுறைக்கு வருகின்றன.

டாஸ்மாக் மதுபாட்டில் விலையில் ரூ.10 உயர்வு

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் விற்பனை செய்யப்படும் மதுபாட்டில்களின் அச்சிடப்பட்ட விலையில் (MRP) இன்று முதல் ரூ.10 உயர்த்தப்படுகிறது. இதுவரை மதுபாட்டிலில் அச்சிடப்பட்ட விலையுடன் காலி பாட்டிலுக்கான ரூ.10 தனியாக வசூலிக்கப்பட்டது. தற்போது இந்தத் தொகை சுற்றுச்சூழல் மற்றும் சமூக நலக் கட்டணம் என்ற பெயரில் மதுபாட்டிலின் அதிகபட்ச சில்லறை விலையிலேயே சேர்க்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இதனால் இனி மதுபாட்டிலில் அச்சிடப்பட்ட விலைக்கு மேல் ரூ.10 தனியாகச் செலுத்த வேண்டியதில்லை. காலி பாட்டிலைத் திருப்பிக் கொடுத்தால் ரூ.10 திரும்ப வழங்கப்படும் நடைமுறையும் தொடரும். அச்சிடப்பட்ட விலைக்கு மேல் கூடுதல் பணம் வசூலிக்கும் டாஸ்மாக் ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

ரூ.1,000-க்கு மேல் மதுபானம் வாங்கினால் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை

தமிழகத்தில் உள்ள 4,048 டாஸ்மாக் கடைகளிலும் இன்று முதல் புதிய பணப் பரிவர்த்தனை விதிமுறை அமலுக்கு வருகிறது. ஒரே பரிவர்த்தனையில் ரூ.1,000-க்கு மேல் மதுபானம் வாங்குபவர்கள் யுபிஐ, டெபிட் கார்டு அல்லது கிரெடிட் கார்டு உள்ளிட்ட அங்கீகரிக்கப்பட்ட டிஜிட்டல் முறைகளில் மட்டுமே பணம் செலுத்த வேண்டும். ரூ.1,000 அல்லது அதற்குக் குறைவான தொகைக்கு வழக்கம்போல ரொக்கமாகப் பணம் செலுத்தலாம்.

ADVERTISEMENT

கனிம வள லாரிகளுக்கு ஜிபிஎஸ் கட்டாயம்

தமிழகத்தில் மணல், எம் சாண்ட், கருங்கற்கள் உள்ளிட்ட கனிம வளங்களை ஏற்றிச் செல்லும் வாகனங்களில் இன்று முதல் ஜிபிஎஸ் கருவி கட்டாயமாக்கப்பட்டுள்ளது. கனிம வளங்கள் சட்டவிரோதமாகக் கடத்தப்படுவதைத் தடுக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஜிபிஎஸ் கருவி பொருத்துவதற்கு அக்டோபர் 31-ந் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. அந்த அவகாசம் முடிவடைந்த நிலையில், ஜிபிஎஸ் பொருத்தப்படாத வாகனங்களுக்குக் கனிம வளங்களை ஏற்றிச் செல்ல அனுமதி வழங்கப்படாது. விதிமுறைகளை மீறும் வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பஞ்சாப் நேஷனல் வங்கி கிரெடிட் கார்டு கட்டணங்கள் மாற்றம்

பஞ்சாப் நேஷனல் வங்கியின் விசா மற்றும் ரூபே கிரெடிட் கார்டுகளுக்கான சில சேவைக் கட்டணங்கள் இன்று முதல் மாற்றப்படுகின்றன. கிரெடிட் கார்டு ரிவார்டு பாயிண்டுகளைப் பயன்படுத்தும் தகுதியான கோரிக்கைகளுக்கு ரூ.99 கட்டணம் விதிக்கப்படுகிறது.

ADVERTISEMENT

ஒரு பில்லிங் காலத்தில் ரூ.50,000-க்கு மேல் மின்சாரம் உள்ளிட்ட பயன்பாட்டுக் கட்டணங்களைச் செலுத்தினால், பொருந்தக்கூடிய தொகையில் 1 சதவீதம் சேவைக் கட்டணம் வசூலிக்கப்படும். ஒரு பரிவர்த்தனைக்கான அதிகபட்ச கட்டணம் ரூ.2,000 ஆகும். அதேபோல ஏடிஎம்மில் கிரெடிட் கார்டு மூலம் பணம் எடுப்பதற்கான கட்டணங்களும் மாற்றப்பட்டுள்ளன.

பஞ்சாப் நேஷனல் வங்கி ஏடிஎம்மில் பணம் எடுத்தால் 2.5 சதவீதம் அல்லது குறைந்தபட்சம் ரூ.400 கட்டணம் வசூலிக்கப்படும். பிற உள்நாட்டு ஏடிஎம்களில் பணம் எடுத்தால் 2.5 சதவீதம் அல்லது குறைந்தபட்சம் ரூ.500 கட்டணம் விதிக்கப்படும்.

இண்டஸ்இண்ட் வங்கியில் புதிய கட்டணம்

இண்டஸ்இண்ட் வங்கியின் குறிப்பிட்ட சேமிப்புக் கணக்குகளுக்கான பரிவர்த்தனைக் கட்டணங்களும் இன்று முதல் மாற்றப்படுகின்றன. Indus Delite, Indus Digi-start, Indus Online-Min Bal Required மற்றும் Indie Star, Superstar, Megastar ஆகிய கணக்கு வகைகளுக்கு இந்த மாற்றங்கள் பொருந்தும்.

கணக்கில் போதுமான பணம் இல்லாததால் ஏடிஎம் அல்லது பிஓஎஸ் பரிவர்த்தனை தோல்வியடைந்தால் ரூ.25 கட்டணம் வசூலிக்கப்படும். இதுவரை இத்தகைய பரிவர்த்தனைகளுக்குக் கட்டணம் வசூலிக்கப்படவில்லை. நிதி சாராத காரணங்களால் காசோலை திரும்பினால் ஒரு காசோலைக்கு ரூ.50 கட்டணம் விதிக்கப்படும்.

ஜிஎஸ்டி விதிகளில் மாற்றம்

மத்திய சரக்கு மற்றும் சேவை வரிச் சட்டத்தின் சில முக்கியத் திருத்தங்கள் இன்று முதல் அமலுக்கு வருகின்றன. பொருட்களை விற்பனை செய்த பிறகு வழங்கப்படும் தள்ளுபடிகள், கிரெடிட் நோட்டுகள் மற்றும் வரி ரீஃபண்ட் தொடர்பான நடைமுறைகளில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

விற்பனைக்குப் பிறகு வழங்கப்படும் தள்ளுபடியை வரிக்குரிய மதிப்பிலிருந்து கழிப்பதற்கான நிபந்தனைகள் மாற்றப்பட்டுள்ளன. அதேபோல குறிப்பிட்ட வரி ரீஃபண்ட் கோரிக்கைகளில் 90 சதவீதம் வரை தற்காலிகமாகத் திருப்பி வழங்கும் வசதியும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இந்த மாற்றங்கள் வணிக நிறுவனங்கள் மற்றும் ஏற்றுமதியாளர்களுக்கு முக்கியமானவையாகும்.

ஓய்வூதியதாரர்கள் வாழ்நாள் சான்றிதழ் சமர்ப்பிக்கலாம்

80 வயதுக்குக் குறைவான அரசு ஓய்வூதியதாரர்கள் தங்களது வருடாந்திர வாழ்நாள் சான்றிதழை இன்று முதல் சமர்ப்பிக்கலாம். நவம்பர் 30-ந் தேதி வரை இதற்கான அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. ஓய்வூதியம் தொடர்ந்து கிடைப்பதை உறுதி செய்ய இந்தச் சான்றிதழைச் சமர்ப்பிப்பது அவசியம்.

வங்கிக் கிளைகள், ஜீவன் பிரமாண் செயலி உள்ளிட்ட வசதிகள் மூலம் வாழ்நாள் சான்றிதழைச் சமர்ப்பிக்கலாம். 80 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட ஓய்வூதியதாரர்களுக்கு அக்டோபர் 1-ந் தேதி முதலே சான்றிதழ் சமர்ப்பிக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

சுங்கச்சாவடி அருகே வசிப்பவர்களுக்கு FASTag சலுகை

தேசிய நெடுஞ்சாலை சுங்கச்சாவடிகளில் இருந்து 20 கிலோ மீட்டர் சுற்றளவில் வசிக்கும் தகுதியான உள்ளூர் மக்களுக்கு இன்று முதல் புதிய வருடாந்திர FASTag பாஸ் வசதி அறிமுகப்படுத்தப்படுகிறது. நகராட்சி எல்லைக்கு வெளியே உள்ள தகுதியான சுங்கச்சாவடிகளுக்கு ஆண்டுக்கு ரூ.1,500 கட்டணமும், நகராட்சி எல்லைக்குள் உள்ள தகுதியான சுங்கச்சாவடிகளுக்கு ரூ.3,000 கட்டணமும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்தச் சலுகை குறிப்பிட்ட சுங்கச்சாவடிக்கு மட்டுமே பொருந்தும். அனைத்து சுங்கச்சாவடிகளிலும் பயன்படுத்த முடியாது.

செல்போன் அழைப்புகளில் பெயர் தெரியும் வசதி

செல்போனில் அழைப்பவரின் பதிவு செய்யப்பட்ட பெயரைக் காட்டும் Calling Name Presentation (CNAP) வசதியை 4ஜி, 5ஜி நெட்வொர்க்குகளில் அறிமுகப்படுத்தும் நடவடிக்கைகள் தொடங்குகின்றன. இந்த வசதி மூலம் தெரியாத எண்ணிலிருந்து அழைப்பு வந்தாலும், தொலைத்தொடர்பு நிறுவனத்திடம் பதிவு செய்யப்பட்ட பெயரை அறிந்துகொள்ள முடியும். எனினும் இந்த வசதி இன்று முதலே அனைத்து செல்போன் பயனர்களுக்கும் கிடைக்கும் என்று அர்த்தமல்ல. தொலைத்தொடர்பு நிறுவனங்களின் தொழில்நுட்ப ஏற்பாடுகளுக்கு ஏற்ப படிப்படியாக வழங்கப்படும்.

சமையல் எரிவாயு விலையில் மாற்றம் வருமா?

ஒவ்வொரு மாதத்தின் முதல் நாளிலும் எண்ணெய் நிறுவனங்கள் சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலையை மறுஆய்வு செய்கின்றன. அந்த வகையில் நவம்பர் மாதத்துக்கான வீட்டு உபயோக மற்றும் வணிக பயன்பாட்டு எரிவாயு சிலிண்டர்களின் விலையிலும் மாற்றம் அறிவிக்கப்படலாம். புதிய விலை குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பின் அடிப்படையிலேயே உயர்வு அல்லது குறைவு உறுதியாகும்.

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்!

Mathi

மா.ச.மதிவாணன் (Mathivanan Maran- Mathi) 30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel