மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் துணை குடியரசு தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன், சுவாமி தரிசனம் செய்துவிட்டு செய்தியாளர்களை சந்தித்தபோது அடுத்தடுத்து மின்தடை ஏற்பட்ட விவகாரத்தில் ஒருவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
துணை குடியரசுத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் கடந்த அக்டோபர் 30-ஆம் தேதி மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்குச் சென்று சாமி தரிசனம் செய்தார். அவரது வருகையை முன்னிட்டு கோயிலின் கிழக்கு வாசல் பகுதியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இருப்பினும், முக்கிய நுழைவு வாயிலான கிழக்கு கோபுரப் பகுதியில் விளக்குகள் எரியவில்லை. மேலும், சிபி ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்து கொண்டிருந்தபோது, மின்சாரமும் துண்டிக்கப்பட்டது.
முதலில் அவர் தரிசனத்தை முடித்துவிட்டு அவர் வெளியே வந்த போது மின்தடை ஏற்பட்டது. பிறகு கிழக்கு கோபுரத்தின் முன்பு துணை குடியரசுத் தலைவர் செய்தியாளர்களை சந்தித்துப் பேசிக்கொண்டிருந்தபோது மின்சாரம் மீண்டும் துண்டிக்கப்பட்டது. இதனால் துணை குடியரசு தலைவரின் பாதுகாப்பு வாகனங்கள் உள்ளிட்டவை அங்கு நிறுத்தப்பட்டிருந்த நிலையில், போதிய வெளிச்சம் இல்லாதது பரபரப்பை ஏற்படுத்தியது.
ருக்மணி பழனிவேல் ராஜன் விளக்கம்
இது குறித்து முன்னாள் அமைச்சர் பி.டி.ஆரின் தாயாரும், கோயில் அறங்காவலர் குழுத் தலைவருமான ருக்மணி பழனிவேல் ராஜன் கூறுகையில், “துணை குடியரசுத் தலைவரின் வருகையின் போது ஜெனரேட்டர் மூலமாகவே மின்சாரம் வழங்கப்பட்டது. இதன் வழியாக மாநிலத்தில் எவ்வளவு மின்வெட்டு இருக்கிறது என்பதை கடவுள் காட்டுகிறார். மின்தடை சரியாக வேண்டும் என நாம் மீனாட்சியிடம் வேண்டிக் கொள்ள வேண்டும்” என்று தெரிவித்தார்.
அமைச்சர் விளக்கம்
இது தொடர்பாக அமைச்சர் நிர்மல் குமார், “துணை குடியரசுத் தலைவர் தரிசனத்தை முடித்துவிட்டு கிழக்குக் கோபுரத்தின் முன்பு செய்தியாளர்களைச் சந்தித்தபோது, கோயிலின் மின் கட்டுப்பாட்டு அறையில் ஏற்பட்ட கோளாறு காரணமாகவே மின் விநியோகம் தடைபட்டது. மேலும், இரண்டு நிமிடங்களுக்குள் ஜெனரேட்டர் மின்சாரத்திலிருந்து மின்சார வாரியத்தின் விநியோகத்திற்கு மாற்றப்பட்டது” என்று விளக்கமளித்தார்.
முன்னதாக, அதிமுக பொதுச்செயலாளரும் முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி மீனாட்சி அம்மன் கோயிலுக்குச் சென்று சாமி தரிசனம் செய்தபோதும் மின்வெட்டு ஏற்பட்டது குறித்து விமர்சித்திருந்தார்.
பணியிடை நீக்கம்
இந்நிலையில், துணை குடியரசுத் தலைவர் வருகையின் போது மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் மின்தடை ஏற்பட்டது தொடர்பாக, கோயிலின் இளநிலை மின் பொறியாளர் ஜானகிராமனைப் பணியிடை நீக்கம் செய்து கோயில் அறங்காவலர் குழுத் தலைவர் ருக்மணி பழனிவேல் ராஜன் நடவடிக்கை எடுத்துள்ளார். மேலும், பணியில் கவனக்குறைவாகச் செயல்பட்டது குறித்து 15 நாட்களுக்குள் விளக்கம் அளிக்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.









