தவெக ஆட்சியில் 110 சதவீத விலை உயர்வுடன் மின்சாரம் வாங்குவது எந்த வகையில் நியாயம் என எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பி உள்ளார்.
செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் பகுதியில் அதிமுக சார்பில் நடந்த நிகழ்ச்சியில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில், “இன்றைக்கு மின் கட்டணம் எந்த அளவுக்கு உயர்ந்துள்ளது என்பதை நாம் பார்க்க முடிகிறது. மின்சாரத்தைத் தொட்டால் தான் ஷாக் அடிக்கும் நிலை போய், இன்றைக்கு மின் கட்டணத்தைக் கேட்டாலே ஷாக் அடிக்கும் நிலைமை தான் நிலவுகிறது. சரி, மின் கட்டணம் தான் உயர்ந்து விட்டது, மின்சாரத்தையாவது முறையாக வழங்குகிறார்களா என்றால் அதுவும் இல்லை. அதனால் தான் நமது கூட்டத்திற்கு கூட முன்கூட்டியே ஜெனரேட்டர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. கடுமையான மின்வெட்டு நிலவி வருகிறது. இந்த ஆட்சியில் எப்போது மின்சாரம் வரும், எப்போது போகும் என்றே தெரியாத சூழல் உள்ளது.
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு நான் சென்றிருந்த போது அங்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டது. அதற்கு மின்சாரத்துறை அமைச்சர் ஒரு காரணம் கூறினார். ஆனால், துணை குடியரசுத் தலைவர் வருகை தந்த போது கூட இரண்டு முறை மின் வெட்டு ஏற்பட்டுள்ளது. இதற்கு அமைச்சர் என்ன பதில் சொல்லப் போகிறார்?
மின்சாரத்துறை அமைச்சர் நிர்மல்குமார் எப்போது பார்த்தாலும் பேட்டி கொடுத்து கொண்டு இருப்பார். சட்டமன்றத்தில் பேசிய மின்சாரத்துறை அமைச்சர், முந்தைய ஆட்சியில் ஒரு யூனிட் மின்சாரம் 20 ரூபாய்க்கு அதிக விலைக்கு வாங்கப்பட்டதாகவும், அதில் ஊழல் நடந்துள்ளதாகவும் குற்றம் சாட்டினார். ஆனால், தற்போதைய ஆட்சியில் ரூ.37 ரூபாய் 50 காசுகளுக்கும், பின்னர் ரூ.41.50 காசுகளுக்கும் மின்சாரம் வாங்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
முந்தைய ஆட்சியில் 20 ரூபாய்க்கு மின்சாரம் வாங்கியதையே ஊழல் என்று கூறிய அமைச்சர் நிர்மல் குமார் தற்போது ரூ.41 .50 காசுகளுக்கு, அதாவது 110 சதவீத உயர்வுடன் மின்சாரம் வாங்குவது எந்த வகையில் நியாயம்? மக்களின் வரிப் பணத்தில் தறிகெட்டது போல் ஆட்சி நடத்தும் இவர்கள், இதற்குத் தகுந்த பதில் சொல்லியே ஆக வேண்டும். காலம் மாறும்; மீண்டும் அதிமுக ஆட்சி மலரும்.” என தெரிவித்துள்ளார்.









