கைதிகள் தப்பியோடிய சம்பவத்தின் எதிரொலி: சிறைத்துறை நடத்திய பெட்ரோல் பங்க், உணவகம் தற்காலிகமாக மூடல்!

By Pandeeswari Gurusamy

|

Published on 1 Nov 2026, 10:54 AM

கோவை மத்திய சிறை வளாகத்தில் இருந்து கைதி ராகவன் தப்பியோடிய எதிரொலியாக, சிறைத்துறை சார்பில் பொதுமக்களுக்காக இயங்கி வந்த பெட்ரோல் பங்க், உணவகம் மற்றும் இறைச்சிக் கடைகள் ஆகியவை தற்காலிகமாக மூடப்பட்டு உள்ளன.

தமிழகம் முழுவதும் சிறைத்துறை சார்பில் ‘பிரீடம்’ என்ற பெயரில் பெட்ரோல் விற்பனை நிலையங்கள், உணவகங்கள், இறைச்சிக் கடைகள் உள்ளிட்டவை தொடங்கப்பட்டு செயல்பட்டு வந்தன. இந்த சூழலில் கோவை மத்திய சிறை நிர்வாகம் சார்பில் வெளிவளாகத்தில் இயங்கி வந்த வணிகச் செயல்பாடுகள் உடனடியாக முடக்கப்பட்டு உள்ளன. இதன் படி, சிறைவாசிகளின் நல்வாழ்வு மற்றும் மறுவாழ்வு நிதியின் கீழ் இயங்கி வந்த இந்தியன் ஆயில் பெட்ரோல் பங்க், கைதிகளால் சமைக்கப்பட்டுப் பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்படும் சிறை உணவகம் சிறை வளாகத்தில் செயல்பட்டு வந்த இறைச்சிக் கடைகள் ஆகியவை தற்காலிகமாகப் பூட்டப்பட்டு உள்ளன.

ADVERTISEMENT

தமிழகத்தில் அடுத்தடுத்து கைதிகள் தப்பி ஓடிய சூழலில் மறு உத்தரவு வரும் வரை இந்தப் பிரிவுகள் அனைத்தும் தற்காலிகமாக மூடப்படும் என்றும், பாதுகாப்பு விதிமுறைகள் மற்றும் சிறை வளாகத்தின் வெளிக்காவல் அமைப்புகள் முழுமையாக ஆய்வு செய்யப்பட்ட பின்னரே மீண்டும் திறக்கப்படும் என்றும் சிறைத் துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

இதன் ஒரு பகுதியாக, பாளையங்கோட்டை மத்திய சிறை வளாகத்திற்கு வெளியே சிறைத்துறைக்குச் சொந்தமான இடத்தில் உணவகம், இறைச்சிக் கடை ஆகியவை செயல்பட்டு வந்தன. இவற்றில் தண்டனை பெற்ற நன்னடத்தை கைதிகள் பணியமர்த்தப்பட்டு வந்தனர். இதன் மூலம் சிறைத்துறைக்கு வருவாய் கிடைத்ததுடன், பணியாற்றிய சிறைவாசிகளுக்கும் ஊதியம் வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில் அந்த கடைகளும் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

கடந்த சில தினங்களுக்கு முன் தேனி மாவட்ட சிறையில் இருந்து 17 கைதிகள் ஒரே நேரத்தில் தப்பி ஓடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. நேற்று முன்தினம் நள்ளிரவில் கோவை அன்னூர் காவல் நிலையக் காவலில் இருந்து நீதிமன்றக் காவலுக்கு அழைத்து வரப்பட்ட கைதி ராகவன், கோவை மத்திய சிறை வளாகத்திற்குள் வைத்து போலீசாரை ஏமாற்றி விட்டுத் தப்பியோடினான். அதேபோன்று நேற்று சென்னையிலும் காவல்துறையினரின் கட்டுப்பாட்டில் இருந்த கைதி ஒருவர் தப்பி ஓடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து எதிர்க்கட்சிகள் கடும் விமர்சனங்களை முன் வைத்து வரும் நிலையில் கைதிகள் தப்பி ஓடுவதை தவிர்க்கும் நோக்கில் கடைகள் மூடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்!

Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel