தூத்துக்குடியில் முன்னாள் விசிக நிர்வாகி படுகொலை

By Pandeeswari Gurusamy

|

Published on 1 Nov 2026, 1:28 PM

தூத்துக்குடியில் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முன்னாள் நிர்வாகி வெட்டிக் படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி அருகே உள்ள மாப்பிள்ளையூரணி ஊராட்சிக்கு உட்பட்ட சோட்டையன் தோப்புப் பகுதியைச் சேர்ந்தவர் பாலமுருகன். இவர் விசிகவின் முன்னாள் ஒன்றியச் செயலாளராகப் பொறுப்பு வகித்தவர். மேலும், இப்பகுதியில் காய்கறி கடை நடத்தி வருகிறார். இந்நிலையில், இன்று காலை மார்க்கெட்டுக்குச் சென்று காய்கறிகளை வாங்கிவிட்டு, கடையில் இறக்கி வைத்த பின்னர், தனது இருசக்கர வாகனத்திற்குப் பெட்ரோல் போடுவதற்காகச் சென்றுள்ளார்.

ADVERTISEMENT

அப்போது அங்கு வந்த அடையாளம் தெரியாத கும்பல், பாலமுருகனைச் சரமாரியாக வெட்டிவிட்டுத் தப்பியோடியது. இந்த கொடூர சம்பவத்தில் பாலமுருகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில் நடந்த இந்தக் கொலைச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து தாளமுத்துநகர் காவல் நிலையக் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே, இன்று நடைபெற இருந்த பூ புனித நீராட்டு விழா ஒன்றுக்குப் பேனர் வைப்பதில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட தகராறு காரணமாக இந்தப் படுகொலை நடந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ADVERTISEMENT

குற்றவாளிகளை உடனடியாகக் கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி, பாலமுருகனின் உறவினர்கள் ராமேஸ்வரம் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சம்பவம் நடந்த இடத்தில் நெல்லை மண்டல டி.ஐ.ஜி. திருநாவுக்கரசர் மற்றும் தூத்துக்குடி மாவட்டக் கண்காணிப்பாளர் சிவபிரசாத் ஆகியோர் நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.

பாலமுருகன் கொலை சம்பவம் குறித்து விசாரணை நடத்த நான்கு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. சி.சி.டி.வி. (CCTV) காட்சிகள் அடிப்படையில் காவல்துறையினர் கொலையாளிகள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அடுத்தடுத்த கொலைச் சம்பவங்களால் தூத்துக்குடி நகரம் முழுவதும் பதற்றமான சூழல் நிலவி வருவதால், மேலும் அசம்பாவிதங்கள் நிகழாமல் தடுக்கப் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்!

Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel