தமிழ்நாடு நாள்: தமிழ் நிலம் காத்த தியாகிகளுக்கு வீரவணக்கம்!

By Mathi

|

Published on 1 Nov 2026, 11:32 AM

Tamil Nadu Day- Nov.1

சென்னை மாகாணமாக இருந்த தமிழ்நாட்டின் எல்லைகள் மொழிவாரியாக மறுசீரமைக்கப்பட்ட நாள் நவம்பர் 1.

1956-ம் ஆண்டு நவம்பர் 1-ந் தேதி மொழிவாரி மாநில மறுசீரமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்தது. அதன்படி, தமிழ் பேசும் மக்கள் அதிகம் வாழ்ந்த பகுதிகளை ஒருங்கிணைத்து அன்றைய சென்னை மாநிலத்தின் எல்லைகள் மாற்றியமைக்கப்பட்டன. திருவிதாங்கூர்–கொச்சி மாநிலத்தில் இருந்த கன்னியாகுமரி பகுதி, மார்ஷல் நேசமணி தலைமையிலான போராட்டத்தால் சென்னை மாநிலத்துடன் இணைக்கப்பட்டது. செங்கோட்டை பகுதியும் இணைக்கப்பட்டது. இதேபோல ம.பொ.சிவஞானம் தலைமையில் வடக்கெல்லைப் போராட்டமும் நடைபெற்றது.

ADVERTISEMENT

ஆனால் 1956-ல் மாநிலத்தின் எல்லைகள் மாற்றப்பட்டபோதும் தமிழ்நாடு என்ற பெயர் சூட்டப்படவில்லை. சென்னை மாநிலம் என்ற பெயரே நீடித்தது. தமிழ்நாடு என்று பெயர் மாற்றக் கோரி உண்ணாவிரதம் இருந்த சங்கரலிங்கனார் 1956-ம் ஆண்டு அக்டோபரில் உயிரிழந்தார். பின்னர் 1967 ஜூலை 18-ந் தேதி முதலமைச்சர் அண்ணா தலைமையிலான அரசு, சென்னை மாநிலத்தைத் தமிழ்நாடு எனப் பெயர் மாற்றும் தீர்மானத்தைச் சட்டப்பேரவையில் நிறைவேற்றியது. 1969-ம் ஆண்டு ஜனவரி 14-ந் தேதி தமிழ்நாடு என்ற பெயர் அதிகாரப்பூர்வமாக நடைமுறைக்கு வந்தது.

இதனால் தமிழ்நாடு நாள் எது என்பதில் இருவேறு கருத்துகள் உருவாகின. 2019-ல் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசு நவம்பர் 1-ஐ தமிழ்நாடு நாளாக அறிவித்தது. இதனடிப்படையில் நவம்பர் 1 தமிழ்நாடு நாளாகக் கொண்டாடப்படுகிறது.

ADVERTISEMENT

தமிழ்நாடு நாளை முன்னிட்டு தலைவர்கள் வெளியிட்டுள்ள வாழ்த்துகள்

பிரதமர் மோடி: தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் இந்த சிறப்பான தமிழ்நாடு தினத்தில் மனம் நிறைந்த நல்வாழ்த்துகள்! தொழில்முனைவோடு கடின உழைப்பும் மிக்கவர்களாய் விளங்கும் தமிழ்நாட்டு மக்கள் இந்தியாவின் வளர்ச்சிக்கு மகத்தான பங்களிப்பை வழங்கியுள்ளனர். உற்பத்தித் துறை முதல் வாகனங்கள் மற்றும் ஜவுளித்துறை, மின்னணுவியல், விண்வெளி தொழில்நுட்பம், மருத்துவம் மற்றும் வளர்ந்துவரும் தொழில்துறைகள் வரை, தமிழகம் தனித்துவமிக்க கண்டுபிடிப்பு, திறன் மற்றும் தொழில்துறை சிறப்புகளை தன்னகத்தே கொண்டு சிறந்து விளங்குகிறது.

தமிழ்நாட்டு மக்கள் தங்கள் பண்பாடு, தனித்துவம் மற்றும் பாரம்பரியம் குறித்து பெருமிதம் கொள்கின்றனர். தமிழ் கலாச்சாரம் நம் நாட்டின் நாகரிகப் பயணத்தைப் பல வழிகளில் செழுமையாக்கியுள்ளது. இந்த நன்னாள் தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொருவருக்கும் இன்றும் வரும் காலங்களிலும் மகிழ்ச்சியையும், வெற்றியையும், புதிய வாய்ப்புகளையும் வாரி வழங்கட்டும்.

ADVERTISEMENT

ஆளுநர் அர்லேகர்: தமிழ்நாடு மாநில நாள் விழாவை முன்னிட்டு, தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் உலகெங்கிலும் வாழும் தமிழர்கள் அனைவருக்கும் உளமார்ந்த நல்வாழ்த்துகள்.

முதல்வர் விஜய்: மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டு, தமிழ்நாடு மாநிலம் உருவான இந்நன்னாளில், நம் தமிழகத்தின் தனிப்பெருமைகளையும், வரலாற்றுச் சிறப்புகளையும் போற்றி மகிழ்வதோடு, அனைவருக்கும் தமிழ்நாடு நாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தாய்மொழியாம் தமிழைக் காக்கவும், தமிழர் வாழும் பகுதிகளைத் தமிழ்நாட்டுடன் இணைக்கவும் போராடிய தியாகிகளின் வரலாறு தமிழினத்தின் உரிமை உணர்வுக்கும், ஒற்றுமைக்கும் என்றென்றும் வழிகாட்டியாகத் திகழும்.

வரலாற்றுச் சிறப்புமிக்க இந்நன்னாளில், அன்னைத் தமிழுக்கு நாளும் புகழ் சேர்த்து, தமிழர்களின் கலை, பண்பாடு மற்றும் பாரம்பரியத்தைப் பேணிக் காத்து, நமது மாநிலத்தின் பெருமைகளைத் தொடர்ந்து நிலைநிறுத்திட உறுதியேற்போம்!

முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின்: இன்று நாம் காணும் தமிழ்நாட்டின் நிலப்பரப்பை நமக்குப் பெற்றுத் தந்த எல்லைப் போராட்டத் தியாகிகள் நினைவு நாளில் அவர்களுக்கு என் வீரவணக்கத்தைச் செலுத்துகிறேன்.

“மாலவன் குன்றம் (திருப்பதி) போனால் என்ன, வேலவன் குன்றமாவது (திருத்தணி) எங்களுக்கு வேண்டும்” என முழக்கமிட்டுப் போராடியதால்தான் திருத்தணி, ஓசூர், கன்னியாகுமரி, செங்கோட்டை முதலிய பல ஊர்கள் இன்று நம்மிடம் உள்ளன.

சிலம்புச் செல்வர் ம.பொ.சிவஞானம், மார்ஷல் நேசமணி, மங்கலங்கிழார், தாணுலிங்க நாடார், பொன்னப்ப நாடார், அப்துல் ரசாக் என எத்தனையோ தீரர்கள் முன்னின்று நடத்திய இப்போராட்டங்களில் தங்கள் இன்னுயிரையும் இழந்தவர்கள் பலர்.

எல்லைப் போராட்டத்தில் பங்கெடுத்துச் சிறையேகி, இப்போது வாழ்ந்து வரும் 110 தியாகிகளுக்கு 2021-ஆம் ஆண்டு நமது Dravidian Model ஆட்சியில்தான் ஒரு இலட்சம் ரூபாய் பொற்கிழியும் நினைவுப்பரிசும் வழங்கிப் போற்றினோம். தமிழ்நிலம் காத்த தியாகிகளுக்குத் தலைவணங்கி நன்றி செலுத்துவோம்!

முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி: உலகின் மூத்த மொழியாம் தமிழ் மொழியின் தொன்மையும், சங்க இலக்கியங்களின் செழுமையும், தமிழர் பண்பாட்டின் பெருமையும் போற்றிப் பாதுகாக்கும் பெருநிலமாம் நம் மாநிலம் நமக்கு அமைந்திட்ட வரலாற்று நாள் இன்று.

நவம்பர் 1-ஆம் நாளை தமிழ்நாடு நாளாக அறிவித்தது எனது தலைமையிலான அதிமுக அரசு என்ற பெருமிதத்துடன், தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது உளமார்ந்த தமிழ்நாடு நாள் நல்வாழ்த்துகளை உரித்தாக்குகிறேன்.

வீரத்திலும், அறிவிலும், கலை-பண்பாட்டிலும், சமூக-கல்வி-தொழில் முன்னேற்றத்திலும் சிறந்து விளங்கும் நம் தாய்த்தமிழ்நாடு, அனைத்துத் துறைகளிலும் மேலும் பல உயரங்களைத் தொட்டு, உலக அரங்கில் தனிப்பெருமையுடன் திகழ்ந்திட, தமிழ் கூறும் நல்லுலகின் பிள்ளைகளாம் நாம் அனைவரும் ஓரணியாய் நின்று உழைப்போமென இந்நன்னாளில் உறுதியேற்போம்!

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்!

Mathi

மா.ச.மதிவாணன் (Mathivanan Maran- Mathi) 30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel