‘முரசு’ புயல்.. சென்னை, கடலூர், நாகை உள்ளிட்ட 9 துறைமுகங்களில் 1-ம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு!

By Mathi

|

Published on 1 Nov 2026, 11:11 AM

Cyclone Murasu-Ports Tamil Nadu

வங்கக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி, அடுத்த 6 மணி நேரத்தில் ‘முரசு’ புயலாக வலுப்பெற உள்ள நிலையில், சென்னை, கடலூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட 9 துறைமுகங்களில் 1-ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டை தொடர்ந்து ஏற்றி வைக்க சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.

இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று (நவம்பர் 1) தமிழகத் துறைமுகங்களுக்கான 2-வது புயல் எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில், தென்கிழக்கு வங்க கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 23 கி.மீ. வேகத்தில் மேற்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இன்று காலை 5.30 மணி நிலவரப்படி, தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடலில் மையம் கொண்டுள்ள இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், சென்னைக்கு கிழக்கு – தென்கிழக்கே 700 கி.மீ. தொலைவில் உள்ளது. மேலும் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்துக்கு தெற்கு – தென்கிழக்கே 770 கி.மீ. தொலைவிலும், மசூலிப்பட்டினத்துக்குத் தென்கிழக்கே 770 கி.மீ. தொலைவிலும், ஓங்கோலுக்கு கிழக்கு – தென்கிழக்கே 810 கி.மீ. தொலைவிலும் நிலைகொண்டுள்ளது.

இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தொடர்ந்து மேற்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து, அடுத்த 6 மணி நேரத்தில் தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடலில் புயலாக வலுப்பெற வாய்ப்புள்ளது. புயலாக உருவானதும் அதற்கு ‘முரசு’ என்று பெயரிடப்படும். நாளை (நவம்பர் 2) மத்திய மேற்கு வங்கக்கடலில் தீவிர புயலாக வலுப்பெறும் என்றும், நவம்பர் 3-ந் தேதி காலை ஆந்திர மாநிலம் நெல்லூர் – நரசாபுரம் இடையே கரையைக் கடக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

ADVERTISEMENT

புயல் கரையைக் கடக்கும்போது மணிக்கு 100 முதல் 110 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். இடையிடையே காற்றின் வேகம் மணிக்கு 120 கி.மீ. வரை அதிகரிக்கக்கூடும்.

எந்தெந்த துறைமுகங்களில் எச்சரிக்கைக் கூண்டு?

இந்த நிலையில், சென்னை, கடலூர், நாகப்பட்டினம் ஆகிய 3 துறைமுகங்களில் 1-ஆம் எண் தொலைதூர எச்சரிக்கைக் கூண்டைத் தொடர்ந்து ஏற்றிவைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

அதேபோல எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரி, காரைக்கால், பாம்பன், தூத்துக்குடி ஆகிய 6 துறைமுகங்களிலும் 1-ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டைத் தொடர்ந்து ஏற்றிவைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ராமேஸ்வரம், குளச்சல் துறைமுகங்களுக்குத் தகவலுக்காக மட்டும் இந்த அறிவிப்பு அனுப்பப்பட்டுள்ளது.

1-ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு என்பது கடலில் புயல் உருவாகும் சூழ்நிலையில் துறைமுகங்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்பதைக் குறிக்கிறது.

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்!

Mathi

மா.ச.மதிவாணன் (Mathivanan Maran- Mathi) 30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel