மலையாளத் திரையுலகின் முன்னணி நடிகரான மம்மூட்டிக்கு கேரள காவல்துறை புதிய பொறுப்பு ஒன்றை வழங்கியுள்ளது. சைபர் குற்றங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், காவல்துறை சார்பில் தொடங்கப்பட்டுள்ள கிளிக் திட்டத்தின் கேப்டனாக அவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
இணையம் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப சைபர் குற்றங்களும் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக, ஆன்லைன் மோசடிகள் மூலம் பலரும் பணத்தை இழந்து வருகின்றனர். இதுபோன்ற குற்றங்களைத் தடுப்பதற்காகவும், பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தவும் கேரள அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, கேரள காவல்துறை சார்பில் ‘கிளிக்’ (CLICK) என்ற புதிய திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
‘கிளிக் – சைபர் குற்றங்களை எதிர்க்கும் கேரளாவிற்கான சமூகத்தால் வழிநடத்தப்படும் முயற்சி’ என்ற புதிய திட்டத்தை மாநில உள்துறை அமைச்சர் ரமேஷ் சென்னிதலா நேற்று தொடங்கி வைத்தார். 2027-ஆம் ஆண்டுக்குள் சைபர் அச்சுறுத்தல்களைச் சமாளிக்கும் திறன் கொண்ட மாநிலமாக கேரளாவை உருவாக்குவது இந்தத் திட்டத்தின் நோக்கமாகும் என்றார்.
இந்தத் திட்டத்தின் தொடக்க விழாவில் பங்கேற்ற நடிகர் மம்மூட்டி, சைபர் குற்றங்களுக்கு எதிரான நடவடிக்கைகளில் இளைஞர்களும் ஆர்வத்துடன் ஈடுபட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
மேலும், குழந்தைகளுக்கு செல்போன் பயன்படுத்தக் கற்றுக்கொடுப்பதில் பெற்றோர்கள் கவனமாக இருக்க வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார். குழந்தைகள் அழுது அடம்பிடிக்கும்போதெல்லாம் அவர்களைச் சமாதானப்படுத்துவதற்காக ஸ்மார்ட்போன்களைக் கொடுப்பது சரியான பழக்கமல்ல என்று குறிப்பிட்டார்.
செல்போன்களைப் பொறுப்புடன் கையாளும் பக்குவம் வரும் வரை குழந்தைகளுக்கு அடிப்படை வசதிகளைக் கொண்ட சாதாரண செல்போன்களை (Feature Phone) வழங்கலாம் என்றும் அவர் தெரிவித்தார்.
தொழில்நுட்ப வளர்ச்சியால் கிடைக்கும் வசதிகளை நல்ல விஷயங்களுக்குப் பயன்படுத்துவதைப் போலவே, சிலர் தவறான செயல்களுக்கும் பயன்படுத்துகின்றனர். இணையமும் இதற்கு விதிவிலக்கல்ல. எனவே, இணையத்தை எப்படிப் பாதுகாப்பாகப் பயன்படுத்துவது என்பதைச் சமூகம் தெரிந்துகொள்ள வேண்டும். அதன் தவறான பயன்பாட்டைத் தடுக்கவும் அனைவரும் முன்வர வேண்டும் என்றார்.
குறிப்பாக, செயற்கை நுண்ணறிவு (AI) பயன்பாடு அதிகரித்து வரும் நிலையில், அதன் மூலம் மக்களைத் தவறாக வழிநடத்துவதற்கான வாய்ப்புகளும் அதிகரித்துள்ளன. சைபர் குற்றங்களை முன்கூட்டியே அடையாளம் கண்டு அவற்றை எதிர்கொள்ளும் விழிப்புணர்வு ஒவ்வொருவருக்கும் இருக்க வேண்டும். அந்த வகையில், ‘கிளிக்’ திட்டம் முக்கியமான முயற்சியாக இருக்கும் என்றும் மம்மூட்டி பேசினார்.
தொடர்ந்து, தேர்ந்தெடுக்கப்பட்ட 10 மாணவர்களுக்கு ‘கிளிக் கேப்டன்’ தொப்பிகளை அவர் வழங்கினார்.










