தென்மேற்கு வங்க கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலு பெற்றுள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
வடகிழக்குப் பருவமழை காலத்தில் இரண்டாவது புயல் தற்போது உருவாகியுள்ளது. தெற்கு அந்தமான் கடல் பகுதிகள் மற்றும் அதை ஒட்டிய நிக்கோபார் தீவுகளில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி நேற்று முன்தினம் உருவானது. இது தீவிர காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாகவும், காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாகவும் வலுப்பெற்றது.
இந்நிலையில், தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவிய தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம், இன்று (01 நவம்பர் 2026) இந்திய நேரப்படி காலை 11:30 மணி அளவில் புயலாக வலுப்பெற்றுள்ளது. இந்தப்புயலுக்கு இந்திய அரசு பரிந்துரைத்த ‘முரசு’ என்ற பெயர் சூட்டப்பட்டுள்ளது.
இன்று காலை 11.30 மணி நிலவரப்படி ‘முரசு’ புயல் சென்னைக்கு கிழக்கு–தென்கிழக்கே 560 கி.மீ. தொலைவில் மையம் கொண்டுள்ளது. கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 23 கி.மீ. வேகத்தில் மேற்கு–வடமேற்கு திசையில் நகர்ந்துள்ள இந்தப் புயல், நாளை (நவம்பர் 2) காலை தீவிரப் புயலாக வலுப்பெறும்.
அதனைத் தொடர்ந்து வடமேற்கு திசையில் நகர்ந்து, நவம்பர் 2-ந் தேதி இரவு 11.30 மணி முதல் நவம்பர் 3-ந் தேதி அதிகாலை 4 மணிக்குள் ஆந்திர மாநிலம் நெல்லூர்–நரசாபுரம் இடையே கரையைக் கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
அப்போது மணிக்கு 100 முதல் 110 கி.மீ. வேகத்தில் சூறாவளிக் காற்று வீசக்கூடும். அதிகபட்சமாக மணிக்கு 120 கி.மீ. வேகத்தில் காற்று வீச வாய்ப்புள்ளது.
இந்த ‘முரசு’ புயல் காரணமாக வட தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மற்றும் திருவள்ளூரில் கனமழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக, இந்த ஆண்டுக்கான வடகிழக்குப் பருவமழை காலத்தின் முதல் புயல் ‘அர்னாப்’ வங்கக்கடலில் கடந்த 25-ஆம் தேதி உருவானது. இந்தப்புயல் ஆந்திராவை ஒட்டிய பகுதிகளில் கரையைக் கடந்து, சூறாவளிக் காற்றுடன் மழையைப் பொழிந்தது குறிப்பிடத்தக்கது.










