டெல்லியில் 10 லட்சம் பேர்.. ஞானேஷ் குமார் பதவி விலகக் கோரி ‘இந்தியா கூட்டணி’ தலைவர்கள் பிரம்மாண்ட பேரணி!

By Mathi

|

Published on 1 Nov 2026, 1:29 PM

Delhi-India Bloc Rally

இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தி டெல்லியில் இந்தியா கூட்டணி சார்பில் இன்று (நவம்பர் 1) பிரம்மாண்ட பேரணி தொடங்கியது. டெல்லி கன்னாட் பிளேஸ்–மிண்டோ சாலை சந்திப்பில் இருந்து சுமார் 2 கி.மீ. தொலைவில் உள்ள ராம்லீலா மைதானத்தை நோக்கி இந்தப் பேரணி நடைபெற்று வருகிறது.

முன்னதாக, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவின் ராஜாஜி மார்க் இல்லத்தில் இருந்து இந்தியா கூட்டணியின் முக்கியத் தலைவர்கள் திறந்தவெளிப் பேருந்தில் புறப்பட்டனர். இந்தப் பேருந்தில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால், மேற்கு வங்க முன்னாள் முதல்வர் மம்தா பானர்ஜி, பீகார் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ், காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி ஆகியோர் ஒன்றாகப் பயணித்தனர்.

ADVERTISEMENT

கன்னாட் பிளேஸ்–மிண்டோ சாலை சந்திப்பை அடைந்ததும் ராகுல் காந்தி பேரணியைத் தொடங்கி வைத்தார். அவருடன் அகிலேஷ் யாதவ், மம்தா பானர்ஜி, தேஜஸ்வி யாதவ், பரூக் அப்துல்லா உள்ளிட்ட தலைவர்களும் பேரணியில் பங்கேற்றுள்ளனர்.

தலைவர்களை வரவேற்க மிண்டோ சாலை பகுதியில் ஏராளமான தொண்டர்கள் திரண்டுள்ளனர். ராம்லீலா மைதானத்திலும் பல்லாயிரக்கணக்கானோர் தேசியக் கொடிகள் மற்றும் கட்சிக் கொடிகளை ஏந்தியபடி முழக்கங்களை எழுப்பி வருகின்றனர்.

ADVERTISEMENT

உத்தரப் பிரதேசம், ஹரியானா, ஜார்க்கண்ட், ராஜஸ்தான் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து இந்தியா கூட்டணிக் கட்சிகளின் தொண்டர்கள் பேரணியில் பங்கேற்றுள்ளனர்.

தமிழ்நாட்டில் இருந்து காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள், மதிமுக, இடதுசாரி கட்சிகளைச் சேர்ந்தவர்களும் பெரும் எண்ணிக்கையில் பங்கேற்றுள்ளனர்.

ADVERTISEMENT

கர்நாடகாவில் இருந்து வந்த போராட்டக்காரர்கள், வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டதாகக் கூறப்படும் வாக்காளர்களின் பெயர்கள் அச்சிடப்பட்ட பல மீட்டர் நீளத் துணி பேனரை ஏந்தி வந்துள்ளனர். இது பேரணியில் கவனத்தை ஈர்த்துள்ளது.

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தம் (SIR) மூலம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்படுவதாகக் குற்றம்சாட்டியும், தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தியும் இந்தப் பேரணி நடைபெறுகிறது.

இந்தப் பேரணி ராம்லீலா மைதானத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. சுமார் 50,000 பேர் மட்டுமே கூடக்கூடிய இந்த மைதானத்தில் 10 லட்சம் பேரைத் திரட்டுவோம் என இந்தியா கூட்டணித் தலைவர்கள் அறிவித்துள்ளனர்.

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்!

Mathi

மா.ச.மதிவாணன் (Mathivanan Maran- Mathi) 30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel