கோவை, திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் பணியாற்றி வரும் வடமாநில தொழிலாளர்கள் சொந்த ஊர் செல்ல ஆர்வம் காட்டி வருவதால் வடமாநில தொழிலாளர்கள் ரயில் நிலையங்களில் குவிந்து வருகின்றனர்.
தமிழகத்தின் முன்னணி தொழில் நகரங்களான கோவை திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் பணியாற்றும் 3 லட்சத்துக்கும் மேற்பட்ட வடமாநிலத் தொழிலாளர்கள், தீபாவளி மற்றும் சாத் பூஜை பண்டிகைகளைக் கொண்டாட சொந்த ஊர்களுக்குப் செல்ல ஆர்வம் காட்டி வருகின்றனர்.
திருப்பூர் மாநகரில் மட்டும் சுமார் 2 லட்சம் வடமாநிலத் தொழிலாளர்கள் தங்கி பணியாற்றி வருகின்றனர். பின்னலாடை மற்றும் அதனைச் சார்ந்த தொழில் நிறுவனங்களில் உத்தரபிரதேசம், பீகார், ஜார்க்கண்ட், ஒடிசா, மேற்கு வங்கம், அசாம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
வடமாநிலங்களில் தீபாவளி பண்டிகையையொட்டி கோவர்த்தன் பூஜை, மற்றும் பீகார் உள்ளிட்ட மாநிலங்களில் கொண்டாடப்படும் சாத் பூஜை என அடுத்தடுத்து பண்டிகைகள் விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம். சாத் பூஜையின்போது சூரிய பகவானுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் ஆற்றங்கரைகளில் விரதமிருந்து வழிபாடு செய்வது வழக்கம். இந்த பண்டிகைகளை கொண்டாடும் நோக்கில் லட்சணக்கணக்கான புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊர் கிளம்பி உள்ளனர்.
பனியன் நிறுவனங்களில் சம்பளத்துடன் தீபாவளி போனஸ் நேற்றைய தினம் வழங்கப்பட்டுள்ளது. இதனால் நேற்று இரவு முதல் தங்களது சொந்த ஊருக்கு புறப்பட துவங்கினர், இதனால் கோவை, போத்தனூர், திருப்பூர், ஈரோடு வழியாக வடமாநிலங்களுக்குச் செல்லும் ரயில்களில் பயணிகள் கூட்டம் அதிகரித்துள்ளது. முன்கூட்டியே முன்பதிவு செய்தும் பலருக்கு டிக்கெட் கிடைக்காததால், முன்பதிவில்லாத பெட்டிகளில் பயணம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
திருப்பூர் ரயில் நிலையத்தில் இரவு முழுவதும் காத்திருக்கும் தொழிலாளர்கள், ரயில்கள் வந்ததும் முண்டியடித்து சென்று இடம் பிடிக்கும் சூழல் உருவாகி உள்ளது. இன்று காலை திருப்பூரில் இருந்து பீகார் மாநிலம் பரோனி சென்ற சிறப்பு ரயிலிலும் ஏராளமான தொழிலாளர்கள் மூட்டை முடிச்சுகளுடன் ஏறிச் சென்றனர். ரயிலுக்குள் இடம் பிடிப்பதில் பயணிகளிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
பயணிகள் நெரிசலை சமாளிக்கும் வகையில் தெற்கு ரயில்வே சார்பில் போத்தனூர் – பரோனி, போத்தனூர் – நியூ டின்சுகியா உள்ளிட்ட வழித்தடங்களில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. மேலும் சென்னை – கொல்லம் வழித்தடத்திலும் சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த ரயில்கள் திருப்பூர் வழியாகச் செல்கின்றன இருப்பினும், பீகார், உத்தரப் பிரதேசம், ஜார்க்கண்ட், ஒடிசா, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களுக்குச் செல்லும் தொழிலாளர்களின் எண்ணிக்கையைக் கருத்தில் கொண்டு கூடுதல் சிறப்பு ரயில்களை இயக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.










