கப்பிகுளம் ஜெ.பிரபாகர்
பிரிட்டிஷ் கிழக்கிந்திய நிறுவனத்தின் கீழ் ஒரு முகமையாக (Agency) இருந்த சென்னை, 1684 ஜூன் 16 முதல் முழு அதிகாரமிக்க மாகாணமாக (Presidency) தரம் உயர்த்தப்பட்டு, அதன் முதல் தலைவராக (President) வில்லியம் கைஃபோர்ட் (William Gyfford) பொறுப்பேற்றார்.
- ஏப்ரல் 1, 1936
சென்னை மாகாணத்தின் கஞ்சம் போன்ற சில பகுதிகளை உள்ளடக்கி ஏப்ரல் 1, 1936-லேயே பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் ஒடிசா (ஒரிசா) தனியாகப் பிரிக்கப்பட்டது.
- ஜனவரி 26, 1950
இந்திய அரசியலமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்த நாளான ஜனவரி 26, 1950 அன்று சென்னை மாகாணம் (Madras Presidency) என்பது அதிகாரப்பூர்வமாக ‘சென்னை மாநிலம்’ (Madras State) என்று அறிவிக்கப்பட்டது.
- அக்டோபர் 1, 1953
சென்னை மாநிலத்தின் வட சர்க்கார் மற்றும் ராயலசீமா (தெலுங்கு பேசும் பகுதிகள்) பிரிக்கப்பட்டு அக்டோபர் 1, 1953 அன்று ஆந்திரா (ஆந்திரப் பிரதேசம்) உருவாக்கப்பட்டது.
- நவம்பர் 1, 1956
சென்னை மாநிலத்தின் மலபார் மாவட்டம் மற்றும் காசர்கோடு (மலையாளம் பேசும் பகுதிகள்) பிரிக்கப்பட்டு நவம்பர் 1, 1956 அன்று கேரளம் (கேரளா) உருவாக்கப்பட்டது.
சென்னை மாநிலத்தின் தெற்கு கனரா, பெல்லாரி, குடகு (கன்னடம் பேசும் பகுதிகள்) பிரிக்கப்பட்டு நவம்பர் 1, 1956 அன்று கர்நாடகா (மைசூர் மாநிலம்) உருவாக்கப்பட்டது.
நவம்பர் 1, 1956-இல் மொழிவாரி மாநில மறுசீரமைப்புக்குப் பிறகு, தற்போதைய எல்லைகளுடன் கூடிய சென்னை மாநிலம் (Madras State) உருவானது.
- ஜூலை 18, 1967
திமுக ஆட்சியில் முதலமைச்சராக இருந்த பேரறிஞர் அண்ணா, ஜூலை 18, 1967 அன்று சென்னை மாநிலத்தின் (Madras State) பெயரை ‘தமிழ்நாடு’ என மாற்றுவதற்கான வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்மானத்தைச் சட்டமன்றத்தில் ஒருமனதாக நிறைவேற்றினார்.
- ஜனவரி 14, 1969
பேரறிஞர் அண்ணா முதலமைச்சராக இருந்தபோது, சென்னை மாநிலத்திற்கு ‘தமிழ்நாடு’ எனப் பெயர் மாற்றும் சட்டம் நாடாளுமன்றத்திலும் தமிழக சட்டமன்றத்திலும் நிறைவேற்றப்பட்டு, ஜனவரி 14, 1969 அன்று அதிகாரப்பூர்வமாக ‘தமிழ்நாடு’ என்று பெயர் மாற்றப்பட்டது.
அதாவது,
ஏப்ரல் 1 – ஒடிசா பிரிந்தது.
அக்டோபர் 1 – ஆந்திரா பிரிந்தது.
நவம்பர் 1 – கேரளம், கர்நாடகா பிரிந்தன.
ஜூன் 16 – சென்னை மாகாணம் உருவாக்கப்பட்டது.
ஜனவரி 26 – சென்னை மாநிலம் (Madras State) என்று அறிவிக்கப்பட்டது.
ஜூலை 18 – தமிழ்நாடு என்று பெயர் மாற்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ஜனவரி 14 – அதிகாரப்பூர்வமாகத் தமிழ்நாடு எனப் பெயர் மாற்றப்பட்டது.
எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசு, மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட நவம்பர் 1-ஆம் தேதியைத் தமிழ்நாடு நாளாக அறிவித்திருந்தது.
மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு, தீர்மானம் நிறைவேற்றப்பட்ட ஜூலை 18-ஐத் தமிழ்நாடு நாளாக மாற்றியது.
விஜய் தலைமையிலான தவெக அரசு, நவம்பர் 1-இல் தமிழ்நாடு நாள் கொண்டாடுவதாக அறிவித்துள்ளது.
ஏன் இந்த முரண்பாடு?
ஜூலை 18 என்பது திமுக அரசு தீர்மானம் நிறைவேற்றிய நாள்.

இரண்டாவதாக, “தமிழ்நாடு தமிழருக்கே” என்ற முழக்கத்தை முன்வைக்கும் தமிழ்தேசியர்கள் ஒடிசி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழி பேசுபவர்கள் பிரிந்து சென்ற நவம்பர் 1 என்பதை விரும்புகிறார்கள்.
தென்னிந்திய மொழிகளைத் தன்னகத்தே கொண்ட சென்னை மாகாணம் அனைவருக்குமானது என்பது திராவிட நாடு முழக்கமிட்டவர்களின் வாதம்.
மற்றொரு பக்கத்தில் ஆந்திரா, கேரளா, கர்நாடகா, தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் மொழிச் சிறுபான்மையினராகத் தமிழர்கள் வாழ்கிறார்கள். தமிழ் நிலங்கள் அங்கும் உள்ளன. அதே போலத் தமிழ்நாட்டிலும் தெலுங்கு, மலையாளம், கன்னடம் பேசும் மொழிச் சிறுபான்மையினர் வாழ்கிறார்கள். ஏன், இந்தியாவில் இருந்து பாகிஸ்தான் பிரிந்த போது செல்லாமல் இந்தியாவை நேசிக்கும் உருது பேசும் இஸ்லாமியர்கள் பெருவாரியாக வாழ்கிறார்கள்.
எனவே தமிழ், தமிழர் என்று பழம்பெருமை கொண்டது தமிழ்நாடு.
ஆகவே, “மொழிப் பிரிவினை கிடையாது, தமிழ்நாடு வாழ்க!, தமிழ்நாடு வாழ்க!, தமிழ்நாடு வாழ்க!” என்று மூன்று முறை முழங்கி, பேரறிஞர் அண்ணா தீர்மானம் நிறைவேற்றிய ஜூலை 18 தான் தமிழ்நாடு நாள் என்பது திமுக ஆதரவாளர்களின் வாதம்.
மற்றுமொரு சிக்கலும் இருக்கிறது. சென்னை மாகாணத்தில் இருந்து தெலுங்கு பேசும் பகுதிகளைப் பிரிக்கப் போராடியவர் பொட்டி ஸ்ரீராமுலு.
சென்னை மாநிலத்திற்குத் தமிழ்நாடு என்று பெயர்சூட்டக் கோரிக்கை வைத்து உண்ணாவிரதம் இருந்து மாண்ட தியாகி சங்கரலிங்கனார் போராடியது பெருந்தலைவர் காமராஜர் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சிக்கு எதிராக.
வட எல்லை காக்க ம.பொ.சி. போன்றவர்களும், தெற்கு எல்லை காக்க நேசமணி உள்ளிட்டோர்களும் போராடியது காமராஜர் ஆட்சியில்தான்.
நாம், நவம்பர் 1-ஐத் தமிழ்நாடு நாளாகக் கொண்டாடும் போது ஹீரோக்களாக தியாகி சங்கரலிங்கனார், மார்ஷல் நேசமணி, ம.பொ.சிவஞானம் உள்ளிட்ட எண்ணற்ற தியாகிகளைப் போற்றிப் புகழ்வோம். சரி, அவர்கள் யாரை எதிர்த்துப் போராடினார்கள், உயிர்த்தியாகம் செய்தார்கள் என்று திரும்பிப் பார்த்தால் காங்கிரஸ் அரசும், நேருவும், காமராஜரும் முன் நிற்கிறார்கள்.
அவர்களை, இந்நாட்டின் வளர்ச்சிக்காகப் பாடுபட்டவர்களை இந்த ஒரு நிகழ்விற்காக வில்லன்களாகச் சித்தரிக்கப் போகிறோமா என்பதும் கேள்விக்குறி. ஆனால், இதை பாஜக விரும்புகிறது.
ஆகவே, ஏப்ரல் 1, அக்டோபர் 1, நவம்பர் 1 ஆகிய மொழிவாரியாக மாநிலங்கள் பிரிந்து சென்ற நாட்களை விட, ஜூன் 16 – சென்னை மாகாணம் உருவாக்கப்பட்ட நாளை விட, ஜனவரி 26 – சென்னை மாநிலம் என்று அறிவிக்கப்பட்ட நாளை விட, ஜூலை 18 – தமிழ்நாடு என்று பெயர் மாற்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நாளே தகுதியான நாள். தமிழ்நாடு நாள் கொண்டாடுவதற்கு மிகவும் பொருத்தமான நாள். ஆம், தமிழ்நாடு எல்லைப் போராட்ட மாவீரர்கள், மொழிப்போர் தியாகிகளின் கோரிக்கைகளைச் சட்டப்பூர்வமாக நிறைவேற்றிய பேரறிஞர் அண்ணாதான் இந்நாளின் நாயகன்.










