7 நாளில் ஹார்முஸ் திறப்பு… ஈரான் – அமெரிக்கா பேச்சுக்கு வந்துள்ள புதிய வரைவில் என்ன இருக்கிறது?

By Minnambalam Desk

|

Published on 1 Nov 2026, 5:39 PM

Strait of Hormuz

அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் நடுவே மூண்டிருக்கும் மோதலை எப்படியாவது ஆறப்போட வேண்டும் என்று பின்னணியில் பேச்சுகள் நடந்துகொண்டிருக்கின்றன. அந்தப் பேச்சுக்காக ஒரு ஆரம்பகட்ட வரைவு தயாராகியிருப்பதாகத் தகவல் வந்துள்ளது. ஈரானிடம் குவிந்திருக்கும் செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை வேறொரு நாட்டுக்கு அனுப்புவது, ஹார்முஸ் ஜலசந்தியை ஒரு வாரத்துக்குள் திறந்துவிடுவது என்று இரண்டு பெரிய விஷயங்கள் அதில் உள்ளன.

வரைவில் இருப்பதாகச் சொல்லப்படுவது

ADVERTISEMENT

அல் அரேபியா இங்கிலீஷ் செய்தியின்படி, வரைவில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் இவை:

  • ஈரானிடம் உள்ள செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை, இரு தரப்பும் ஒப்புக்கொள்ளும் மூன்றாவது நாட்டுக்கு மாற்றுவது. இல்லையென்றால் அதன் செறிவூட்டல் அளவையே குறைப்பது.
  • இரு நாடுகளுக்கும் இடையே முதற்கட்ட உடன்பாடு ஏற்பட்ட ஏழு நாட்களுக்குள் ஹார்முஸ் ஜலசந்தியைச் சர்வதேசக் கப்பல்களுக்குத் திறப்பது.
  • ஈரான் அணுசக்தி, கடல்சார் பாதுகாப்பு விஷயங்களில் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு ஈடாக, அமெரிக்கா பொருளாதாரத் தடைகளையும் முற்றுகைக் கட்டுப்பாடுகளையும் தளர்த்துவது.

இந்த ஒப்பந்தம் சொன்னபடி நடக்கும் என்பதற்கு சீனா உத்தரவாதம் தரலாம் என்ற பேச்சும் அடிபடுகிறது.

ADVERTISEMENT

ஹார்முஸ் மீது ஏன் இத்தனை கவனம்?

உலக எண்ணெய் வர்த்தகத்தில் பெரும்பகுதி போகும் குறுகிய கடல் பாதை இது. இங்கே கப்பல்கள் நின்றுபோனால் எண்ணெய் விலை உடனே எகிறும். அதன் தாக்கம் உலகம் முழுக்க, நம் ஊர் பெட்ரோல், டீசல் விலை வரை எட்டும். இந்தியா போன்ற நாடுகள் வளைகுடாவிலிருந்து கணிசமாக எண்ணெய் வாங்குவதால், இந்தப் பாதை எப்போது திறக்கும் என்பதில் நமக்கும் நேரடிப் பங்கு உண்டு.

ADVERTISEMENT

பேச்சு இஸ்தான்புல்லிலா, தோஹாவிலா?

முதலில் இஸ்தான்புல்லில் பேச்சு நடக்கும் என்றுதான் பேசப்பட்டது. இப்போது அதைக் கத்தார் தலைநகர் தோஹாவுக்கு மாற்றும் யோசனை இருப்பதாகத் தகவல் வந்துள்ளது.

கத்தார் தூதும் வான்ஸ் கடிதமும்

போர் நிறுத்தத்தைத் திரும்பக் கொண்டுவர, கத்தார் குழு ஒன்று தெஹ்ரானுக்குப் போயிருக்கிறது. அமெரிக்கத் துணை அதிபர் ஜே.டி. வான்ஸ், ஈரான் பாதுகாப்பு அதிகாரி மொஹ்சென் ரெசாயிக்கு எழுதிய கடிதமும் இந்தக் குழு வழியாகவே போய்ச் சேர்ந்ததாகச் சொல்லப்படுகிறது.

இப்போதைய நிலை என்ன?

போரை முடிப்பதில் தனக்கு அவசரம் எதுவும் இல்லை என்று அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ஏற்கெனவே சொல்லியிருக்கிறார். அதனால், இந்த வரைவு உண்மையிலேயே பதற்றத்தைக் குறைக்குமா என்ற கேள்வி எழுகிறது. ஒன்றைத் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும். இது இன்னும் வரைவு நிலையில்தான் இருக்கிறது. இறுதி ஒப்பந்தம் முடிந்துவிட்டதாக இதுவரை யாரும் அறிவிக்கவில்லை.

URL: iran-us-nuclear-deal-uranium-transfer-hormuz-strait-reopening

SEO Tags: ஈரான் அமெரிக்கா போர், ஈரான் அமெரிக்கா ஒப்பந்தம், ஹார்முஸ் ஜலசந்தி, யுரேனியம் செறிவூட்டல், டொனால்ட் ட்ரம்ப், JD Vance, Iran US Deal, Strait of Hormuz, Iran Nuclear Programme, US Iran War, Qatar Mediation

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்!

Minnambalam Desk

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel