வாக்கு திருட்டு விவகாரத்தில் இந்திய தேர்தல் ஆணையத்தின் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் நிச்சயம் சிறைக்கு செல்வார்; இந்த விவகாரத்தில் பிரதமர் மோடியும் தப்பித்துவிட முடியாது என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

டெல்லி ராம்லீலா மைதானத்தில் இன்று (நவம்பர் 1) நடைபெற்ற இந்தியா கூட்டணியின் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி பேசியதாவது: 2024-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு இந்தியாவில் 15 சதவீத வாக்காளர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளன. அப்படியானால் 2024 மக்களவைத் தேர்தல் சட்டவிரோதமான தேர்தல். அது திருடப்பட்ட தேர்தல். இதை நான் சொல்லவில்லை. தேர்தல் ஆணையமே சொல்கிறது.
வாக்கு திருட்டு
இந்த நாட்டில் பல ஆண்டுகளாக வாக்குத் திருட்டு நடந்து கொண்டிருக்கிறது. மத்தியப் பிரதேசம், ஹரியானா, சத்தீஸ்கர், மகாராஷ்டிரா, கர்நாடகா எனப் பல மாநிலங்களிலும் வாக்குத் திருட்டு நடந்திருக்கிறது. 2024 மக்களவைத் தேர்தலிலும் வாக்குகள் திருடப்பட்டுள்ளன. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மூலமாகவும், வாக்காளர் பட்டியலில் பெயர்களை நீக்கியும், புதிதாகச் சேர்த்தும் வாக்குத் திருட்டு நடந்துள்ளது.
ஜெயிலுக்கு போவார் ஞானேஷ்குமார்
நான் சொல்வதைக் கவனமாகக் கேளுங்கள். நான் சொல்வதெல்லாம் உண்மையாகிறது அல்லவா? இந்தியாவின் ஒவ்வொரு குடிமகனுக்கும், ஒவ்வொரு இளைஞருக்கும் சொல்கிறேன். ஞானேஷ் குமார் தலைமை தேர்தல் ஆணையர் பதவியில் இருந்து நீக்கப்படுவார். ஞானேஷ் குமார் சிறைக்குச் செல்வார்.
இது சாதாரண திருட்டு அல்ல. இது தேசத்துரோகம். வாக்குத் திருட்டுக்கு உடந்தையாக இருந்ததற்காக ஞானேஷ் குமார் சட்டத்தின் முன் பதில் சொல்ல வேண்டியிருக்கும். ஞானேஷ் குமார் இல்லாமல் நரேந்திர மோடி பிரதமராகியிருக்க முடியாது. அமித் ஷா உள்துறை அமைச்சராகியிருக்க முடியாது.

எங்கள் இந்தியா
இன்று விவசாயிகளுக்கு அவர்களுடைய உரிமைகள் கிடைக்கவில்லை. இளைஞர்களுக்கு வேலை கிடைக்கவில்லை. தொழிலாளர்களுக்கு உரிமைகள் கிடைக்கவில்லை. ஆனால் இந்த நாட்டின் ஒட்டுமொத்த செல்வமும் 2 அல்லது 3 பேரின் கைகளுக்குச் சென்றுவிட்டது. இப்படிப்பட்ட இந்தியாவை நாங்கள் விரும்பவில்லை. இப்படிப்பட்ட இந்தியாவை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டோம். சிவபெருமானின் திருமண ஊர்வலத்தில் (Shiv ki Baraat) யார் வேண்டுமானாலும் பங்கேற்கலாம். எல்லா உயிரினங்களுக்கும் அதில் இடமுண்டு. யாரையாவது அந்த ஊர்வலத்தில் பங்கேற்கக் கூடாது என்று தடுக்க முடியுமா? முடியாது. அப்படிப்பட்ட இந்தியாவைத்தான் நாங்கள் விரும்புகிறோம்.
ஒரு விவசாயி கடுமையாக உழைத்தால் அதற்கான பலன் அவருக்குக் கிடைக்க வேண்டும். ஒரு மாணவர் 18 மணி நேரம் படித்தால் அவருக்கு வேலை கிடைக்க வேண்டும். 2 அல்லது 3 பேருக்கு மட்டுமே சொந்தமான நாடாக இந்தியா இருக்கக் கூடாது. இந்த நாட்டை மீண்டும் சரியான பாதைக்குக் கொண்டுவர வேண்டும். அதற்கான முதல் நடவடிக்கை ஞானேஷ் குமாரை பதவியில் இருந்து அகற்றுவதுதான்.
மோடியைத் தப்பிச் செல்ல விடமாட்டோம்
நரேந்திர மோடி எங்கும் போக மாட்டார் என்று அமித் ஷா கூறியிருக்கிறார்.
நானும் அதைத்தான் சொல்கிறேன். நரேந்திர மோடியை எங்கும் தப்பிச் செல்ல விடமாட்டோம். அவர் தப்பிச் செல்ல நினைத்தாலும் விட்டு விடமாட்டோம்.
நீங்கள் இங்கேதான் இருக்க வேண்டும். ஞானேஷ் குமாருக்குப் பிறகு நரேந்திர மோடி, அமித் ஷா ஆகியோரையும் சட்டத்தின் முன் நிறுத்துவோம். உங்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். இந்த நாட்டில் நடந்த வாக்குத் திருட்டுக்கு மக்கள் நீதி கேட்பார்கள். அதற்குப் பதில் சொல்லியே ஆக வேண்டும்.

ஞானேஷ் குமாரால் தூங்க முடியவில்லை
பாவம், ஞானேஷ் குமாரால் இரவில் தூங்க முடியவில்லை. பயத்தில் அவரால் தூங்க முடியவில்லை. அதை நினைத்தால் எனக்கு வருத்தமாகத்தான் இருக்கிறது. ஆனால் அவர் செய்திருப்பது மிகப்பெரிய குற்றம். இந்த நாட்டு மக்களின் குரலை ஒடுக்க முயன்றிருக்கிறார். நாட்டின் குரல்வளையை நெரிக்க முயன்றிருக்கிறார். இந்த நாட்டின் ஆன்மா மீது தாக்குதல் நடத்தியிருக்கிறார்.
நரேந்திர மோடியாலும் அமித் ஷாவாலும் நிம்மதியாகத் தூங்க முடியவில்லை. நாங்கள் இந்த நாட்டை மீண்டும் சரியான பாதைக்குக் கொண்டுவருவோம்.
எங்களுக்கு யாரும் எதிரிகள் இல்லை
நரேந்திர மோடியையோ, அமித் ஷாவையோ, ஞானேஷ் குமாரையோ நாங்கள் வெறுக்கவில்லை. நாங்கள் வெறுப்புக் கடையைத் திறப்பவர்கள் அல்ல. அன்புக் கடையைத் திறப்பவர்கள். அகிம்சையை நம்புகிறவர்கள். எனக்கு யாரும் எதிரிகள் கிடையாது. நரேந்திர மோடியும் எனக்கு எதிரி இல்லை. அமித் ஷாவும் எதிரி இல்லை. ஞானேஷ் குமாரும் எதிரி இல்லை.
ஆனால் இந்த நாட்டின் ஒவ்வொரு குடிமகனின் குரலும் எனக்கு முக்கியம். மதத்தைவிட மக்களின் குரல்தான் எனக்கு முக்கியம். அதுதான் என்னுடைய மதம். நாங்கள் வன்முறையில் ஈடுபட மாட்டோம். யாருக்கும் தீங்கு செய்ய மாட்டோம். யார் மீதும் வெறுப்பைப் பரப்ப மாட்டோம். அன்போடுதான் செயல்படுவோம். அதற்காக இந்த நாட்டின் அரசியலமைப்புச் சட்டத்தை அழிக்க அனுமதிக்க மாட்டோம். என்ன நடந்தாலும் அனுமதிக்க மாட்டோம்.
அன்பு கடையை திறப்போம்
எங்கள் மதம் யாரையும் எதிரியாகப் பார்க்கக் கூடாது என்று சொல்கிறது. யாரையும் வெறுக்கக் கூடாது என்று சொல்கிறது. எல்லோரிடமிருந்தும் கற்றுக்கொண்டு அன்போடு வாழ வேண்டும் என்று சொல்கிறது. இந்த நாட்டில் வரிசையில் கடைசியாக நிற்கும் மனிதரின் குரலும் பாதுகாக்கப்பட வேண்டும். அவர் இந்துவாக இருக்கலாம். முஸ்லிமாக இருக்கலாம். சீக்கியராக இருக்கலாம். பழங்குடியினராக இருக்கலாம். தலித்தாக இருக்கலாம். பெண்ணாக இருக்கலாம். மாற்றுத்திறனாளியாக இருக்கலாம். யாராக இருந்தாலும் அவர்களுடைய குரலைப் பாதுகாக்க வேண்டும். அதுதான் எங்களுடைய போராட்டம். இந்த நாட்டில் மீண்டும் அன்புக் கடை திறக்கப்படும். மீண்டும் அன்பும் சகோதரத்துவமும் நிலைநாட்டப்படும்.
இந்தப் போராட்டம் காங்கிரஸ் கட்சிக்கு மட்டும் சொந்தமானது அல்ல. எந்த ஒரு கட்சிக்கும் சொந்தமானது அல்ல. எந்த ஒரு தலைவருக்கும் சொந்தமானதும் அல்ல. இது அனைவரும் ஒன்றிணைந்து நடத்தும் போராட்டம். இது இந்தியாவின் போராட்டம். இந்திய மக்களின் குரல். இவ்வாறு ராகுல் காந்தி பேசினார்.










