‘முரசு’ புயல்: தமிழக அரசு எச்சரிக்கை- மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம்!

By Mathi

|

Published on 1 Nov 2026, 9:23 PM

Cyclone Murasu-TN Govt

‘முரசு’ புயல் காரணமாக வட தமிழக கடலோரப் பகுதிகளில் பலத்த சூறைக்காற்று வீசக்கூடும் என்பதால் பொதுமக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும், மீனவர்கள் நவம்பர் 4-ந் தேதி காலை வரை கடலுக்குச் செல்ல வேண்டாம் என்றும் தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.

தமிழ்நாடு பேரிடர் அபாயக் குறைப்பு முகமை இன்று (நவம்பர் 1) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

ADVERTISEMENT

தமிழ்நாடு பேரிடர் அபாயக் குறைப்பு முகமை (TNDRRA), இந்திய வானிலை ஆய்வு மையத்தின் (IMD) அதிகாரப்பூர்வ தகவல்களின் அடிப்படையில் ‘முரசு’ புயலைத் தொடர்ந்து கண்காணித்து வருகிறது.

தற்போது புயல் தெற்கு ஆந்திரப் பிரதேசக் கடற்கரையை நோக்கி நகர்கிறது. இருப்பினும், அடுத்த சில நாட்களுக்கு வடக்கு தமிழ்நாட்டில் கனமழை, பலத்த சூறைக்காற்று மற்றும் மிகக் கொந்தளிப்பான கடல் நிலை நிலவும். பதற்றமடையத் தேவையில்லை. ஆனால் அனைவரும் விழிப்புடன் இருந்து, எளிய நடைமுறை முன்னெச்சரிக்கைகளை மேற்கொண்டு, கீழ்க்காணும் பொது வழிகாட்டுதல்களைப் பின்பற்றுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

ADVERTISEMENT

புயலின் இருப்பிடமும் பாதையும்

    புயல் தற்போது எங்கே உள்ளது?

    நவம்பர் 1-ந் தேதி பிற்பகல் நிலவரப்படி, ‘முரசு’ புயல் வங்காள விரிகுடாவில், சென்னையிலிருந்து கிழக்கு-தென்கிழக்கே சுமார் 480 கி.மீ. தொலைவில், மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து கொண்டிருக்கிறது.

    ADVERTISEMENT

    எங்கு செல்கிறது?

    நவம்பர் 2-ந் தேதி காலைக்குள் தீவிர புயலாக வலுப்பெற்று, நவம்பர் 2-ந் தேதி இரவு முதல் நவம்பர் 3-ந் தேதி அதிகாலைக்குள் ஆந்திராவில் நெல்லூர் – நரசாபுரம் இடையே கரையைக் கடக்கும். கரையைக் கடப்பது ஆந்திராவில் என்றாலும், தமிழ்நாட்டின் கடலோர மற்றும் வடக்கு மாவட்டங்களில் பலத்த சூறைக்காற்றும் கனமழையும் இருக்கும்.

    வடக்கு தமிழ்நாட்டில் மழை, காற்று மற்றும் கடல் நிலை

      மாவட்ட வாரியான கனமழை எச்சரிக்கைகள்

      நவம்பர் 2-ந் தேதி வடக்கு தமிழ்நாட்டில் பல இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிகக் கனமழையும் பெய்யக்கூடும்.

      நவம்பர் 3-ந் தேதி பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிகக் கனமழையும் பெய்யக்கூடும்.

      நவம்பர் 1-ந் தேதி திருவள்ளூர் மாவட்டத்துக்கு மிகக் கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சென்னை, ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, நீலகிரி மாவட்டங்களுக்கு கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

      நவம்பர் 2-ந் தேதி சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களுக்கு மிகக் கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கையும், வேலூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, நீலகிரி மாவட்டங்களுக்கு கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

      வடக்கு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி கடலோரப் பகுதிகளில் காற்றின் வேகம்

      நவம்பர் 1-ந் தேதி பிற்பகலில் மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும். இடையிடையே மணிக்கு 60 கி.மீ. வேகம் வரை காற்று வீசக்கூடும்.

      நவம்பர் 2-ந் தேதி காலையில் மணிக்கு 55 முதல் 65 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும். அதிகபட்சமாக மணிக்கு 75 கி.மீ. வேகம் வரை காற்று வீசக்கூடும்.

      நவம்பர் 2-ந் தேதி மாலை முதல் நவம்பர் 3-ந் தேதி காலை வரை மணிக்கு 60 முதல் 70 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும். அதிகபட்சமாக மணிக்கு 80 கி.மீ. வேகம் வரை காற்று வீசக்கூடும்.

      நவம்பர் 3-ந் தேதி பிற்பகல் முதல் காற்றின் வேகம் படிப்படியாகக் குறையும். மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்திலும், அதிகபட்சமாக 60 கி.மீ. வேகம் வரையிலும் காற்று வீசக்கூடும்.

      கொந்தளிப்பான கடல் மற்றும் உயரமான அலைகள்

      நவம்பர் 1-ந் தேதி பிற்பகல் முதல் நவம்பர் 4-ந் தேதி காலை வரை வடக்கு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி கடலோரப் பகுதிகளில் கடல் மிகக் கொந்தளிப்பாக இருக்கும். 4 முதல் 6 மீட்டர் உயரத்துக்கு அலைகள் எழக்கூடும். கடலில் பார்வைத்திறனும் குறைவாக இருக்கும். நவம்பர் 4-ந் தேதிக்குப் பிறகு நிலைமை படிப்படியாகச் சீராகும்.

      மீனவர்களுக்குக் கடுமையான எச்சரிக்கை

        வடக்கு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி கடலோரப் பகுதிகள் மற்றும் தென்மேற்கு வங்காள விரிகுடாவில் நவம்பர் 4-ந் தேதி காலை வரை மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் எனக் கண்டிப்புடன் அறிவுறுத்தப்படுகிறார்கள். அனைத்து மீன்பிடிப் பணிகளும் முழுமையாக நிறுத்தி வைக்கப்பட வேண்டும்.

        ஆழ்கடல் மீனவர்கள் உடனடியாகத் திரும்ப வேண்டும்

        தற்போது ஆழ்கடலில் உள்ள மீனவர்கள் அருகிலுள்ள துறைமுகம் அல்லது கரைக்கு உடனடியாகத் திரும்ப வேண்டும். படகுகளைக் கண்காணித்து, பாதுகாப்பாகக் கரைக்குத் திரும்ப வழிகாட்டும் பணியில் மீன்வளத் துறையும் துறைமுக அதிகாரிகளும் ஈடுபட்டுள்ளனர்.

        பொதுமக்களுக்கான பாதுகாப்பு அறிவுரைகள்

          • கடலோரச் சாலைகள் மற்றும் கடல் தடுப்புச் சுவர்களிலிருந்து விலகி இருங்கள்
          • உயரமான அலைகளும் கடல் கொந்தளிப்பும் கடலோரச் சாலைகளில் (ECR, OMR போன்றவை) நீர் தெறிக்கச் செய்யலாம். கடற்கரை நடைபாதைகளிலிருந்து பாதுகாப்பான தூரத்தில் இருங்கள்.

          நீர் தேங்கிய இடங்களைத் தவிருங்கள்

          • நீரின் ஆழம் தெரியாத, நீர் தேங்கிய சாலைகள் மற்றும் தாழ்வான சுரங்கப்பாதைகளில் நடக்கவோ, வாகனம் ஓட்டவோ வேண்டாம். இவ்வாறு தமிழ்நாடு பேரிடர் அபாயக் குறைப்பு முகமை தெரிவித்துள்ளது.

          உண்மையின் மூச்சு உங்கள் விரலில்!

          Mathi

          மா.ச.மதிவாணன் (Mathivanan Maran- Mathi) 30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

          செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

          Join Our Channel