வங்கக்கடலில் உருவாகியுள்ள புயலுக்கு ‘முரசு’ என தமிழில் பெயர் சூட்டப்பட்டது ஏன் என்பது குறித்து கர்நாடக வானிலை ஆய்வு மையத் தலைவர் புவியரசன் விளக்கம் அளித்துள்ளார்.
வங்கக்கடலில் உருவாகியுள்ள முரசு புயல் ஆந்திர கடற்கரையை நோக்கி நகர்ந்து வருகிறது. இந்தப் புயல் காரணமாக ஆந்திரா மற்றும் வடதமிழக கடலோரப் பகுதிகளுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த நிலையில், முரசு புயலுக்கு தமிழில் பெயர் சூட்டப்பட்டது எப்படி என்பது குறித்து கர்நாடக வானிலை ஆய்வு மையத் தலைவர் புவியரசன் வீடியோ ஒன்றை வெளியிட்டு விளக்கம் அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
தற்போது வங்கக்கடலில் உருவாகியிருக்கும் புயலுக்கு முரசு என்ற தமிழ்ப் பெயர் முதன்முதலாகச் சூட்டப்பட்டுள்ளது. இந்தப் பெயரை நான் சென்னை வானிலை ஆய்வு மையத்தில் பணிபுரிந்தபோது பரிந்துரைக்கப்பட்டது.

(சென்னை வானிலை மைய அதிகாரியாக புவியரசன் பணியாற்றிய போது)
புயலுக்குப் பெயர் வைப்பதற்கு உலக வானிலை மையம் சில நெறிமுறைகளை வகுத்துள்ளது. அதன்படி, புயலுக்குச் சூட்டப்படும் பெயர் எந்த மதத்தையோ, அரசியலையோ சார்ந்திருக்கக்கூடாது. ஒரு தனிப்பட்ட மனிதரின் பெயராக இருக்கக்கூடாது. எவர் மனதையும் புண்படுத்தக்கூடாது. அந்தப் பெயர் உச்சரிப்பதற்கு எளிமையாக இருக்க வேண்டும். 8 எழுத்துகளுக்கு மிகாமல் இருக்க வேண்டும். ஏதாவது ஒரு வகையில் மக்களுடன் தொடர்புடையதாக இருக்க வேண்டும்.
இதன் அடிப்படையில் ‘முரசு’ என்ற சொல் தேர்வு செய்யப்பட்டது.
பழங்காலத்தில், மன்னர்கள் காலத்தில் ஒரு செய்தியை மக்களுக்கு பொதுவெளியில் அறிவிப்பதற்காக அல்லது பேரிடர் காலத்தில் மக்களுக்கு தெரிவிப்பதற்காக பயன்படுத்தப்பட்ட மிகப் பெரிய ஒரு இசைக் கருவி. அதனால் அந்த பெயர் சூட்டப்பட்டது.
முரசு என்பது மிகப்பெரிய இசைக்கருவியாகும். மக்களுக்குச் செய்திகளையும் எச்சரிக்கைகளையும் அறிவிக்கப் பயன்படுத்தப்பட்டதால், புயலுக்கு இந்தப் பெயரைப் பரிந்துரைத்தோம். இதோடு நாங்கள் வேறு சில பெயர்களையும் பரிந்துரைத்தோம். விவசாயத்திற்குப் பயன்படுத்தப்படும் ஏர், கலப்பை ஆகிய பெயர்களையும், மீனவர்கள் பயன்படுத்தும் நாவாய், படகு ஆகிய பெயர்களையும் பரிந்துரைத்தோம். மேலும், திருக்கை என்ற மீனின் பெயரையும் பரிந்துரைத்திருந்தோம்.
இந்தப் பெயர்களில் இந்திய வானிலை ஆய்வு மையம் ‘முரசு’ என்ற பெயரை தேர்வு செய்தது. தற்போது வங்கக்கடலில் உருவாகியுள்ள புயலுக்கு அந்தப் பெயர் சூட்டப்பட்டுள்ளது. இவ்வாறு புவியரசன் விளக்கம் அளித்துள்ளார்.









