ஆந்திராவில் 10-ம் வகுப்பு மாணவியை மின் ரம்பத்தால் வெட்டிய வழக்கில் கைது செய்யப்பட்ட ஹேமந்த் மீது போலீசார் இன்று (நவம்பர் 1) துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். இதில் படுகாயமடைந்த ஹேமந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஆந்திர மாநிலம் அனந்தபூர் மாவட்டம் ராப்தாடு பகுதியில் உள்ள மாவட்ட ஊராட்சி உயர்நிலைப் பள்ளிக்குள் நேற்று திடீரென புகுந்த 21 வயது ஹேமந்த், 10-ம் வகுப்பு மாணவி ஒருவரை மின் ரம்பத்தால் சரமாரியாக வெட்டினார். இந்த தாக்குதலில் முகம், கழுத்து, கை உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காயமடைந்த மாணவி, முதலில் அனந்தபூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக பெங்களூருவில் உள்ள மணிப்பால் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு அவருக்கு அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அந்த மாணவி, தொடர்ந்து மருத்துவக் கண்காணிப்பில் இருந்து வருகிறார். இந்த தாக்குதலில் காயமடைந்த மற்றொரு மாணவியும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்தக் கொடூரத் தாக்குதல் ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனிடையே, மாணவியைத் தாக்கிய ஹேமந்த் தர்மாவரம் ரயில் நிலையத்தில் கைது செய்யப்பட்டதாக கூறப்பட்டது.
வனப்பகுதியில் துப்பாக்கிச் சூடு
இந்நிலையில், இன்று (நவம்பர் 1) அனந்தபூர் மாவட்டம் ஆத்மகூர் வனப்பகுதியில் ஹேமந்த் மீது போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். ஹேமந்த் நேற்று தர்மாவரம் ரயில் நிலையத்தில் கைது செய்யப்பட்டதாக செய்திகள் வெளியாகியிருந்த நிலையில், இன்று ஆத்மகூர் வனப்பகுதியில் அவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது குறித்து மாறுபட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஹேமந்த் நேற்று கைது செய்யப்பட்டதாக வெளியான தகவலுக்கு மாறாக, அவர் ஆத்மகூர் வனப்பகுதியில் பதுங்கியிருந்ததாகவும், அவரைப் பிடிக்கச் சென்றபோது துப்பாக்கிச் சூடு நடந்ததாகவும் ஒரு தரப்பில் கூறப்படுகிறது.
மற்றொரு தரப்பில், போலீஸ் காவலில் இருந்த ஹேமந்த் தப்ப முயன்றபோது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது.









