வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள தீவிரப் புயலான ‘முரசு’, இன்று (நவம்பர் 2) நள்ளிரவு முதல் நாளை (நவம்பர் 3) அதிகாலைக்குள் ஆந்திரப் பிரதேச கடற்கரையைக் கடக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இன்று காலை 8.30 மணி நிலவரப்படி, மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடலில் முரசு புயல் மையம் கொண்டுள்ளது. கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 22 கி.மீ. வேகத்தில் மேற்கு – வடமேற்கு திசையில் நகர்ந்துள்ளது. தற்போது இந்தப் புயல் சென்னைக்கு வடகிழக்கே 180 கி.மீ. தொலைவிலும், ஆந்திராவின் நெல்லூருக்கு கிழக்கு – தென்கிழக்கே 160 கி.மீ. தொலைவிலும் மையம் கொண்டுள்ளது. மேலும், காவாலிக்கு கிழக்கு – தென்கிழக்கே 180 கி.மீ., ஓங்கோலுக்கு தென்கிழக்கே 210 கி.மீ., மச்சிலிப்பட்டினத்துக்கு தெற்கே 240 கி.மீ. தொலைவில் உள்ளது.
எப்போது கரையைக் கடக்கும்?
முரசு புயல் தொடர்ந்து வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்று இரவு 11.30 மணி முதல் நாளை அதிகாலை 4 மணிக்குள் நெல்லூர் – நரசாபுரம் இடையே, ஓங்கோலுக்கு தெற்கே ஆந்திரக் கடற்கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது மணிக்கு 100 முதல் 110 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். இடையிடையே காற்றின் வேகம் 120 கி.மீ. வரை அதிகரிக்கக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.









