ஹரித்வார் கங்கை நதியே வறண்டு போனதா? ஏன் இந்த கோலம்?

By Mathi

|

Published on 2 Nov 2026, 4:41 AM

Haridwar-Ganga River

ஹரித்வாருக்கு ஒருமுறையாவது சென்று கங்கை நதியைப் பார்த்தவர்களுக்கும், திரைப்படங்களிலும் புகைப்படங்களிலும் ஹரித்வாரின் கங்கை நதியைக் கண்டு ரசித்தவர்களுக்கும் இப்போது வெளியாகியிருக்கும் காட்சிகள் பேரதிர்ச்சியைத் தரக்கூடியவை. எப்போதும் தண்ணீர் பாய்ந்தோடும் கங்கை நதியின் புகழ்பெற்ற ஹர் கி பவுரி படித்துறை, இன்று தண்ணீரின்றி வெறிச்சோடிக் கிடக்கிறது. கங்கை நதியின் ஆற்றுப்படுகையில் கற்களும் மணலும் குப்பைகளும் வெளியே தெரிகின்றன. காலங்காலமாகப் புனித நதியாக வழிபடப்படும் கங்கைக்கு என்னதான் நடந்தது?

இமயமலையில் பிறக்கும் கங்கை

இமயமலையின் பனிப்பாறைகளில் பிறந்து, வட இந்தியாவின் பெரும் நிலப்பரப்பை வளப்படுத்திப் பாய்ந்தோடும் நதிதான் கங்கை. உத்தராகண்ட் மாநிலத்தின் கங்கோத்ரி பனிப்பாறையில் உள்ள கோமுக் பகுதியில் பாகீரதி நதி உருவாகிறது. தேவபிரயாகையில் அலக்நந்தா நதியுடன் பாகீரதி இணைந்த பிறகு கங்கை என்ற பெயரில் பாய்கிறது. இமயமலையின் மலைகளுக்கும் பள்ளத்தாக்குகளுக்கும் இடையே பாய்ந்துவரும் கங்கை, ரிஷிகேஷைக் கடந்து ஹரித்வார் பகுதியில் வட இந்தியாவின் பரந்த சமவெளிக்குள் நுழைகிறது.

ADVERTISEMENT

இமயமலையின் மடியில் இருந்து சமவெளியை நோக்கிப் பாய்ந்துவரும் கங்கையை வரவேற்கும் நகரமாக ஹரித்வார் விளங்குகிறது. ஆனால் ஹரித்வார் என்பது வெறும் நதிக்கரை நகரம் மட்டுமல்ல. பல நூற்றாண்டுகளாக இந்துக்களின் நம்பிக்கைகளோடும் வழிபாடுகளோடும் பின்னிப் பிணைந்திருக்கும் புனித பூமி.

இந்து மதத்தின் கோட்டை ஹரித்வார்

இந்துக்களின் 7 புனித நகரங்களில் ஒன்றாக ஹரித்வார் கருதப்படுகிறது. கங்கை நதியில் நீராடினால் பாவங்கள் நீங்கும், முன்னோர்களுக்குச் செய்யப்படும் சடங்குகள் புண்ணியம் தரும் என்பது பக்தர்களின் ஆழமான நம்பிக்கை. இந்து மதத்தின் சைவ, வைணவ மரபுகளைச் சேர்ந்த சாதுக்கள், துறவிகள், மடங்கள், ஆசிரமங்கள் என ஹரித்வார் முழுவதும் ஆன்மிக அமைப்புகள் நிறைந்திருக்கின்றன.

ADVERTISEMENT

குறிப்பாக, அகாடாக்கள் எனப்படும் சாதுக்களின் பாரம்பரிய அமைப்புகள் ஹரித்வாரில் பெரும் செல்வாக்குடன் செயல்படுகின்றன. நாக சாதுக்கள் உள்ளிட்ட பல்வேறு துறவற மரபுகளைச் சேர்ந்தவர்கள் இந்த அகாடாக்களில் இடம்பெற்றுள்ளனர். இந்த அகாடாக்கள் வெறும் வழிபாட்டு அமைப்புகள் மட்டுமல்ல. தங்களுக்கெனத் தலைமை, மரபுகள், சொத்துகள், சீடர்கள் எனப் பல நூற்றாண்டுகளாக வலுவான கட்டமைப்புகளைக் கொண்டவை. கும்பமேளா போன்ற நிகழ்வுகளில் எந்த அகாடாவைச் சேர்ந்த சாதுக்கள் முதலில் புனித நீராடுவது என்பதற்குக்கூட தனித்த மரபுகள் இருக்கின்றன.

இந்து மதத்தின் சாதுக்களும் துறவிகளும் இவ்வளவு வலுவான செல்வாக்கைக் கொண்டிருப்பதால்தான் ஹரித்வார் இந்து மதத்தின் முக்கியமான கோட்டையாகவும் திகழ்கிறது. ஹரித்வாரில் இறைச்சி, மதுபான விற்பனை உள்ளிட்டவற்றுக்குக் கடுமையான கட்டுப்பாடுகள் இருப்பதும் இந்த நகரத்தின் மத அடையாளத்தை உணர்த்துகிறது.

ADVERTISEMENT

சீக்கியர்களின் தலைமுறை வரலாறுகளைப் பாதுகாக்கும் ஹரித்வார்

இந்து மதத்தினருக்கு மட்டுமல்ல, சீக்கியர்களுக்கும் ஹரித்வார் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடமாகும். ஹரித்வாரில் பல நூற்றாண்டுகளாகக் குடும்பங்களின் தலைமுறை வரலாறுகளைப் பதிவு செய்யும் பாரம்பரியம் இருந்து வருகிறது. பண்டாக்கள் எனப்படும் பரம்பரைப் பதிவுகளை எழுதுவோர், ஹரித்வாருக்கு வரும் குடும்பங்களின் வம்சாவளி, முன்னோர்களின் பெயர்கள், சொந்த ஊர்கள், திருமணங்கள், பிறப்பு, இறப்பு உள்ளிட்ட விவரங்களைப் பெரிய பதிவேடுகளில் பாதுகாத்து வருகின்றனர். இந்து குடும்பங்கள் மட்டுமல்லாமல், சீக்கியக் குடும்பங்களின் பல தலைமுறை வரலாறுகளும் இந்தப் பதிவேடுகளில் இடம்பெற்றுள்ளன.

இன்று ஹரித்வாருக்குச் செல்லும் ஒருவர், பல தலைமுறைகளுக்கு முன்பு அங்கு வந்த தமது முன்னோர்கள் பற்றிய தகவல்களை இந்தப் பதிவேடுகளில் கண்டறிய முடியும் என்பது நம்பிக்கை. தாத்தா, கொள்ளுத்தாத்தா மட்டுமல்ல, அவர்களுக்கும் முந்தைய தலைமுறையினர் எங்கிருந்து வந்தார்கள், அவர்களது குடும்பத்தில் யார் யார் இருந்தார்கள் என்ற விவரங்களைக்கூட இந்தப் பதிவேடுகள் பாதுகாத்து வைத்திருக்கின்றன என்பதும் அவர்களது நம்பிக்கை.

கும்பமேளாவும் கங்கை ஆரத்தியும்

அத்துடன் ஆன்மீக பெருவிழாவான ‘கும்பமேளா’ நடைபெறும் 4 முக்கிய நகரங்களில் ஹரித்வாரும் ஒன்று. கும்பமேளாவின்போது கங்கை நதியில் புனித நீராடுவதற்காக லட்சக்கணக்கான பக்தர்களும் பல்லாயிரக்கணக்கான சாதுக்களும் ஹரித்வாரில் கூடுகின்றனர். அகாடாக்களைச் சேர்ந்த சாதுக்கள் ஊர்வலமாக வந்து கங்கையில் புனித நீராடுவது கும்பமேளாவின் மிக முக்கியமான நிகழ்வுகளில் ஒன்று.

ஆனால் கும்பமேளா நடைபெறும் காலத்தில் மட்டுமல்ல, ஆண்டின் எல்லா நாட்களிலும் பக்தர்களின் வருகையால் ஹரித்வார் நிரம்பி வழியும். அதிலும் ஹர் கி பவுரி படித்துறை இந்துக்களின் மிக முக்கியமான வழிபாட்டுத் தலங்களில் ஒன்று. இங்குள்ள பிரம்ம குண்டத்தில் நீராடுவது பெரும் புண்ணியமாகக் கருதப்படுகிறது.

காலை நேரத்தில் கங்கை நதியில் புனித நீராடும் பக்தர்கள், முன்னோர்களுக்குச் சடங்குகள் செய்யும் குடும்பங்கள், நதிக்கரையில் அமர்ந்து வழிபடும் சாதுக்கள் என ஹர் கி பவுரி படித்துறை எப்போதும் பரபரப்பாகக் காணப்படும். மாலை நேரத்தில் இந்தப் படித்துறையின் காட்சியே மாறிவிடும். கங்கை நதிக்கரையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டிருக்க, வேத மந்திரங்கள் முழங்க, பெரிய தீபங்களை ஏந்தி கங்கைக்குக் காட்டப்படும் ஆரத்தி ஹரித்வாரின் அடையாளங்களில் ஒன்று. கங்கை ஆரத்தியின்போது பக்தர்கள் நதியில் மிதக்கவிடும் சிறிய தீபங்கள், ஓடும் தண்ணீரில் ஒளிர்ந்தபடியே செல்லும் காட்சி பலரது மனதில் நீங்காத நினைவாகப் பதிந்திருக்கும். ஹரித்வாருக்கு ஒருமுறையாவது சென்றவர்கள் அந்தக் காட்சியை அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியாது.

கங்கை எங்கே போனது?

இப்படிப்பட்ட ஹர் கி பவுரி படித்துறையில்தான் இப்போது கங்கை நீர் இல்லாமல் வெறிச்சோடி காட்சியளிக்கிறது. பக்தர்கள் நீராடிய இடங்களில் தண்ணீர் இல்லை. ஆரத்தியின்போது தீபங்கள் மிதந்து சென்ற இடங்களில் ஆற்றுப்படுகை வெளியே தெரிகிறது. எப்போதும் நீரோட்டத்துடன் காணப்படும் படித்துறைகளில் கற்களும் மணலும் குப்பைகளும் கிடக்கின்றன.

ஹரித்வாரின் பழைய காட்சிகளையும் இப்போது வெளியாகியிருக்கும் காட்சிகளையும் ஒப்பிட்டுப் பார்த்தால், இரண்டும் ஒரே இடம்தானா என்ற கேள்வியே எழுகிறது. கங்கையின் நீரோட்டத்தையும், அதன் கரைகளில் திரளும் பக்தர்களையும் நேரில் பார்த்தவர்களுக்கு இந்தக் காட்சிகள் இன்னும் அதிகமான அதிர்ச்சியை ஏற்படுத்தக்கூடும்.

ஆனால் கங்கை நதியே முழுமையாக வறண்டுவிடவில்லை என்பதுதான் ஆறுதலானது. ஹரித்வாரில் உள்ள பீம்கோடா தடுப்பணையிலிருந்து மேல் கங்கை கால்வாய்க்குச் செல்லும் நீர்வரத்து அக்டோபர் 20-ந் தேதி நள்ளிரவு முதல் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

உத்தரப் பிரதேச நீர்ப்பாசனத் துறை ஆண்டுதோறும் மேற்கொள்ளும் கால்வாய் தூர்வாருதல், பராமரிப்பு மற்றும் பழுதுபார்ப்புப் பணிகளுக்காக இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது என்கின்றனர் அதிகாரிகள். இதனால்தான் ஹர் கி பவுரி உள்ளிட்ட படித்துறைகளில் தண்ணீர் பெருமளவு குறைந்து, கங்கை நதியே வறண்டுவிட்டதைப் போன்ற காட்சிகள் வெளியாகியுள்ளன.

2027 கும்பமேளாவுக்கான ஏற்பாடுகள்

2027-ம் ஆண்டு ஹரித்வாரில் மினி கும்பமேளா நடைபெற உள்ளது. இதற்காகப் படித்துறைகளைச் சீரமைப்பது, கால்வாயைத் தூர்வாருவது, பழுதடைந்த கட்டமைப்புகளைச் சரிசெய்வது உள்ளிட்ட பணிகளும் மேற்கொள்ளப்படுகின்றன. இந்தப் பணிகளுக்காக அக்டோபர் 20-ந் தேதி நள்ளிரவு முதல் நவம்பர் 7-ந் தேதி நள்ளிரவு வரை சுமார் 18 நாட்களுக்கு கால்வாயில் நீர்வரத்து நிறுத்தப்பட்டுள்ளது. நவம்பர் 7-8 தேதிகளில் மீண்டும் நீர்வரத்தைத் தொடங்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இதனால் ஹரித்வாரில் தற்போது காணப்படும் நிலை நிரந்தரமானது அல்ல. பராமரிப்புப் பணிகள் முடிந்ததும் ஹர் கி பவுரி படித்துறையில் மீண்டும் தண்ணீர் பாயும் என்கின்றனர் அதிகாரிகள்.

கங்கை விட்டுச் சென்ற குப்பைகள்

கங்கை நீர் குறைந்ததும் இன்னொரு அதிர்ச்சியான காட்சியும் வெளிப்பட்டுள்ளது. வழக்கமாகத் தண்ணீருக்குள் மூழ்கியிருக்கும் பிளாஸ்டிக் கழிவுகள், பழைய துணிகள், காலணிகள், பூஜைப் பொருட்கள் உள்ளிட்டவை ஆற்றுப்படுகையில் தேங்கிக் கிடக்கின்றன.

கங்கையைத் தாயாக வழிபடும் பக்தர்கள் கோடிக்கணக்கில் இருக்கின்றனர். கங்கையின் தூய்மையைப் பாதுகாக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகின்றன. ஆனாலும் புனித நதியாகக் கொண்டாடப்படும் கங்கையின் படித்துறைகளில் இவ்வளவு கழிவுகள் தேங்கிக் கிடப்பது, அந்த நதியை எந்த அளவுக்குத் தூய்மையாகப் பாதுகாத்து வருகிறோம் என்ற கேள்வியை எழுப்புகிறது.

கங்கை நீர் குறைந்திருப்பது தற்காலிகமானதுதான். இன்னும் சில நாட்களில் ஹர் கி பவுரி படித்துறையில் மீண்டும் தண்ணீர் பாயத் தொடங்கலாம். ஆனால் பல தலைமுறைகளின் நம்பிக்கைகளையும் நினைவுகளையும் சுமந்து நிற்கும் ஹரித்வாரில், கங்கை நீரின்றிக் கிடக்கும் இந்தக் காட்சிகள் அவ்வளவு எளிதில் மனதைவிட்டு அகலக்கூடியவை அல்ல.

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்!

Mathi

மா.ச.மதிவாணன் (Mathivanan Maran- Mathi) 30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel