கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையாவுக்கு எதிரான போலி ஸ்டிங் வீடியோ விவகாரத்தில், மத்திய அமைச்சரும் முன்னாள் முதல்வருமான எச்.டி. குமாரசாமியின் டெல்லி வீட்டுக்குத் தொடர்பு இருப்பதாக பெங்களூரு போலீசார் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, தனது தந்தையின் நற்பெயரைக் கெடுக்கச் சதி செய்த குமாரசாமி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கர்நாடக அமைச்சர் யதீந்திர சித்தராமையா வலியுறுத்தியுள்ளார்.
கர்நாடக முன்னாள் முதல்வரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான சித்தராமையா மீது பாலியல் குற்றச்சாட்டுகளை முன்வைக்கும் ஸ்டிங் ஆபரேஷன் வீடியோ கடந்த செப்டம்பர் மாதம் சமூக வலைதளங்களில் பரவியது. 2023-ஆம் ஆண்டு எடுக்கப்பட்டதாகக் கூறப்படும் இந்த வீடியோவில், சித்தராமையா மீது ஒரு பெண் பாலியல் குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தார்.
ஆனால், இந்த வீடியோ போலியாக உருவாக்கப்பட்டது என்றும், தனது நற்பெயரைக் கெடுப்பதற்காகத் திட்டமிட்டு பரப்பப்படுகிறது என்றும் கூறி அக்டோபர் 6-ந் தேதி சித்தராமையா போலீசில் புகார் அளித்தார். இதையடுத்து பெங்களூரு மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினர்.
ஸ்டிங் வீடியோவில் இருந்த பெண் சொன்னது என்ன?
ஸ்டிங் வீடியோவில் இடம்பெற்ற பெண்ணிடமும் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது, சித்தராமையாவைத் தான் சந்தித்ததே இல்லை என்றும், மற்றவர்கள் சொல்லிக்கொடுத்தபடியே வீடியோவில் பேசியதாகவும் அந்தப் பெண் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து சித்தராமையா மீது பாலியல் குற்றச்சாட்டுகளைச் சுமத்துவதற்காகவே இந்த வீடியோ திட்டமிட்டு உருவாக்கப்பட்டதா என்ற கோணத்தில் போலீசார் விசாரணையைத் தொடர்ந்தனர். இந்த வழக்கில் வீடியோவை சமூக வலைதளங்களில் பரப்பியவர்கள் யார் என்பதை கண்டுபிடிக்கும் முயற்சியிலும் போலீசார் இறங்கினர்.
டெல்லியில் கைது
இந்த வழக்கில் டெல்லியைச் சேர்ந்த ரித்தேஷ் பாண்டே என்பவரை அக்டோபர் 24-ந் தேதி பெங்களூரு மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். கர்நாடகா முன்னாள் முதல்வரும் மத்திய அமைச்சருமான குமாரசாமியின் சமூக வலைதளக் குழுவில் பணியாற்றிய ரித்தேஷ் பாண்டே, ஸ்டிங் வீடியோவை சமூக வலைதளங்களில் பதிவேற்றியதாகக் கூறப்படுகிறது. பின்னர் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் வினோத் சர்மா, பிரஜ்வல் பிரசாத் ஆகிய இருவரின் பெயர்களும் வெளிவந்தன. இவர்கள் இருவருக்கும் குமாரசாமியின் அலுவலகத்துடன் தொடர்பு இருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
குமாரசாமியின் டெல்லி வீட்டில் என்ன நடந்தது?
இந்த நிலையில் பெங்களூரு மாநகர போலீஸ் ஆணையர் சீமந்த் குமார் சிங் நேற்று (நவம்பர் 1) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “ரித்தேஷ் பாண்டேயிடம் விசாரித்தபோது, பிரஜ்வல் பிரசாத் கூறியதன்பேரில் வினோத் சர்மாவுடன் டெல்லி கரோல் பாக் பகுதியில் உள்ள கடைக்குச் சென்று செல்போன் ஒன்றை வாங்கியதாகத் தெரிவித்தார். பின்னர் இருவரும் அந்த செல்போனை எடுத்துக்கொண்டு டெல்லியில் உள்ள மத்திய அமைச்சர் குமாரசாமியின் வீட்டுக்குச் சென்றுள்ளனர். அங்கு பிரஜ்வல் பிரசாத்திடம் செல்போனை ஒப்படைத்ததாக ரித்தேஷ் பாண்டே தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக சிசிடிவி காட்சிகள், செல்போன் விவரங்கள், பணப் பரிமாற்றங்கள் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்து வருகிறோம்.
வினோத் சர்மா, பிரஜ்வல் பிரசாத் ஆகிய இருவருக்கும் விசாரணைக்கு ஆஜராகுமாறு நோட்டீஸ் அனுப்பியுள்ளோம். ஆனால் இருவரும் ஆஜராகவில்லை. முன்ஜாமீன் கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். அவர்களிடம் விசாரணை நடத்திய பிறகுதான் வீடியோவை சமூக வலைதளங்களில் பரப்பியது யார், அதற்கான உத்தரவை வழங்கியது யார் என்பது தெரியவரும்” என்று தெரிவித்தார். இந்த விவகாரத்தில் குமாரசாமிக்கு நேரடியாகத் தொடர்பு இருக்கிறதா என்று செய்தியாளர்கள் கேட்டபோது, “விசாரணை நடைபெற்று வருகிறது. இப்போதே எந்த முடிவுக்கும் வர முடியாது” என்று போலீஸ் ஆணையர் பதிலளித்தார்.
குமாரசாமியை கைது செய்ய வேண்டும் – யதீந்திரா
இந்த நிலையில் சித்தராமையாவின் மகனும் கர்நாடக அமைச்சருமான யதீந்திர சித்தராமையா, குமாரசாமி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “குமாரசாமியின் சமூக வலைதளப் பிரிவில் பணியாற்றிய ரித்தேஷ் பாண்டே அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், குமாரசாமியின் டெல்லி வீட்டில் போலீசார் சோதனை நடத்தியதாக பெங்களூரு மாநகர போலீஸ் ஆணையர் தெரிவித்துள்ளார். ரித்தேஷ் பாண்டே, பிரஜ்வல் பிரசாத், வினோத் சர்மா ஆகியோர் இணைந்து குமாரசாமியின் டெல்லி வீட்டிலிருந்தே ஸ்டிங் வீடியோவை சமூக வலைதளங்களில் பதிவேற்றியதாகத் தெரியவந்துள்ளது.
இதன் மூலம் ஸ்டிங் வீடியோவைப் பரப்பியதில் குமாரசாமிக்குத் தொடர்பு இருப்பது தெளிவாகிறது. எனது தந்தையின் நற்பெயரைக் கெடுக்கச் சதி செய்த குமாரசாமி மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல இந்த ஸ்டிங் ஆபரேஷனை நடத்தியவர்கள் யார் என்பதையும் கண்டுபிடித்து அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். உண்மை வெளிவர வேண்டும். உண்மையே வெல்ல வேண்டும் என்பதுதான் எனது ஒரே நோக்கம்” என்று தெரிவித்துள்ளார்.
குமாரசாமி மறுப்பு- இன்று பிரஸ் மீட்
ஆனால் தனது டெல்லி வீட்டுக்கும் இந்த விவகாரத்துக்கும் தொடர்பு இருப்பதாக போலீஸ் ஆணையர் தெரிவித்ததற்கு குமாரசாமி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “இந்த அரசின் அதிகாரிகளாலும் நிர்வாக இயந்திரத்தாலும் குமாரசாமியை அவ்வளவு எளிதாகத் தொட்டுவிட முடியாது. பெங்களூரு போலீஸ் ஆணையர் தனது பதவியைப் பாதுகாத்துக்கொள்வதற்காக யாரோ ஒருவரின் அறிவுறுத்தலின்பேரில் இப்படிப் பேசுகிறார். அவர் போலீஸ் ஆணையரா அல்லது தலைமை எழுத்தரா?” என்று கேள்வி எழுப்பினார்.
மேலும், இந்த வழக்கின் உண்மையான பின்னணியை ஆவணங்களுடன் வெளியிட இருப்பதாகவும், இன்று (நவம்பர் 2) காலை 11 மணிக்குச் செய்தியாளர்களைச் சந்திக்க இருப்பதாகவும் குமாரசாமி அறிவித்துள்ளார்.
டிரெய்லர்தான் – பிரியங்க் கார்கே
இதனிடையே கர்நாடக அமைச்சர் பிரியங்க் கார்கேவும் குமாரசாமி மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். கலபுரகியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “இந்த வழக்கில் வெறும் சந்தேகத்தின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தவில்லை. தொழில்நுட்ப ஆதாரங்கள் கிடைத்துள்ளன. சித்தராமையா உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்களின் நற்பெயரைக் கெடுக்கும் முயற்சியில் மத்திய அமைச்சருக்குத் தொடர்பு இருப்பதாகத் தெரியவந்துள்ளது. இப்போதுதான் டிரெய்லர் முடிந்திருக்கிறது. முழுப் படமும் இனிமேல்தான் வரப்போகிறது” என்று தெரிவித்துள்ளார்.









