5 கிலோ மீட்டருக்கு அணிவகுத்த வாகனங்கள்… ரூ.500 முதல் ரூ.25,000 வரை டிக்கெட்டுகள்… பாதியிலேயே புறப்பட்ட குடும்பங்கள்… ஆனாலும் திண்டுக்கல் மண்ணில் ஒரு மறக்க முடியாத இசை இரவு!

திண்டுக்கல் நகரம் நேற்று (நவம்பர் 1) ஒரு வித்தியாசமான இரவைச் சந்தித்தது. எப்போதும் போல வாகனங்கள் பறந்து கொண்டிருந்த சாலைகளில், சுமார் 5 கிலோ மீட்டர் தொலைவுக்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. அத்தனை பேருக்கும் ஒரே இலக்கு… இளையராஜா! இத்தனைக்கும் நகரை விட்டு வெகுதொலைவில்தான் அந்த ‘சம்பவமும்’ நடந்தது!



திண்டுக்கல்- பழனி சாலையில் ரெட்டியார்சத்திரத்துக்கு சற்று முன் இருக்கும் பிஎஸ்என்ஏ பொறியியல் கல்லூரி மைதானத்தில், திரையுலகில் இளையராஜாவின் 50 ஆண்டுகால இசைப் பயணத்தைக் கொண்டாடும் வகையில் இசை நிகழ்ச்சி நடைபெற்றது.
மாலை 5 மணிக்குத் தொடங்குவதாக அறிவிக்கப்பட்ட இந்த நிகழ்ச்சிக்காக ரசிகர்கள் அக்கம் பக்கத்து கிராமங்களில் இருந்து எல்லாம் திரண்டனர். ஆனாலும் நிகழ்ச்சி தொடங்க இரவு 7 மணியாகிவிட்டது.. ரூ.500 முதல் ரூ.25,000 வரை டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்டன. இசை நிகழ்ச்சிக்கு வந்தவர்களின் வாகனங்களால் அப்பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.
ஆனால், இந்த இசை நிகழ்ச்சியை வெறும் போக்குவரத்து நெரிசலோடும் டிக்கெட் விலையோடும் மட்டும் கடந்து போய்விட முடியாது. திண்டுக்கல் மக்களின் வாழ்க்கையோடு சேர்த்துப் பார்த்தால்தான் இந்த இசை இரவின் அருமை புரியும்.
திண்டுக்கல் மாவட்டத்தில் சுற்றிப் பார்ப்பதற்கு இடங்களே இல்லையா என்றால் இருக்கின்றன. தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க மலைக்கோட்டை நகரத்தின் அடையாளமாக நிற்கிறது. கிழக்குத் தொடர்ச்சி மலையின் சிறுமலையும் மேற்குத் தொடர்ச்சி மலையின் கொடைக்கானலும் இந்த மாவட்டத்தில்தான் இருக்கின்றன.
ஆனால், கிராமங்களால் நிறைந்த திண்டுக்கல் மாவட்ட மக்களுக்கு இவையெல்லாம் நினைத்த நேரத்தில் சென்று வரக்கூடிய பொழுதுபோக்கு இடங்களாக இருப்பதில்லை.
ஒரு காலத்தில் திண்டுக்கல்லின் சிற்றூர்களில்கூட திரையரங்குகள் இருந்தன. மாலை நேரத்தில் 6.30 மணி ‘ஆட்டத்துக்கு’ (காட்சிக்கு) 6 மணிக்கு மைக் செட்டில் ஒலிக்கும் ‘விநாயகனே வினை தீர்ப்பவனே’ பாடல் கேட்கும் தொலைவில் இருக்கும் கிராமங்களுக்கு, ‘கொட்டகையில பாட்டு போட்டாச்சு.. மணி 6 ஆகிடுச்சு’ன்னு சொல்லும் அளவுக்கு வாழ்வியலின் நெருக்கமாக இருந்தது. ஆம்.. மாலையானால் சினிமாவுக்குப் போகிற கூட்டம் இருந்தது. குடும்பத்தோடு திரைப்படம் பார்த்துவிட்டு இரவில் வீடு திரும்புகிற வாழ்க்கை இருந்தது. சந்தை நாட்களில் சந்தைக்கு போன கையோடு கணவனும் மனைவியும் தியேட்டருக்கு போவது இல்லறத்தில் அங்கமாக இருந்தது.
இப்போது அந்தத் திரையரங்குகளில் ஏறத்தாழ எல்லாமுமே காணாமல் போய்விட்டன. அந்த சுவடுகளை தேடினாலும் கூட கிடைப்பதற்கு இல்லை.
இப்போதைக்கு திண்டுக்கல் மாவட்ட மக்களுக்கு அவ்வப்போது நடைபெறும் பொருட்காட்சிகளும் அங்கே சுற்றும் ராட்டினங்களும்தான் பல குடும்பங்களுக்குக் கிடைக்கும் ஒற்றை பொழுதுபோக்கு. அண்மையில்தான் திண்டுக்கல் குமரன் பூங்காவுக்கு ‘ராட்டினங்கள்’ குடித்தனம் செய்ய வந்துள்ளன.
அதனால்தான் திண்டுக்கல் மாவட்டத்தின் கிராமங்களில் ஊர்த் திருவிழா என்றால் கச்சேரி இல்லாமல் இருப்பதில்லை. ஆட்டமும் பாட்டமும் இல்லாத திருவிழாக்களைக் காண்பது அரிது; சிறுசு முதல் பெரிசு வரை விடிய விடிய அங்கேயே ‘கும்மியடித்து’ கொண்டிருப்பர். ஆம் விடிய விடிய தரையில் உட்கார்ந்து கலை நிகழ்ச்சிகளைப் பார்க்கிற மக்கள் இன்றைக்கும் இந்த மண்ணில் இருக்கிறார்கள்.
இவர்களுக்கு இசை என்பது வெறும் பொழுதுபோக்கு மட்டுமல்ல. அன்றாட உழைப்பின் களைப்பை மறக்கச் செய்யும் கொண்டாட்டம்.

திண்டுக்கல் கலைக்கு அந்நியமான மண் அல்ல. தமிழ்த் திரையுலகின் இருபெரும் ஆளுமைகளான எம்ஜிஆர், சிவாஜி கணேசன் ஆகியோரின் நாடக வாழ்க்கையோடு திண்டுக்கல் நாடக நடிகர் சங்கத்துக்கும் தொடர்பு உண்டு.
அதேபோல, திண்டுக்கல்லின் புகழ்பெற்ற அங்கிங்கு இசைக்குழுவுக்கும் மிகப் பெரும் இசை மரபு இருக்கிறது. திண்டுக்கல் சுற்று வட்டாரங்களில் ஆகப் பெரிய இசை கச்சேரி எனில் சென்னையில் இருந்து வரக் கூடிய லஷ்மண் ஸ்ருதி அல்லது திண்டுக்கல் அங்கிங்கு இசைக்குழுவின் கச்சேரிகள்தான். அவ்வளவு ஏன்.. இளையராஜாவும் கூட பல ஆண்டுகளுக்கு முன்னர் திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோவில் திருவிழாவில் அங்கிங்கு இசைக்குழுவில் அங்கமாக வந்து பாடி சிறப்பித்தவர்தான்.
இப்படி நாடகத்தையும் இசையையும் கொண்டாடிய மண்ணில்தான், இப்போது இசைஞானி இளையராஜாவின் இசை நிகழ்ச்சி நடைபெற்றிருக்கிறது.
திண்டுக்கல்லில் இருந்து கூப்பிடு தொலைவில்தான் தேனி மாவட்டம் இருக்கிறது. அந்த மண்ணின் மைந்தரான இளையராஜா, திரையுலகில் 50 ஆண்டுகளை நிறைவு செய்திருக்கிறார்.
அவருடைய பாடல்களைக் கேட்காத திண்டுக்கல் கிராமங்கள் இருக்குமா?
வயல்வெளிகளில் ஒலித்த பாடல்கள்… தேநீர்க் கடைகளில் கேட்ட பாடல்கள்… பேருந்துப் பயணங்களில் துணையாக வந்த பாடல்கள்… காதலிலும் பிரிவிலும் மக்களின் வாழ்க்கையோடு கலந்த பாடல்கள்… இன்றைக்கும் தனியார் பேருந்து பயணங்களில் இந்த ராஜாவின் ராஜாங்கம்தான்.. ஒவ்வொரு பயணத்தின் போதும், ஏன் ராஜாவுக்கு பிந்தைய சந்ததிப் பாடல்கள் நம் சந்ததி பிள்ளைகளுக்கு தரப்படவில்லை என்ற கேள்வி வரும்.. அப்போது எல்லாம், ‘தலைமுறைகள் கடந்தாலும்’ ராஜாவை தாண்டாத மக்கள் என்கிற ஆறுதலும் எனக்குள் வரும்.. பொதுவாக தேக்க நிலையை கண்டு வருந்துவோம்.. ஆனால் ராஜாவின் ராகங்களோடு மட்டுமே நிற்கிற என் மண்ணின் மக்களால் பெருமிதப்பட்டுக் கொள்வோம்.. அப்படி.. அப்படி கொண்டாடுகிற அத்தனை பாடல்களுக்கும் சொந்தக்காரர் இந்த ஊருக்கே வந்து இசை நிகழ்ச்சி நடத்துகிறார் என்றால், இந்த மக்களுக்கு அது எவ்வளவு பெரிய கொண்டாட்டமாக இருந்திருக்கும்!
திண்டுக்கல் மக்களிடம் பணமில்லை என்பதல்ல விஷயம். இசை நிகழ்ச்சிக்கு டிக்கெட் வாங்கிக்கொண்டு குடும்பத்தோடு செல்வது என்பதே இங்குள்ள பலருக்கும் புதிய அனுபவம்.
கிராமங்களில் திருவிழாக்களின்போது நடைபெறும் இசை நிகழ்ச்சிகளைத் தரையில் உட்கார்ந்து இலவசமாகப் பார்த்துப் பழகிய மக்களுக்கு, அதே இசையைப் பணம் கொடுத்துப் பார்க்க வேண்டியிருந்தது.
ரூ.500 டிக்கெட்டே பல குடும்பங்களுக்கு யோசிக்க வேண்டிய செலவுதான். இதில் ரூ.2,500, ரூ.5,000 என டிக்கெட் வாங்கிச் சென்றவர்களும் இருந்தனர். ரூ.25,000 வரையிலான கட்டணங்கள் என்பது சாதாரண குடும்பங்களுக்குக் கற்பனை செய்துபார்க்க முடியாத தொகை.
ஆனாலும் இளையராஜாவை நேரில் பார்க்க வேண்டும். அவரது இசையை நேரில் கேட்க வேண்டும் என்ற ஆசை, பலரையும் அந்த மைதானத்துக்கு அழைத்து வந்தது.
தொலைக்காட்சிகளில் பார்த்த எஸ்.பி.பி. சரண், ஸ்வேதா உள்ளிட்ட பாடகர்களின் குரல்களை நேரில் கேட்பதும் இந்த மண்ணின் ரசிகர்களுக்குப் புதிய அனுபவமாக அமைந்தது.

என்ன துயரம் எனில், இசை நிகழ்ச்சி நடைபெற்றுக்கொண்டிருந்தபோதே சிலர் புறப்படத் தொடங்கினர். ரூ.2,500, ரூ.5,000 கொடுத்து டிக்கெட் வாங்கியவர்கள்கூட இரவு 9 மணியளவில் குழந்தைகளை அழைத்துக்கொண்டு வீட்டுக்குக் கிளம்பினர்.
காரணம், மறுநாள் திங்கட்கிழமை. குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்ப வேண்டும். காலையில் வேலைக்குச் செல்ல வேண்டும். வீட்டில் இன்னும் எத்தனையோ வேலைகள் காத்திருக்கின்றன.
இசையை ரசிக்க வேண்டும் என்ற ஆசை ஒருபுறம். அன்றாட வாழ்க்கையின் கடமைகள் மறுபுறம். இரண்டுக்கும் நடுவே சிக்கிக்கொண்ட குடும்பங்கள், மனமில்லாமல் புறப்பட்டுச் சென்றன.
சிலர் இசை நிகழ்ச்சியைப் பின்னணியாக வைத்து செல்ஃபி எடுத்துக்கொண்டனர். சிலர் சமூக வலைதளங்களில் ஸ்டேட்டஸ் போட்டுவிட்டு வெளியேறினர். அதற்காக அவர்கள் இசையை நேசிக்காதவர்கள் என்று சொல்லிவிட முடியுமா?
கிராமத்தில் விடிய விடியக் கச்சேரி பார்க்கிற அதே மனிதர்கள்தான், நகரத்தில் குழந்தைகளின் பள்ளி நேரத்தைக் கணக்குப் போட்டுக்கொண்டு பாதியிலேயே புறப்படுகிறார்கள்.
போனவர் போகட்டும்… வந்தவர் இருக்கட்டும்! பாதியிலேயே புறப்பட்டவர்களுக்கும் கடைசிவரை அமர்ந்திருந்தவர்களுக்கும் இளையராஜாவின் பாடல்களோடு ஒரு வாழ்க்கை இருக்கிறது. இதை எழுதும் போது.. மண்ணையும் மக்களையும் அவர்களது வாழ்வியலையும் கலை ஏக்கங்களையும் சொல்லும் போது.. கண்களில் நீர் முட்டி நிற்கிறது.. இந்தமண்ணின் மக்களுக்கு இப்படியான ஒரு தாகம் நீண்டகாலமாக எம்மைத் தவிக்க வைத்துக் கொண்டிருக்கிறது என்பதை பதிவு செய்யும் போது.. ’தவித்த வாய்க்கு’ தண்ணீர் கொடுத்ததைப் போல திண்டுக்கல் மக்களின் நீண்டகால ‘இசை தாகத்தை’ தீர்த்துவிட்டுப் போனார் இசையின் ராஜா’ என்று எழுதி முடிப்பதில் எந்த வஞ்சனையும் எமக்கு இல்லை!









