முரசு புயல் காரணமாக சென்னையின் பல்வேறு பகுதிகளில் நேற்று (நவம்பர் 1) இரவு கனமழை கொட்டியது. சாலைகளில் தேங்கிய மழைநீரை வெளியேற்றும் பணிகளில் மாநகராட்சி பணியாளர்கள் விடிய விடிய ஈடுபட்டனர்.
வங்கக்கடலில் உருவாகியுள்ள முரசு புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட வடதமிழக மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களுக்கு கன முதல் மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. இந்த கனமழையால் சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (நவ.2) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் நேற்று இரவு வடபழனி, கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம், சூளைமேடு, மயிலாப்பூர், மந்தைவெளி, பட்டினம்பாக்கம், காமராஜர் சாலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது. இன்று (நவம்பர் 2) அதிகாலையிலும் சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் மழை நீடித்தது.

சென்னையில் பல்வேறு பகுதிகளில் மழை தொடர்ந்து பெய்து கொண்டிருந்த நிலையிலும், சாலைகளில் தேங்கிய தண்ணீரை அகற்றும் பணிகளை மாநகராட்சி பணியாளர்கள் விடிய விடிய மேற்கொண்டனர். இந்தப் பணிகளை வடக்கு, மத்திய, தெற்கு வட்டாரத் துணை ஆணையர்கள் நேரில் சென்று கண்காணித்தனர்.
சென்னை மில்லர்ஸ் சாலையில் ஒரு பகுதியில் தேங்கியிருந்த மழைநீர் பாதியாகக் குறைந்த நிலையில், அடுத்த அரை மணி நேரத்தில் பெய்த கனமழையால் மற்றொரு பகுதியில் ஒரு அடிக்கும் மேல் தண்ணீர் தேங்கியது. இதையடுத்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் அனைத்து நீரேற்று மோட்டார்களும் இயக்கப்பட்டு மழைநீரை வெளியேற்றும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. பொதுமக்களின் பாதுகாப்புக்காக அந்தச் சாலையில் வாகனங்கள் மாற்றுப் பாதையில் திருப்பிவிடப்பட்டன.
இதேபோல புல்லா அவென்யூவில் லுலு ஹைப்பர் மார்க்கெட் அருகே தேங்கியிருந்த மழைநீர் முழுமையாக அகற்றப்பட்டது. ஹஜ் கமிட்டி சந்திப்பு அருகிலுள்ள டெமெல்லோஸ் சாலையிலும் மழைநீரை வெளியேற்றும் பணிகள் தொடர்ந்து நடைபெற்றன.
வடசென்னையில் மண்டலம் 2, வார்டு 20-க்கு உட்பட்ட காமராஜர் சாலை மற்றும் மண்டலம் 4, வார்டு 46-க்கு உட்பட்ட வியாசர்பாடி சுரங்கப்பாதையில் மழைநீர் தேக்கம் தொடர்பாக வடக்கு வட்டாரத் துணை ஆணையாளர் ஸ்வேதா சுமன் நேரில் ஆய்வு செய்தார். மழைநீரை விரைந்து வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகள் குறித்தும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
அடையாறு மண்டலத்தில் பெசன்ட் சாலையில் தேங்கியிருந்த மழைநீர் மாநகராட்சி பணியாளர்களால் முழுமையாக அகற்றப்பட்டது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து சீரானது.
சர்தார் படேல் சாலையில் கனமழை பெய்தபோதும் குறிப்பிடத்தக்க அளவில் தண்ணீர் தேங்கவில்லை. இருப்பினும் சாலையில் பரவலாகக் காணப்பட்ட மழைநீரை வெளியேற்ற டிராக்டர் மோட்டார்கள், சூப்பர் சக்கர் லாரிகள் தயார் நிலையில் வைக்கப்பட்டு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டன.
தென்சென்னையில் சோழிங்கநல்லூர் மண்டலத்துக்கு உட்பட்ட 200 அடி பல்லாவரம் ரேடியல் சாலை, ராஜீவ் காந்தி சாலை ஆகிய பகுதிகளில் தேங்கிய மழைநீரை வெளியேற்ற 100 HP திறன் கொண்ட மோட்டார் பயன்படுத்தப்பட்டது. மண்டலம் 11, வார்டு 151-க்கு உட்பட்ட திருமுருகன் நகரிலும் டிராக்டர் மோட்டார் மூலம் மழைநீரை வெளியேற்றும் பணிகள் நடைபெற்றன.









