தமிழகத்தின் பல இடங்களில் நேற்று (நவம்பர் 1) 2-வது கட்டமாக நடைபெற்ற ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு ஊர்வலங்கள் நடைபெற்றன. சங்கரன் கோவிலில் ஜோஹோ நிறுவனத்தின் இணை நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு, கோவையில் முன்னாள் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் உள்ளிட்டோர் ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்தில் பங்கேற்றனர்.
ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் நூற்றாண்டு நிறைவையொட்டி தமிழகம் முழுவதும் 128 இடங்களில் அணிவகுப்பு ஊர்வலங்கள் நடத்த அனுமதி கோரப்பட்டது. இது தொடர்பான வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் விதித்த நிபந்தனைகளின் அடிப்படையில் ஊர்வலங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
முதல் கட்டமாக அக்டோபர் 25-ந் தேதி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஆர்.எஸ்.எஸ். ஊர்வலங்கள் நடைபெற்றன. இதன் தொடர்ச்சியாக நேற்று 2-வது கட்டமாக கோவை, திருச்சி, மதுரை, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் அணிவகுப்பு ஊர்வலங்கள் நடைபெற்றன.


தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் நடைபெற்ற ஆர்.எஸ்.எஸ். பதசஞ்சலன் அணிவகுப்பில் பத்மஸ்ரீ விருது பெற்ற ஜோஹோ நிறுவனத்தின் இணை நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு பங்கேற்றார். அவருடன் பாஜகவின் தென்காசி மாவட்ட மற்றும் நகர நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.


கோவையில் நடைபெற்ற ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு ஊர்வலத்தில் முன்னாள் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் பங்கேற்றார். ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் சீருடை அணிந்திருந்த அவர், தொண்டர்களுடன் இணைந்து ஊர்வலமாகச் சென்றார்.


திருச்சியில் நடைபெற்ற ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு ஊர்வலத்தில் 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். மதுரை ஆரப்பாளையம் கிராஸ் ரோட்டில் இருந்து புறப்பட்ட ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்தை தென்னிந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் நிறுவனத் தலைவர் கே.சி. திருமாறன் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.
இதேபோல பெரம்பலூரில் பாலக்கரை ரவுண்டானா அருகே தொடங்கிய ஊர்வலம், நகரின் முக்கிய வீதிகள் வழியாக வானொலி திடலில் நிறைவடைந்தது.
தேனியில் பங்களாமேட்டில் தொடங்கிய ஊர்வலம், மதுரை சாலை, நேரு சிலை, பெரியகுளம் சாலை உள்ளிட்ட பகுதிகள் வழியாகச் சென்று மீண்டும் பங்களாமேட்டில் நிறைவடைந்தது. ஊர்வலத்தைத் தொடர்ந்து பொதுக்கூட்டமும் நடைபெற்றது.
மேலும் திண்டுக்கல், திருப்பூர், சிவகங்கை, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களிலும் ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு ஊர்வலங்கள் நடைபெற்றன.








