திமுக பொதுச்செயலாளரும் முன்னாள் அமைச்சருமான துரைமுருகனின் பேத்தி- திமுக எம்.பி. கதிர் ஆனந்தின் மகளின் திருமணம், பார்ப்பனர்கள் சமஸ்கிருத மந்திரம் ஓத மிக பிரம்மாண்டமாக நடத்தப்பட்டுள்ளதற்கு திமுகவில் இருந்தே எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது.
துரைமுருகன் – சாந்தகுமாரி இணையரின் பெயர்த்தியும், கதிர் ஆனந்த் எம்.பி. – சங்கீதா இணையரின் மகளுமான செந்தாமரை – தீபக் ரவி ஆகியோரின் திருமண விழா சென்னையில் நேற்று (நவம்பர் 1) நடைபெற்றது. இந்த திருமணத்தை பார்ப்பனர்கள் சமஸ்கிருத மந்திரங்கள் ஓதி நடத்தி வைத்தனர். இதன் பின்னர் முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் மணமக்களை வாழ்த்தி பேசினர்.

திமுகவின் பொதுச்செயலாளர் துரைமுருகன் இல்லத்திலேயே பார்ப்பனர்கள் சமஸ்கிருத மந்திரம் ஓத நடத்தப்பட்ட இந்த திருமண நிகழ்ச்சிக்கு திமுகவிலேயே எதிர்ப்பு எழுந்துள்ளது. சமூக வலைதளங்களில் வெளிப்படையாகவே இதை விமர்சனமாகவும் முன்வைத்துள்ளனர்.

திமுக முன்னாள் எம்.பி. டாக்டர் செந்தில்குமார் தமது எக்ஸ் பக்கத்தில், “மேடைகள் தோறும் சுயமரியாதை திருமணங்களை பிரகடனப்படுத்திய கொள்கை பிடிப்புள்ள கழகத்தில், அதனை கடைபிடிக்க கூடிய வாய்ப்பினை தவறவிட்டதில் தனிபட்ட முறையில் உடன்படவில்லை” என பதிவிட்டிருந்தார்.

திமுக கலை இலக்கியப் பகுத்தறிவுப் பேரவையின் சென்னை தெற்கு மாவட்ட துணை அமைப்பாளர் வழக்கறிஞர் தடா ஓ. சுந்தரம் தமது ஃபேஸ்புக் பக்கத்தில் இதை குமுறலாகவே கொட்டி இருக்கிறார். தடா ஓ. சுந்தரத்தின் ஃபேஸ்புக் பதிவு: பொதுச் செயலாளர் துரைமுருகன் இல்ல மணவிழா! ஒரு வேளைக்கான உலக நாட்டு உணவு வகைகளின் பட்டியல்!
திராவிட இன மக்களை இழிவு படுத்தி, சூத்திரன் என அடிமைப் படுத்திய கேவலம் துடைக்கப்பட , ஒரு தன்மான உணர்வூட்ட, தந்தை பெரியார் உருவாக்கிப் பரப்பிய ஆரிய வேத மறுப்புத் திருமணமான சுய மரியாதைத் திருமண முறையைச் சட்டம் ஆக்கிய பேரறிஞர் அண்ணா தொடங்கிய திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர், முன்னாள் அமைச்சர், நமது மாண்புமிகு துரைமுருகன் அவர்களின் மகன், கழக நாடாளுமன்ற உறுப்பினர் திரு.கதிர் ஆனந்த் அவர்களின் மகள் திருமண விழா, சென்னை, ஆர்,.கே. மண்ட பத்தில் சிறப்பாக, ஆரிய வேத மந்திரங்கள் ஒலித்திட,’பிறாமண வேதியர்கள்’ சூழ்ந்திட நடந்தேறியது.
மணவிழா வரவேற்பு நிகழ்ச்சியில், பல்வேறு உலக நாடுகளின் உணவு வகை களின் பெயரும், எந்தெந்த நாடுகள் என்ற பட்டியலும் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன! பேரறிஞர் அண்ணா, நாவலர் நெடுஞ்செழியன், இனமானப் பேராசிரியரான
க.அன்பழகன் ஆகிய திராவிடர் இயக்கக் கொள்கைச் சான்றோர்கள் பொறுப்பு வகித்த திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் பொறுப்பில் உள்ள அண்ணன் துரைமுருகன், தமது இல்லத்துத் திருமண விழாவை,ஆரிய வேத ‘பிறாமணர்’களைக் கொண்டு நடத்தியது கழகக் கொள்கைக்கு எதிரானது என்பதை மிகுந்த வேதனையுடன் சுட்டிக் காட்டுகிறோம்.
எளிய தொண்டர்கள், இந்து மதப் பழக்க வழக்கங்களில், ஆன்மீக நம்பிக்கை களில் பற்றுக் கொண்டவர்கள் தமது இல்ல நிகழ்வுகளில் ஆரிய வேத முறைத் திருமண நடப்புகளைக் கடைப்பிடிப்பது என்பதே கூட விமர்சனத்திற்கு ஆட்பட்ட நிலையிலே, இன்று தேவாரம், திருவாசகம் போன்ற பக்திப் பாடல்கள், திருக்குறள் ஆகியன நம் தமிழ்ப் பெரியோர்களால் பாடி, மணவிழாக்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இதற்கான தமிழ்த் திருமணப் பாட முறைகள் வகுக்கப்பட்டு, சென்னையை அடுத்துள்ள காட்டாங்கொளத்தூர் SRM பல்கலைக் கழகத்தில் கற்பிக்கப்பட்டு வருவதுடன், பல நாட்டுத் தமிழ் மாணவர்களும் பட்டங்கள் பெற்று வருகின்றனர்.
இந்த நூற்றாண்டில் கூட, மதுரை மீனாட்சி அம்மன் கோவில் குட முழுக்கு உட்பட, பல கோவில்களில் தமிழ்ப் பக்திப் பாடல்கள் பாடுவதற்கு ‘அவாள்’ எதிர்ப்புத் தெரிவித்து நீதிமன்றம் வரைசென்று தாய்த் தமிழுக்கு எதிராக, பஞ்சகச்சத்தை இறுக்கி கட்டி, குதியாட்டம் போடுகின்றனர்.
இப்படியான சூழலில், தமிழர்களின் அரசியல், கலை, பண்பாடு, வரலாறு, மொழி இவற்றின் பாதுகாவல் அரணாகத் திகழும் திராவிட முன்னேற்றக் கழகத்தைக் கட்டிக் காத்த அறிஞர் அண்ணா,’ மானமுள்ள சுயமரியாதைக்காரன்’ என அறிவித்த முத்தமிழ் அறிஞர் தலைவர் கலைஞர் ஆகியோரின் தன்மான நிலைக்கு எதிராக, கழகத்தின் பொதுச் செயலாளரே நடந்து கொண்டது, திராவிடரியக்கக் கருத்துகளை இளைஞர் களிடம் கொண்டு சேர்ப்பதை கேள்விக்கும், கேலிக்கும் உரியதாக்கிவிட்டதே எனும் கவலையோடு, ‘நெற்றிக் கண் திறப்பினும் குற்றம் குற்றமே’எனச் சுட்டிக் காட்டுகிறோம்!

திராவிட இயக்க தமிழர் பேரவையின் செயலாளர் பேராசிரியர் சுப. வீரபாண்டியன் இன்று தமது எக்ஸ் பக்கத்தில், “என் பெருமதிப்பிற்குரிய -என்னிடம் பேரன்பு காட்டும் – திமுகழகத்தின் பொதுச்செயலாளர், அண்ணன் துரைமுருகன் இல்லத் திருமணத்தில் பார்ப்பனர்களின் சமஸ்கிருத மந்திர ஒலி கேட்டு, இப்போதும் வலிக்கிறது என் இதயம்!” என பதிவிட்டுள்ளார்.

திராவிடர் விடுதலை கழகப் பொதுச்செயலாளர் விடுதலை க. ராசேந்திரன் தமது ஃபேஸ்புக் பக்கத்தில், “புரோகித பார்ப்பனர்களின் வேத மந்திரம் முழங்க அஷ்டலட்சுமிகள் வரவேற்க திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அவர்களின் பேத்திக்கு “விவாஹ சுப முகூர்த்தம்” ஷேமகரமாய் மங்களத்துடன் தேவாதி தேவர்களின் அருள் ஆசியுடன் நடந்து முடிந்து இருக்கிறது. இந்த “கன்னிகாதானத்”தை நேரில் ஆசீர்வதிக்க அண்ணாவும் கலைஞரும் இல்லையே என்று துரைமுருகன் அவர்களின் இதயம் கண்ணீர் வடித்திருக்கும்.
அண்ணா இருந்திருந்தால் ” நான் கொண்டு வந்த சுயமரியாதை திருமண சட்டத்தையே இப்படி அவமதிக்கிறாயே! நீ தான் எனக்கு தம்பியா?” என்று நிச்சயம் கேட்டிருப்பார்.
கலைஞர் இருந்திருந்தால் “வடமொழியான சமஸ்கிருதத்தை எதிர்த்து நான் எவ்வளவு எழுதி இருப்பேன்; பேசி இருப்பேன் ; அதை நீ தேவ பாஷை என்று ஏற்றுக்கொண்டு உன் வீட்டு திருமணத்தில் ஓத வைத்திருக்கிறாயே; இதுதான் நீ எனக்கு காட்டும் மரியாதையா?” என்று உரத்த குரலில் கேட்டிருப்பார்.
அண்ணாவும் கலைஞரும் “உனக்கு அதிகாரத்திற்கு வருவதற்கு மட்டும்தான் நாங்கள் தேவை; கொள்கைக்கு வேண்டாமா?” என்று நிச்சயமாக கேட்டிருப்பார்கள்.
ஒரு கழகத்தின் பொதுச் செயலாளராக இருந்து கொண்டு கழகத்திற்கு ஊறுவிளைவிக்கும் என்று தெரிந்திருந்தும், கொள்கை உணர்வுள்ள கழகத் தோழர்கள் இதை ஏற்க மாட்டார்கள். என்பதை உணர்ந்திருந்தும், இப்படி ஒரு வைதீகக் கூத்தை அரங்கேற்றியே தீருவேன் என்று பிடிவாதம் பிடித்து நிகழ்த்திக் காட்டிவிட்டார் தமிழை “உயிர்மூச்சாக “க் கொண்டு வாழும் மதிப்புக்குரிய துரைமுருகன்.
அவரிடம் பெரியார் கொள்கையை நாம் நிச்சயமாக எதிர்பார்க்கவில்லை.
அண்ணா, கலைஞர் கொள்கைகளுக்காவது துரோகம் செய்யாமல் இருந்திருக்கக் கூடாதா?
அவர்களின் வழியாக கிடைத்த அதிகாரத்தை ஆரியத்திடம் அடமானம் வைப்பது வரலாற்றுத் துரோகம் அல்லவா? என்ற கேள்வியை திராவிட இயக்க கொள்கைப் பற்றாளர்கள் ஒவ்வொருவரும் கேட்கத்தான் செய்வார்கள். கட்சி கட்டுப்பாட்டை மீறியவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கும் அறிவிப்பை ஒவ்வொரு நாளும் “முரசொலி”யில் துரைமுருகன் தான் அறிவித்து வருகிறார். இப்போது துரைமுருகன் அவர்கள் செய்திருப்பது கழகக் கட்டுப்பாட்டை காப்பாற்றும் செயல் தானா?” என கேள்வி எழுப்பி உள்ளார்.

திமுக திண்டுக்கல் மேற்கு மாவட்ட முன்னாள் துணை செயலாளர் எரியோடு பெ.ஜீவா தமது ஃபேஸ்புக் பக்கத்தில், மரியாதைக்குரிய கழக பொதுச்செயலாளர், … பெரியார்… அண்ணா… கலைஞர்… உடனிருந்தவர் என்ற பெருமை எதற்கு உங்களுக்கு!!! இடி மின்னல் மழை… என்ற வரிசையில் கழகத்தில் பயணித்த உங்களுக்கு வயது மூப்பால் தடுமாறலாம், கொண்ட கொள்கையில் தடுமாற்றம் வந்துவிட்டதே நியாயமா அண்ணா, கழகத்தில் அனுபவ பயணத்தின் மூத்த முன்னோர் தேவை என்றுதானே நம்தலைவர் தளபதி அருகே அமர்த்தி ஆலோசனைகளையும் கலந்தார், கொள்கை கோட்பாடுகளை வேதயாகத்தில் எரித்தது திருமிகு துரைமுருகன் இல்ல விழாவில் அல்ல அங்கு திமுக வின் பொதுச்செயலாளர் லட்சியம் எரிந்ததற்காக தான் பதறுகிறோம்.. ஆறுமாததிற்க்கு முன்பு வாள் கேடயம் என வஞ்சக பாசையை வாழ்நாள் முழுக்க பேசும் பேசிய விசசொற்களை விலைக்காக எப்படியும் பதிவு செய்துவரும் கழக துரோகத்திற்க்காண நீண்ட வரலாறுக்கு சொந்தகாரரை கழகத்தின் பொதுசெயலாளர் தாங்கள் அழைத்தது அந்த துரோக வாள் உதித்த வார்த்தை நீங்கள் படிக்கவில்லையா அல்லது உங்களுக்கு ஏதோ ஆறுதல்… தாலாட்டாக தோன்றியதோ!!! பார்பனியத்தையும் துரோகத்தையும் எப்படி உறவாக கூட்டுறவாக வைத்தது தவறு..தவறு.. நெற்றிகண் திறப்பினும் குற்றம் குற்றமே…. என்றும் கலைஞரின் தொண்டனின் நானும் ஒருவன்” என பதிவிட்டுள்ளார்.

இதே போல தமிழ்த் தேசிய இயக்கத்தினரும் இடதுசாரியாளர்களும் சமஸ்கிருத மந்திரம் ஓத நடத்தப்பட்ட இந்த திருமணத்தை விமர்சித்துள்ளனர். தமிழக ஒடுக்கப்பட்டோர் விடுதலை இயக்க நிர்வாகியும் பாவலரேறு பெருஞ்சித்திரனாரின் மகனுமாகிய பொழிலன் தமது ஃபேஸ்புக் பக்கத்தில், “திமுகவின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அவர்களின் இல்லத் திருமணம்” என்ற தலைப்பில், :ஆரியப் பார்ப்பனர்களை வைத்துத் திருமணம் செய்து கொள்ளலாம் என்று திமுக அறிவித்து விடுவது நல்லது.. இல்லை, அது தவறு என்று சொன்னால் திமுகவின் பொதுச் செயலாளர் துரைமுருகன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.. தங்களால் ஏற்க முடியாத கொள்கைகளை எதற்கு வெளியே பேச வேண்டும்.. கொள்கையில் வலிமை இல்லாமல் போனால் பாசிசப் பார்ப்பனியத்தை வெல்ல முடியாது.. மற்ற கட்சிகள் அவ்வாறு கொள்கையளவில் இல்லை என்று சுட்டிக்காட்டுகிற திமுக தன்னுடைய கட்சித் தலைவர்களைச் சரியான கொள்கை நோக்கச் செயற்பாடுடையவர்களாக வரையறை செய்ய வேண்டுமா இல்லையா? ஊழல் செய்து பணம் சுருட்டுவது எந்த அளவு தவறானதோ அதற்குக் கொஞ்சமும் குறையாதது, ஏற்றுக்கொண்ட கொள்கைக்கு நேர்எதிராகத் தன் வாழ்வியலை அமைத்துக் கொள்வது.. திமுகவின் தலைமைதான் விடை சொல்ல வேண்டும்” என பதிவிட்டுள்ளார்.

மார்க்சியரான மார்க்ஸ் பாண்டியன் தமது ஃபேஸ்புக் பக்கத்தில், “சனாதன எதிர்ப்பு என்பது பார்ப்பன மேலாண்மை, சடங்கு, சம்பிரதாயங்களை புறந்தள்ளி கைவிடுவது…ஊருக்குதான் திமுக உபதேசமா? பொதுச்செயலாளரே இப்படி என்றால்…”என கேள்வி எழுப்பி உள்ளார். இத்தகைய பதிவுகளை முன்வைத்து சமூக வலைதளங்களில் விவாதங்களும் நடைபெற்று வருகின்றன.
அதேபோல பாஜக மற்றும் ஆதரவு இயக்கத்தினர் பலரும், “இதுதான் உங்க திராவிட கொள்கையா? திராவிடம் பல்லிளித்த காட்சி” என துரைமுருகன் வீட்டு திருமணத்தில் சமஸ்கிருத மந்திரங்களை பிராமணர்கள் ஓதும் வீடியோக்களை பதிவிட்டு விமர்சித்தும் வருகின்றனர்.









