புதுக்கோட்டையில் ரூ.23 கோடியில் கட்டப்பட்டுள்ள பேருந்து நிலையத்தை முதலமைச்சர் விஜய் இன்று திறந்து வைத்தார்
புதுக்கோட்டையில் அரசு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக, முதல்வர் ஜோசப் விஜய் இன்று காலை சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் புறப்பட்டு திருச்சி விமான நிலையம் வந்தடைந்தார்.
அவருக்குத் திருச்சி மாவட்ட நிர்வாகம் மற்றும் அமைச்சர்கள் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. விமான நிலையத்தின் நுழைவாயில் பகுதியில் தவெக முக்கிய நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் திரண்டு முதலமைச்சருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
பின்னர் முதலமைச்சர் ஜோசப் விஜய், அங்கிருந்து பலத்த பாதுகாப்புடன் சாலை மார்க்கமாகப் புதுக்கோட்டைக்குப் புறப்பட்டுச் சென்றார். முதல்வர் வருகையை முன்னிட்டு விமான நிலையம் மற்றும் திருச்சி – புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
புதுக்கோட்டை மாவட்ட எல்லையான மாத்தூரில் அவருக்குத் தவெகவினர் சிறப்பு வரவேற்பு அளித்தனர். விராலிமலை சட்டமன்றத் தொகுதிக்குள் இந்தப் பகுதி வரும் நிலையில், முன்னாள் அமைச்சரும் மேற்கு மாவட்ட தவெக செயலாளருமான சி. விஜயபாஸ்கர் ஏற்பாட்டில் முதல்வருக்குச் சிறப்பு வரவேற்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதனைத் தொடர்ந்து, சுமார் ஒன்றரை மணி நேரப் பயணத்திற்குப் பிறகு புதுக்கோட்டைக்குச் சென்ற முதல்வரை அமைச்சர்கள் ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, முகமது பர்வேஷ் ஆகியோர் வரவேற்றனர். மேலும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜோதிமணி, நவாஸ் கனி, துரை வைகோ ஆகியோரும் முதல்வருக்கு வரவேற்பு அளித்தனர்.
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முதல்வர் விஜய்க்கு காவல்துறை அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. அங்கு வைக்கப்பட்டிருந்த பாரம்பரிய பயிர் வகைகள், முந்திரி மற்றும் தானிய வகைகளை முதல்வர் பார்வையிட்டார்.
மேலும், புதுக்கோட்டையில் முடிவுற்ற பணிகளைத் திறந்து வைத்த முதல்வர் விஜய், புதிய பணிகளுக்கும் அடிக்கல் நாட்டினார். ரூபாய் 11.72 கோடி மதிப்பிலான புதிய திட்டங்களுக்கு முதல்வர் விஜய் அடிக்கல் நாட்டிய நிலையில், புதுக்கோட்டையில் ரூபாய் 23 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள புதிய பேருந்து நிலையத்தையும் திறந்து வைத்தார்.
மேலும் 104 பயனாளர்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா, வங்கிக் கடன் உதவிகள், டிராக்டர்கள், வேளாண் கருவிகள், கல்விக்கடன் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.









