டாஸ்மாக் நிர்வாகத்தைச் சூழல் உருவானால் தனியாரிடம் ஒப்படைப்பது குறித்தும் பரிசீலிக்க முடியும் என்று மதுவிலக்குத் துறை அமைச்சர் விக்னேஷ் எச்சரித்துள்ளார்.
கோவை குறிச்சிக் குளத்தை இன்று (நவம்பர் 2) மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் விக்னேஷ் ஆய்வு மேற்கொண்டார். பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்த அவர் தெரிவித்ததாவது:
“கடந்த டாஸ்மாக் அமைச்சரைப் போலச் செயல்பட்டிருந்தால் இப்போது பிரச்சினை வந்திருக்காது. இந்தத் துறையில் நிறைய கசிவுகள் (Leakage) இருக்கின்றன. இதைச் சரி செய்ய வேண்டும் என்று சொல்லித்தான் பொறுப்பைக் கொடுத்தார்கள். துறையைச் சீரமைக்க நடவடிக்கைகள் எடுத்து வருகின்றோம்.
இதனால்தான் கடந்த 6 மாதத்தில் 5 முறை போராட்டங்கள் நடந்துள்ளன. டாஸ்மாக்கில் விற்பனையாகும் பாட்டில்களில் 50 சதவீதம் மட்டும்தான் திரும்பு பெறப்படுகின்றன. ஆனால், கடந்த ஆட்சியில் 99 சதவீதம் பாட்டில்கள் திரும்பப் பெறப்படுவதாக நீதிமன்றத்தில் தெரிவித்து இருந்தனர்.
பார்ட்டி பண்டை விட அதிக தொகை இதில் சென்றிருக்கின்றது. இந்த பாட்டில் விவகாரத்தில் பெரிய ‘லாபி’ இருக்கின்றது. தமிழகத்தில் நடந்த மிகப்பெரிய முறைகேடு இந்த பாட்டில் முறைகேடுதான். டாஸ்மாக் கடைகளில் பாட்டில்களைத் திரும்பப் பெற இயந்திரங்கள் வாங்கப்பட உள்ளன. 4,800 டாஸ்மாக் கடைகளின் முன்பும் பாட்டில்களைத் திரும்பப் பெற இயந்திரங்கள் வைக்கப்பட உள்ளன. அப்போது இந்தப் பிரச்சினைகள் குறையும்.
டாஸ்மாக் ஊழியர்களுக்கு ரூ. 14,000 ஆக இருந்த ஊதியத்தை ரூ. 33,000 ஆக உயர்த்தியிருக்கிறோம். வார விடுமுறை, மாதத்தில் 2 நாள் விடுமுறை, சீருடை, பண்டிகைக் கால முன்பணம், மருத்துவக் காப்பீடு எனப் பல நன்மைகளைச் செய்திருக்கின்றோம்.
இந்நிலையில் நேற்று வேலைநிறுத்தம் காரணமாகப் பரபரப்பு நிலவியது. இதனால் 10 லட்சம் பேர் ரூ. 150-ஐச் செலவு செய்யாமல் வீட்டில் கொடுத்திருப்பது தனிப்பட்ட முறையில் எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது.
பாட்டிலைத் திரும்பப் பெற வாங்கப்படும் ரூ. 10 இனி எம்.ஆர்.பி. (MRP) விலையிலேயே சேர்க்கப்படும். இனி அந்தத் தொகை மட்டும்தான் வசூலிக்கப்படும்.
டாஸ்மாக் ஊழியர்கள் வேலைநிறுத்தம் செய்யக் கூடாது எனக் கேட்டுக்கொள்கின்றேன். ஊழியர்கள் உடனடியாகப் பணிக்குத் திரும்ப வேண்டும். இந்த விவகாரத்தில் ஒரு பெரிய குழு பின்னணியில் செயல்பட்டு, ஊழியர்களை மூளைச்சலவை செய்து போராடத் தூண்டுகிறது. டாஸ்மாக் கடையைத் திறக்காமல் இருக்கும் ஊழியர்கள் மீது அரசு கடுமையான நடவடிக்கை எடுக்கும்; சட்ட நடவடிக்கை நிச்சயமாகப் பாயும்.
நேற்று போராட்டத்தில் ஈடுபட்ட 960 பேருக்கு நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது. கடைகளைப் பூட்ட மற்றவர்களை வற்புறுத்திய 4 பேர் பணியிடை நீக்கம் (Suspend) செய்யப்பட்டுள்ளனர். மேலும், டாஸ்மாக்கிற்குக்கூடுதலாகத் தற்காலிகப் பணியாளர்கள் நியமிக்கப்பட இருக்கின்றனர். டாஸ்மாக் கடைகள் இன்று திறக்கப்படவில்லை என்றால், மாற்றுப் பணியாளர்களை வைத்து கடைகளைத் திறப்போம். பார் டெண்டர் வெளியிட்டவுடன், எங்கெல்லாம் பார்கள் இருக்கின்றன என்ற பட்டியல் வெளியிடப்படும்.
தனியாருக்கு மதுக்கடைகளைக் கொடுப்பது குறித்தும் ஆலோசித்து வருகின்றோம்; அதை இல்லை என்று மறுக்கவில்லை, அதையும் பரிசீலித்து வருகின்றோம். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஏன் தனியாரிடம் இருந்த மதுக்கடைகளை அரசுடைமையாக்கினார் என்ற சூழலையும் பார்க்க வேண்டியிருக்கிறது. மதுக்கடைகள் தனிநபர் கையில் சிக்கிவிடும், சிண்டிகேட் அமைத்து விடுவார்கள் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். இதனால் தனியார்மயமாக்கல் மட்டுமே தீர்வு ஆகிவிடாது. மதுக்கடை விவகாரத்தில் அரசு உரிய நடவடிக்கைகளை எடுக்கும். தீபாவளிக்கு விற்பனை இலக்கு எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை.” என்றார்.
இந்நிலையில் இன்றும் சென்னை மற்றும் நெல்லையில் பல்வேறு டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.









